தாங்க முடியாத அளவுக்கு வயிறு வலிக்கிறதா? இதோ தீர்வு!

மாதவிடாய் வலியைத் தாங்கமுடியாமல் மருத்துவரிடம் செல்லும் பெண்களுக்கு, Steroidal Anti-inflammatory Drugs (ASAID) என்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
தாங்க முடியாத அளவுக்கு வயிறு வலிக்கிறதா? இதோ தீர்வு!

மாதவிடாய் சுமையல்ல... சுகமே..! 

மாதவிடாய் வலியைத் தாங்கமுடியாமல் மருத்துவரிடம் செல்லும் பெண்களுக்கு, Steroidal Anti-inflammatory Drugs (ASAID) என்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சில பெண்கள் தாங்களாகவே, சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடை செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. மேலும் ibuprofen, paracetomal, naproxen, aspirin போன்ற மாத்திரைகளை தற்காலிக வலி நிவாரணியாகவும் எடுத்துக் கொள்வதுண்டு. இவையனைத்தும் அந்த நேரத்தில் மட்டும் வலியை நிவர்த்தி செய்யுமே தவிர, மாதவிடாய் வலியை முழுவதும் நீக்குவதுடன், உடலுக்கு புத்துணர்வையும், ஆற்றலையும் தரவல்லவையல்ல. 

மேலும், இவற்றால் எதிர்வரும் மாதவிடாய் சுழற்சியில் தொடர்ச்சியின்மை, கருப்பை கோளாறுகள் என்று பக்கவிளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் ஒரு வித பயத்துடன், மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களே ஒத்துக்கொள்வதும் வேடிக்கையான விஷயம்தான். 
உணவுமுறை மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றுக்கு அடுத்ததாக மாதவிடாய் வலியைப் போக்குவதற்குப் பெண்கள் கடை பிடிப்பது, ஒத்தடம். இதைத்தவிர, மிதமான சுடுநீர் குளியல், அக்குபஞ்சர் மருத்துவம், யோகாசனப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் மிதமான உடற் பயிற்சிகள். மேலும், மாதவிடாய் வயிற்றுவலிக்கு சில பெண்கள் ஒத்தடம் தருவதுடன், கிராம்பு, சோம்பு, ஆலிவ், பாதாம், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் தடவி மசாஜ் செய்வது வழக்கத்திலிருக்கும் ஒன்றாகும்.

தினந்தோறும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை வலியுடன் சிரமப்படும் அந்த நாட்களில் செய்யமுடியாது என்று கூறும் பெண்கள் அடுத்ததாகக் கையிலெடுக்கும் விஷயம் ஒத்தடம் கொடுக்கும் முறையைத்தான் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

முன்னரெல்லாம், குழந்தைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி, ஊசி போட்ட பின்பு, சூடான சாதத்தை ஒரு மெல்லிய துணியில் கட்டி, ஒத்தடம் கொடுப்பது நடைமுறை பழக்கமாக இருந்து வந்தது. தற்போது வெந்நீர், ஐஸ்கட்டி என்று தேவைக்குத் தகுந்தபடி மாறிவிட்டாலும், பழைய முறையைப் பின்பற்றுபவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல், மாதவிடாய் வயிற்றுவலி வந்த பெண்களுக்கு, வெதுவெதுப்பான நீர், சூடான சாதம், தாங்கக்கூடிய அளவிற்கு வெந்நீர் நிரப்பப்பட்ட ரப்பர் பைகள் போன்றவற்றை உபயோகப்படுத்தி அடிவயிற்றின் மேலும், சுற்றிலும் ஒத்தடம் கொடுக்கும் பழக்கம் இன்றளவும் நல்லதொரு தீர்வினைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. 

கால், கை, முதுகு வலிகளுக்கு வெப்பத்தை உபயோகித்து ஒத்தடம் கொடுப்பதுபோல், மாதவிடாய் வயிற்று வலிக்கும் வெப்பத்தை உபயோகித்து ஒத்தடம் கொடுப்பதால், மற்ற அனைத்து செயல்களையும் விட நிவாரணம் நன்றாகவே இருப்பதாகவும் ஆய்வு அறிக்கைகள் தங்களது முடிவை பதிவு செய்துள்ளன. ஒத்தடம் கொடுப்பதற்குக் கூட சில நுட்பங்களும் வழிமுறைகளும் உள்ளன என்றும் கூறப்படுகிறது. சுமார் 40 டிகிரி அல்லது 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 1 செ.மீ ஆழத்திற்கு வெப்பம் ஊடுருவுமாறும், தோலுக்கு மேல், அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கும் போது, மாதவிடாய் வலி குறைவதாகவும், மாதவிடாய் வலிக்கு உள்ளான பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல், FIR தொழில்நுட்பம் என்றளவில், Far infrared ray என்ற அலைக்கதிர்களை உமிழும், Fir ceramic powder  மாதவிடாய் வலியை நீக்குவதற்கு தற்போதைய நாட்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த FIR செராமிக் பவுடரானது, அலுமினியம் ஆக்ஸைடு, பெர்ரிக் ஆக்ஸைடு, மக்னீசியம் ஆக்ஸைடு மற்றும் கால்சியம் கார்பனேட் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். சுமார் 15x70 செ.மீ அளவுள்ள பட்டையில் (பெல்ட்) பூச்சப்பட்ட இந்த பூச்சு, 10.16 அலைக்கதிர்களை 3 -16 மைக்ரோ மீட்டர் அலைநீளத்தில் உமிழ்கின்றன. இப்பட்டையை மாதவிலக்கின் அனைத்து நாட்களிலும் அடிவயிற்றில் சுற்றிக்கொள்வதன் மூலம் மாதவிடாய் வலி குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

மாதவிடாய் நாட்களை சுமையாக நினைக்க வேண்டாமே!

திருமணமான பெண்களுக்கு, மாதவிடாய் எதிர்கொள்வதில் சிறிது அனுபவமும், உடல் உறுதியும் இருப்பதால், அவர்கள் ஓரளவிற்குத் தாக்குப்பிடித்துக் கொள்கிறார்கள். கல்லூரி மாணவிகளோ, தோழிகளின் ஆலோசனைகள் மற்றும் உதவிகளின் மூலம் எப்படியோ அந்த மூன்று நாள் சிக்கல்களைக் கடந்து விடுகிறார்கள். ஆனால், இதில் மிகவும் சிரமத்திற்குள்ளாவது 13 வயது முதல் 17 வயது வரையுள்ள பருவமடைந்த, பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளே. இவர்கள் பூப்படையும் நிகழ்வையும் எதிர்கொள்ளத் தெரியாமல், மாதம் ஒரு முறை ஏற்படும் இந்த சுழற்சிக்கும் பக்குவத்தைப் பெறாமல் குழப்பமடைந்திருக்கும் ஒரு மனநிலையில் இவர்களுக்கு ஏற்படும் இந்த மாதவிடாய் வலி என்பது, மரணவேதனை என்றும், மன உளைச்சலுக்கு முதல் காரணம் என்றும் பல பருவப் பெண்களால் எரிச்சலுடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். 

பொதுவாக, மாதவிடாயின்போது, பெண்களுக்கு நீர்க்கோர்வை அல்லது உப்பு நீர் கோர்த்தல் என்கிற எடிமா (edema) ஏற்படுவது சாதாரணம்தான். இதற்குக் காரணம், அந்நேரங்களில், உடல் சற்றே உப்பியது போலவும், முகத்தில் மினுமினுப்பும் அதிகரித்தாற்போல் காணப்படும். பருவப்பெண்கள், குறிப்பாகக் கல்லூரி மாணவிகள் இந்நிலையை ஏற்றுக் கொண்டு பக்குவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுண்டு. இதற்குக் காரணம், மாதவிடாய் நாட்களில் தாங்கள் அழகாகவும் வசீகரமாகவும் இருப்பதுபோலவும் உணர்வதுதான். சில பெண்கள், சாதாரண நாட்களை விட, மாதவிடாய் நாட்களில் இரண்டு மூன்று முறைகள் குளிப்பது, தலைகுளிப்பது, வாசனைப் பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களின் மூலம், தங்களை சற்று அதிகமாகவே சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்துக் கொள்வார்கள். இது அவர்களுக்கு புதிய சந்தோஷத்தையும், புத்துணர்வையும் அளிக்கும். 

ஆனால், இதற்கு மாறாக, மாதவிடாய் வயிற்றுவலி அதிகமாக இருக்கும் பருவப்பெண்கள் அல்லது நடுத்தர வயதுப் பெண்கள், மாதவிடாய் வரப்போகிறது என்றாலே எரிச்சலடைவதும், தங்களுடைய உடல் மிகவும் அசுத்தமாக அல்லது அருவருப்பாக இருப்பதாக உணர்வதும், ஒருவித துர்நாற்றம் அடிக்குமோ என்ற கவலையடைவதும் அவர்கள் இந்த மாற்றத்தை மனதார ஏற்றுக்கொள்வதற்கு முக்கிய தடைக்கற்களாக இருக்கின்றன. இதனுடன் சேர்ந்து, கை கால் குடைச்சல், தலைவலி, குமட்டல், உடல்சோர்வு, பயத்துடன் கூடிய ஒருவிதமான அசாதாரணநிலை ஆகியவற்றால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி, முன்பு கூறிய அந்த மகிழ்ச்சியான நிலையில் தங்களை வைத்து கொள்ள முடியாமல் பலவிதமான நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். 

இவையனைத்திற்கும் காரணம், உடலில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததும், மாதவிடாய் நாட்களில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், உடல் ஆரோக்கியத்தை அந்த நாட்களில் சீராக வைத்துக் கொள்ள என்னென்ன சத்துக்கள் தேவை என்று தெரிந்து கொள்ளாமலிருப்பதும், மாதவிடாயின்போது எவ்வாறு தங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாமலிருப்பதும்தான். இவற்றைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு பருவப் பெண்ணுக்கும் மாதவிடாய் என்பது சுமையான நாட்களாக இல்லாமல் சுகமான நாட்களாகவே இருக்கும்.

ப. வண்டார்குழலி இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com