Enable Javscript for better performance
ayurveda varmam and yoga- Dinamani

சுடச்சுட

  

  ஆயுர்வேதம், வர்மம், யோகா மூன்றையுமே பரிந்துரைக்கும் மருத்துவர் இவர்!

  Published on : 24th June 2019 03:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  k3

  ஒரு மருத்துவர் வேறு ஒரு வகையான மருத்துவத்தை தனது நோயாளிக்கு பரிந்துரைக்க மாட்டார். ஆனால் மருத்துவர் மதிவாணன் ஆயுர்வேதம், வர்மம், யோகா இந்த மூன்றையுமே பரிந்துரைக்கிறார். 

  "என்னிடம் வரும் நோயாளிகளுக்காக நான் பல்வேறு மருத்துவத்துறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்று கூறும் இவர், இந்த மூன்று மருத்துவ துறைகளையும் ஒன்றாகச் சேர்த்து "ஆயுர் வர்ம யோக மருத்துவம்' என்று பெயரிட்டு அழைக்கிறார். அந்தப் பெயருக்கான காரணத்தையும் அவரே கூறுகிறார்:

  "ஆயுர்+வேதம்=ஆயுளை ஆரோக்கிய வழியில் வளர்க்கும் அறிவியல். கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இது இன்றைய நவீன அறுவைச் சிகிச்சையின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. வர்மம் என்று சித்த வைத்தியத்திலும், மர்மம் என்று ஆயுர்வேதத்திலும் அறியப்படும் இந்த மருத்துவமுறை, உலகிலேயே மிகவும் பழமையான மருத்துவ முறையாகும்.

  குழந்தை பிறந்ததும் முதுகில் ஒரு தட்டுத் தட்டி அதன் சுவாச மண்டலத்தைச் சீராக்குவோமே அதுவே நமக்கு தரும் முதல் வர்ம சிகிச்சையாகும். மேலும் யோகாசன முறைகளும், முத்திரைகளும் சேரும்போது சிகிச்சையின் பலன் மேலும் உயர்ந்து, நாம் அரோக்கியமாக இருக்க உதவும்.  ஆயூர்வேதத்தின் மூலம் நாடி அறிந்து, மருந்து கொடுத்து, வர்மம் மூலம் புதைந்து கிடக்கும் ஆற்றலை இயக்கி, யோகாசன முத்திரைகள் மூலம் தோசங்களைச் சம நிலைக்குக் கொண்டு வருவதே இந்த ஆயுர் வர்ம யோக மருத்துவமாகும்.

  "நான் மருத்துவக் கல்வி முடிந்து, பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு கைகளைத் தூக்க முடியாமல் ஒருவர் வர, நான் வழக்கமாக பரிந்துரைக்கும் மருந்துகள், மற்றும் ஒத்தடம் கொடுத்தும் பெரிதாக எந்தப்பலனும் இல்லை. என் தந்தை சித்த மருத்துவப்பேராசிரியர். மரு. பரமேஸ்வர ஐயாவிடம் நண்பரின் நிலையைச் சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே சில வர்மப் புள்ளிகளையும், அதன் இயக்க முறைகளையும், ஒரு சில முத்திரைகளையும் என்னிடம் சொல்லி, "ஒரு வாரத்திற்குப் பிறகு பார்'' என்று கூறினார்கள். 

  அவர் சொன்ன வழியில் நான் சென்று சிகிச்சையைத் தொடங்கிய மூன்றே நாளில் 80 சதவீதம் குணமடையக் கண்டு என் தேடலை இந்த மருத்துவ முறையிலும் தொடர்ந்தேன். இன்னுமொரு நோயாளியின் பூஞ்சையினால் கிட்டதட்ட அழிந்த நகத்தைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று என் தந்தையிடம் நான் யோசனை கேட்க, அதற்கும் வர்மப் புள்ளிகளைக் கூறி இயக்கும் முறையையும் சொல்ல, அதையே பின்பற்றி அந்த நகத்தையே அந்த நோயாளிக்கு காப்பாற்றிக் கொடுத்தேன். நமது முன்னோர்கள், சித்தர்கள் எல்லாம் வெறும் ஞானிகள் மட்டும் அல்ல, மருத்துவ மாமேதைகள் என்று அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து என் சிகிச்சை முறைகள் முற்றிலும் மாறிவிட்டன.

  நம்மில் பலர் எண்ணம் எல்லாம் Acute problem என்று சொல்லப்படும், உடனடித் தீர்வு காணவேண்டிய பிரச்னைகளுக்கெல்லாம் ஆயுர் வர்ம முறையில் தீர்வு இல்லை என்று நினைப்பதுதான். இந்த எண்ணத்தை மாற்றவே காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், அஜீரணம், மூச்சடைப்பு போன்ற உடனடிப் பிரச்னைகளுக்கெல்லாம், நாங்கள் ஆயுர் வேத முறையில் சிகிச்சை செய்து குணமாக்குகிறோம். மேலும் நாட்பட்ட பிரச்னைகளான, மூட்டு வலி, கழுத்தெலும்பு, தேய்மானம், L4 L5 டிஸ்க் பிரச்சனைகள், ஹார்மோன், சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னை, முடி கொட்டுதல், தாம்பத்திய பிரச்னைகள் போன்ற எல்லாவற்றிற்கும் இந்த ஆயுர் வர்ம யோக மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கிறோம். 

  இங்கு இரண்டு விதமான அனுபவங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறட்டையினால் ஒரு தம்பதியினர் ஒன்றாகப் படுக்க முடியவில்லை. நான் வர்மப் புள்ளிகளை இயக்க, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, போயே போய்விட்டது. ஒரு சிறுவனுக்கு 24 மணி நேரமும் காதுகளில் இரைச்சல். அதற்கும் நான் சிகிச்சை அளித்து சில வர்மப் புள்ளிகளை சமநிலைக்கு கொண்டு வர மூன்றாவது முறை வரும் போது இரைச்சல் இல்லை என்று சொல்ல நான் மகிழ்ந்தேன். 

  உலகிலேயே சிறந்த வைத்தியன் வேறு யாரும் இல்லை. நம்மிடம் ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான். அதை முறையான ஆற்றல் மூலம் தூண்டி தோஷங்களை சமநிலைப்படுத்துவதே ஆயுர் வர்ம யோக மருத்துவமாகும்'' என்றார். 
  சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai