சுடச்சுட

  
  hip-pain


  எனது மனைவிக்கு 63 வயதாகிறது. கடந்த மாதம் பொங்கலன்று தரையில் குனிந்து கோலம் போட்டு நிமிரும் போது இடுப்பு பிடித்துக் கொண்டு சரியான வலி எடுத்துள்ளது. அதற்குப் பின் கடந்த நான்கு வாரங்களாக உடலின் இடது பகுதியில் இடுப்பில் இருந்து கால் பாதம் வரை வலி அதிகமாக உள்ளது. சில அடிகள்தான் நடக்க முடிகிறது. சில நொடிகள்தான் நிற்க முடிகிறது. பின் வலி அதிகமாகிவிடுகிறது. பின்பு கண்டிப்பாக உட்கார அல்லது படுக்க வேண்டியுள்ளது. நாற்காலியில் உட்கார்ந்த பிறகு வலி சிறிது குறைகிறது. ஆனாலும் தொடந்து ஒரு மணிக்கு மேல் உட்காருவது மிகவும் சிரமமாயுள்ளது. பல மணி நேரம் படுத்து இருக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் வலி குறைகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன?

  -ரவி, சென்னை.

  இடுப்பிலுள்ள முதுகுத் தண்டுவட எலும்புகளை தாங்கி நிற்கக் கூடிய வில்லைகளின் பிதுக்கல், உயரம் குறைதல், அவற்றினுள்ளே உள்ள நீர்ப்பசை வற்றுதல், அவற்றைச் சுற்றியுள்ள நரம்பு மண்டலங்களில் அவை ஏற்படுத்தும் அழுத்தம், தண்டுவட உட்புற விட்டம் குறைதல், தண்டுவட எலும்புகளின் ஏற்படும் உராய்வு, அப்பகுதிகளிலுள்ள தசைகள் காய்தல் போன்ற சில காரணங்களால் கால்களின் பின்புற வழியாகச் செல்லும் நரம்புகள் பாதிப்படைந்து கடும் வலியை ஏற்படுத்தக் கூடும். இது போன்ற பாதிப்பிலுள்ள நபரால், கீழே மல்லாந்து படுக்க வைத்து, கால்களை தூக்கச் சொன்னால் வலியை பின் தொடை வழியாக உணர்ந்து, கால்களை முழுவதுமாகத் தூக்க முடியாமல் வேதனைப்படுவார்.

  இடுப்பிற்குப் போதுமான அளவு ஓய்வு தராமல் குனிந்து அதிக வேலை செய்தல், தரையில் அமர்ந்து முன்பக்கமாகக் குனிந்து காய்கறி நறுக்குதல், செய்தித்தாள் வாசித்தல், கோலம் போடுதல், கட்டில், மேஜை போன்றவற்றை இழுத்தல், இருக்கையில் அமர்ந்து கால்களை நீட்டி, மேஜையின் மேல் போட்டு அமர்தல், ஒரு கால் மீது மறு காலை போட்டு அமர்தல், குளிர்ந்த நீரில் நின்று கொண்டே துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், ஏஸி அறையில் படுத்துறங்குதல், படுத்தால் நன்கு அமிழ்ந்திடும் படுக்கையில் படுத்தல், உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு உப்புச்சுவையைக் குறைவாகவும் எடுத்துக் கொள்ளுதல், சிறுதானிய வகை பருப்புகளை விரும்பிச் சாப்பிடுதல் போன்ற சில காரணங்களால் இந்த உபாதை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

  இடுப்பின் கீழ்ப் பகுதியிலுள்ள எலும்பு, வில்லை, தசை நார்கள், நரம்புகளிலுள்ள நீர்க்கட்டு ஏதேனும் இருப்பின், ஓய்வு எடுத்து எழும் போது வலி கூடுதலாகத் தெரியும். அது போன்ற நிலையில் அந்த நீர்க்கட்டு வற்றிப் போகும்அளவுக்கு, மூலிகைப் பொடிகளால் வெது வெதுப்பாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். பொடியை பந்து போல் ஒரு துணியில் கட்டி, தவாவில் சூடாக்கி ஒத்தடம் கொடுத்தல் நலம். இதைக் காலை உணவிற்கு முன், சுமார் ணீ அல்லது தீ மணி நேரம் செய்து கொள்ளலாம். மாலையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன் மூலிகைத் தைலங்கள் சிலவற்றை நீராவியில் சூடாக்கி துணியால் முக்கி, இடுப்பில் ஊற வைக்க வேண்டும். எண்ணெய்ச் சிகிச்சை செய்து கொள்ளும் போது, ஏஸி மின்விசிறி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சுமார் இரண்டு வாரங்கள் இதைத் தொடர்ந்து செய்து வர, வலியானது குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  இடுப்பில் வலி உள்ள இடத்தை MRI SCAN செய்து பார்த்தால் பிரச்னை என்ன என்பது மிகத் தெளிவாகத் தெரியும். "கடிவஸ்தி" எனும் சிகிச்சை முறை நன்கு பயனளிக்கக் கூடியது. வலி உள்ள இடுப்பைச் சுற்றி, உளுந்து மாவினால் வரம்பு கட்டி, அதனுள் மூலிகைத் தைலங்களைக் கலந்து வெது வெதுப்பாக, இடுப்புப் பகுதியில் ஊற்றி, சுமார் 25 - 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு, எண்ணெய் மற்றும் வரம்பை அகற்றி, மூலிகை வேர்களால் சூடாக்கப்பட்ட தண்ணீரை, இடுப்புப் பகுதியில் நீராவிக் குளியல் பண்ணுவது, இடுப்பை மட்டும் வலுப்படுத்தும் விஷயமல்ல, ஒரு சிறந்த வலி நிவாரணியுமாகலாம். ஆஸன வாய் வழியாக குடலை வலுப்படுத்தும் எண்ணெய் வஸ்தியும், குடல் காற்றை வெளியேற்றும் கஷாய வஸ்தியும், நல்ல சிகிச்சை முறைகளாகும்.

  ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய சஹசராதி, மஹாராஸ்னாதி, சப்தசாரம், குக்குலுதிக்தகம், போன்றவை, மஹாயோகராஜ குக்குலு, கந்ததைலம், பலாதைலம் போன்ற மருந்துகளுடன் மருத்துவருடைய நேரடி ஆலோசனையின்படி சாப்பிடக் கூடிய தரமான மருந்துகள். குடல் வாயுவை அகற்ற கூடிய விளக்கெண்ணெய் மருந்துகள் சூடான பாலுடன் கலந்து சாப்பிட, வாயுவை நன்கு வெளியேற்றி இடுப்பு வலியையும் நன்கு குறைக்கக் கூடியவை.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
  செல் : 94444 41771

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai