உங்கள் முக அழகைக் கெடுக்கும் அளவுக்கு பருக்கள் தொல்லையா? இதோ தீர்வு!

மனிதர்களுடைய ரத்தம் இனிப்புச் சுவையுடையதாகவும், சிறிது உப்புச் சுவையுடன் கூடியதாகவும்,
உங்கள் முக அழகைக் கெடுக்கும் அளவுக்கு பருக்கள் தொல்லையா? இதோ தீர்வு!

என் மகளின் வயது 17. பிளஸ்- 2 படிக்கிறாள். கடந்த மூன்று வருடங்களாக பருக்கள் தொந்தரவு உள்ளது. தோல் சுருங்கிவிட்டது. வறண்டும் விட்டது. பருவில் சீழ்பிடித்து அமுங்கி புண்ணாக உள்ளது. பருக்கள் உள்ள இடம் சிவப்பாக உள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

  -ந. குருபரன், ஆசிரியர்,   போடி நாயக்கனூர்.

மனிதர்களுடைய ரத்தம் இனிப்புச் சுவையுடையதாகவும், சிறிது உப்புச் சுவையுடன் கூடியதாகவும், சிறிது குளிர்ச்சியும் சிறிது சூடும் கொண்ட தன்மையுடையதாகவும், கட்டி போல இறுக்கமில்லாமல் நீர்த்ததாகவும், செந்தாமரை, தங்கம், செம்மறியாடு மற்றும் முயலினுடைய ரத்தத்தைப் போல சிவந்த நிறமாகவும் இருந்தால், அதை சுத்தமான ரத்தமாகக் குறிப்பிடலாம்' என்று வாக்படர் எனும் முனிவர் கூறுகிறார்.

இது போன்ற சுத்தமான ரத்தம்,  பித்தத்தையும் கபத்தையும் அதிகரிக்கக் கூடிய உணவுகளாலும் செயல்களாலும் கெட்டுவிடுவதாக அவர் மேலும் கூறுகிறார். ரத்தம் கெட்டுவிட்டால், விஸர்ப்பம் (ஸ்ரீங்ப்ப்ன்ப்ண்ற்ண்ள்), சீழ்க்கட்டிகள், மண்ணீரல் வீக்கம், குல்மம் எனும் வாயுபந்து போல உருண்டு வயிற்றினுள் தங்கி அசைவுடனோ, அசைவில்லாமலோ இருத்தல், பசியின்மை, காய்ச்சல், வாய், கண், தலை சார்ந்த உபாதைகளைத் தோற்றுவித்தல், மதம்பிடித்தல், தண்ணீர் தாகம், வாயில் உப்புச் சுவையை உணர்தல், தோல் உபாதைகள், ரத்தவாதம், ரத்தபித்தம், எரிச்சலுடன் கூடிய திகட்டல், புளிப்பு திகட்டல், தலைசுற்றல் போன்ற உபாதைகளை தோற்றுவிக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

பகலில் படுத்துறங்குதல், உடல் உழைப்பில்லாத சோம்பலான வாழ்க்கை முறை, சோம்பேறித்தனம், இனிப்பும், புளிப்பும், உப்புச் சுவையும் தூக்கலாக உள்ள  பேல்பூரி, பானிப்பூரி, சமோசா வகையறாக்கள், குளிர்ந்த, நெய் அதிகம் சேர்ந்த தின்பண்டங்கள், செரிப்பதில் கடினமானவை, வழுவழுப்பு அதிகமுடைய வெண்ணெய், வனஸ்பதி, எண்ணெய் கலந்த பொருட்கள், குடல் பகுதியில் கொசகொசப்பை அதிகரிக்கக் கூடிய பன் பட்டர், ஜாம், சீஸ், ஜிகர்தண்டா, கேக், ரொட்டிகள், உளுந்து, கோதுமை, எள்ளு, அரிசிமாவில் வெல்லம் கலந்த பணியாரம், தயிர், பால், பச்சைப்பயறுடன் வேக வைக்கப்பட்ட அரிசி பாயசம், கரும்புச்சாறு, நீர்ப்பாங்கான பிரதேசங்களைச் சார்ந்த மிருகங்களின் கொழுப்பு ஆகியவற்றின் அதிக சேர்க்கையால், உடலில் கபம் எனும் தோஷத்தின் வளர்ச்சியானது கூடுகிறது.

அடிக்கடி கோபப்படுதல், வருத்தப்படுதல், பயப்படுதல், உடலின்  சக்திக்கு மீறிய வேலை செய்தல், பட்டினியிருத்தல், செரிமானத்தின் போது வயிற்றில் எரிச்சலைக் கிளப்பக் கூடிய வற்றல் குழம்பு, காரக்குழம்பு, ஊறுகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், காரம், புளி, உப்புச் சுவையில் அதிக நாட்டம், துளைத்து செல்லக் கூடியதும், சூடானதும், எளிதில் செரிப்பதுமாகிய நல்லெண்ணெய், கொள்ளு, கடுகு, மீன், ஆடு, தயிர், மோர், தயிர்தெளிவு, பழைய கஞ்சி, புளிப்பான பழங்கள் ஆகியவற்றால் பித்த தோஷம் சீற்றமடைகிறது.

நெருப்பினருகில் சென்று அதிகம் வேலை செய்தல், வெயிலில் செல்ல வேண்டிய நிர்பந்தம், செரிமானக் கோளாறு, ஒவ்வாமை உணவு ஆகியவற்றால் ரத்தம் கெட்டுவிடக் கூடும்' என்று ஸுஸ்ருதர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

மேற்கூறிய காரணங்களால், கப - பித்த - ரத்தங்களின் கேடானது ஏற்பட்டு, முகத்தில் பருக்களைத் தோற்றுவிக்கிறது. காரணமில்லாமல் காரியமில்லை என்ற கூற்றிற்கு ஏற்ப, உங்களுடைய மகள் மேற்கூறிய காரணங்களில் எதை அதிகம் பயன்படுத்துகிறாரோ, அவற்றைத் தவிர்க்க பழகிக் கொள்ள வேண்டும். தவிர்க்கப் படாமல் அவை தொடர்ந்தால் முகத்தின் மென்மையையும் உருண்டு மேடுபள்ளமில்லாமல் வசீகரத்தையும் அளிக்க உதவும் கொழுப்பு கோளங்களில் அழற்சி ஏற்பட்டு சிறிய சினப்புகளை ஏற்படுத்தும். லேசாகத் தினவு ஏற்படும். இந்தத் தினவை சொறிந்தாலோ, நகங்களாலும் விரல் நுனிகளாலும், நிரடினாலோ, முகம் விகாரமடைந்து விடும், பருக்களிலுள்ள வெண்மையான கொழுப்பு வெளியேறி அந்த இடம் வடுவாகி நிலைத்துவிடும். அதை நிரடாமல் விட்டுவிட்டால், தானே அந்தக் கொழுப்பு சமநிலையேற்றுச் சரியாகிவிடும்.

கப - பித்த - ரத்தங்களின் கெடுதிகளை அகற்றக் கூடிய படோலகடுரோஹிண்யாதி, ஆரக்வதாதி, குடூச்யாதி, திக்தகம், மஹாதிக்தகம் போன்ற கஷாயங்களில் ஒன்றிரண்டை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சில நாட்கள் சாப்பிடலாம். உடற்காங்கை தணிய மாதம் ஒரு முறையாவது லேசான பேதிக்குச் சாப்பிடுவது நல்லது. உலர்திராட்சை, பிஞ்சுக்கடுக்காய், கறிவேப்பிலை இம் மூன்றும் சேர்த்துக் காய்ச்சிய கஷாயம் பேதிக்குச் சாப்பிட நல்ல மருந்தாகும்.

விபூதிப் பச்சிலை, ஸப்ஜா, திருநீற்றுப் பச்சிலை இப்பெயர்களில் ஒரு செடி தோட்டமுள்ள வீடுகளில் வளரும். இதன் கதிர் நல்ல மணம் தரும். இதன் இலையையோ கதிரையோ நன்கு கசக்கிச் சாற்றைப் பருக்களின் மேல் அடிக்கடி தடவி வர,  பருவின் வேதனைகள் அகலும். சந்தனக் கட்டையை கல்லில் தேய்த்து சூடு ஆறுவதற்கு முன்னரே பருக்களின் மீது தடவி வர, பருக்கள் வாடிவிடும். அதன் பிறகு, குங்குமாதி லேபம், சந்தனாதி தைலம், தூர்வாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை முகத்தில் தடவிவர, தேமல், மங்கு, கருமை, பரு போன்றவை மறைந்துவிடும். இது போன்ற தைலங்களால் முகச் சதையில் தேய்த்து, சதையைப் பிடித்து விடுவது மிகவும் நல்லது.

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com