முழங்கை - தோள்பட்டை அறுவைச் சிகிச்சை: பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டி கையேடு வெளியீடு

முழங்கை, தோள்பட்டை அறுவைச் சிகிச்சைகள் குறித்த பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டி கையேடு சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.


முழங்கை, தோள்பட்டை அறுவைச் சிகிச்சைகள் குறித்த பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டி கையேடு சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
முழங்கை, தோள்பட்டை அறுவைச் சிகிச்சைக்கான இந்திய சங்கமும், பிரிட்டன் சங்கமும் இணைந்து நடத்தும் இரு நாள் மருத்துவ மாநாடு, சென்னை மியாட் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
முதல் நாளில், பல்வேறு தலைப்பிலான அமர்வுகள், குழு விவாதங்கள், ஆய்வு உரைகள்  நடைபெற்றன. முன்னதாக, பிரிட்டனில் கடைப்பிடிக்கப்படும் அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய வழிகாட்டி கையேட்டை  பிரிட்டன் துணைத் தூதர் ஜெரிமி பில்மோர் - பெட்ஃபோர்டு வெளியிட்டு பேசுகையில், இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக இரு நாட்டு நல்லுறவும் மேம்படும் என்றார்.
இது குறித்து, இந்திய முழங்கை - தோள்பட்டை  சிகிச்சை சங்கத்தின் தலைவரும், மியாட் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராம் சிதம்பரம் கூறியதாவது:
உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியே சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன என்ற விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது. அதேவேளையில், முழங்கை மற்றும் தோள்பட்டை பிரச்னைகளைப் பொருத்தவரை அவற்றுக்கு பொதுவான முடநீக்கியல் மருத்துவம் மட்டுமே உள்ளதாகக் கருதுவது தவறு. முழங்கை மற்றும் தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கென இந்தியா முழுவதும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சங்கம் இயங்கி வருகிறது. புதிய தொழில்நுட்பத்திலான பரிசோதனைகள், ஆராய்ச்சி மருத்துவம், நவீன அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை அச்சங்கத்தின் கீழ் உள்ள மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி, பிரிட்டனில் உள்ள முழங்கை - தோள்பட்டை  நிபுணர்களுடன் இணைந்து இந்திய மருத்துவர்கள் பல்வேறு அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
அதன் ஒருபகுதியாகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது .மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு அதுதொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் அந்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது என்றார் அவர். இதில் உள்நாடு மற்றும் பன்னாட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் 300 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com