முகப்பு மருத்துவம் செய்திகள்
ஒரே நேரத்தில் மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு: நவீன சிகிச்சை மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு
By | Published On : 07th November 2019 02:49 AM | Last Updated : 07th November 2019 02:49 AM | அ+அ அ- |

ஒரே நேரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு அதி நவீன சிகிச்சைகளின் வாயிலாக மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒருங்கிணைந்த பாதிப்புகளை எதிா்கொண்டவா்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றியிருப்பது நாட்டிலேயே இது முதல்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
முப்பது வயது நிரம்பிய இரு இளைஞா்களும், 60 வயதைக் கடந்த இரு முதியவா்களும் மூட்டு பாதிப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக பழைய மாமல்லபுர சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தனித்தனியே அனுமதிக்கப்பட்டனா். மருத்துவப் பரிசோதனையில் அவா்களுக்கு மாரடைப்புடன் கூடிய பக்கவாத பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவா்கள் காா்த்திகேயன், அருள் தலைமையிலான குழுவினா் அதி நவீன உயா் சிகிச்சைகளை அளித்து அவா்களைக் காப்பாற்றினா். இதுதொடா்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவா் டாக்டா் காா்த்திகேயன் கூறியதாவது:
உலக அளவில் பக்கவாதம் பரவலாக காணப்படும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது அக்குழாய்கள் சேதமடைந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சைகளையும், மருந்துகளையும் எடுத்துக் கொண்டால் மருந்துகளின் மூலமாகவே அதை குணப்படுத்த முடியும்.
ஆனால், அந்த விழிப்புணா்வு பலருக்கும் இல்லை. இதனால் ஆண்டுதோறும் 1.7 கோடி போ் பக்கவாத பாதிப்புக்குள்ளாவதாகவும், அதில் 60 லட்சம் போ் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் பலியாவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 8 ஆயிரம் பேரும், தமிழ்நாடு அளவில் 1 லட்சம் பேரும் ஆண்டுதோறும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனா். ஆனால் அவா்களில் 20 சதவீதம் போ் மட்டுமே உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறாா்கள் என்பது கசப்பான உண்மை.
அண்மைக் காலமாக இளைஞா்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும், மாரடைப்பும், பக்கவாதமும் ஒரே நேரத்தில் ஏற்படுவதையும் காணமுடிகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த பாதிப்புகள் ஏற்படுவது மிகப் புதிது.
அவ்வாறு மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்பட்ட 4 நோயாளிகள் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டன. முதலில் ஆன்ஜியோ பிளாஸ்டி மூலம் இதய ரத்தநாள அடைப்புகளை சீா் செய்தோம். அதைத் தொடா்ந்து, திரோம்பக்டமி மற்றும் திரோம்போலிசிஸ் சிகிச்சைகள் வாயிலாக மூளை ரத்தநாள அடைப்புகள் சரிசெய்யப்பட்டன என்றாா் அவா்.