குழந்தைகளுடைய பேச்சுத் திறனை மேம்படுத்த இது உதவும்

எனது பேரன் வயது 6. பள்ளியில் படிக்கிறான் சுமார் 1 வருடமாக பேசும் போது திக்கித் திக்கி பேசுகிறான்.  
குழந்தைகளுடைய பேச்சுத் திறனை மேம்படுத்த இது உதவும்

எனது பேரன் வயது 6. பள்ளியில் படிக்கிறான் சுமார் 1 வருடமாக பேசும் போது திக்கித் திக்கி பேசுகிறான்.   நாங்கள் பல மருத்துவரிடம் காண்பித்து தலையை ஸ்கேன் செய்து பார்த்ததில் நரம்புக் கோளாறு ஏதும் இல்லை என்றும் நாளடைவில் சரியாகிவிடும் என கூறுகின்றனர். மனவேதனையாக உள்ளது. ஒரு முறை அவனுக்கு ஒரு வாரம் காய்ச்சல் வந்தது அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா எனவும் யோசிக்கிறோம். இந்த பிரச்னைக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளதா?   

வட.பழனி, குரோம்பேட்டை, சென்னை.  


மூளையைத் தன் இருப்பிடமாக அமைத்துக் கொண்டு செயல்படும் பிராணன் என்று வாயுவின் பல செயல்களில் ஒரு முக்கிய செயலாகிய பேச்சுத்திறன், தங்களுடைய பேரனுக்கு சிறப்பாக செயலாற்றவில்லையோ? என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. மார்பில் குடி கொண்டிருக்கும் உதானன் என்ற வாயுவின் பல செயல்களில் ஒன்றான சொல் திறனை ஊக்குவிக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறது. அதனால் பிராண - உதான வாயுக்களின் செயல்திறனைப் பெற   சீரான பேச்சுப் பயிற்சியின் மூலமாகவும், மருந்துகளின் துணையோடும்  உங்கள் பேரன் பெறும் வரை தொடர்ந்து முயற்சிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

குழந்தைகளுடைய பேச்சுத் திறனை மேம்படுத்தும் வகையில் இன்று பல நவீன மருந்துவமனைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாலையில் பள்ளி முடிந்து வீடு வந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் இம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க நீங்கள் முயற்சிக்கலாம். ஒரு சில ஆயுர்வேத மருந்துகளையும் இப்பயிற்சி காலத்திலேயே உள்ளுக்குக் கொடுத்து வந்தால், நல்ல மாற்றங்களை மூளையில் ஏற்படுத்தி, திக்குவாய் பிரச்னையைத் தீர்க்க முற்படலாம்.

ஸாரஸ்வத சூரணம் எனும் மருந்தை 3 கிராம் அளவில் எடுத்து, அதற்கு இரு மடங்காக தேனும், சூரணத்திற்குச் சம அளவாக பிராம்மீ கிருதம் எனும் நெய் மருந்தை உருக்கிச் சேர்த்து, அனைத்தையும் நன்றாகக் குழைத்து காலை, இரவு உணவிற்கு நடுவே சிறிது சிறிதாகப் புகட்டி வர, அது பிராண - உதான வாயுக்களின் செயல் திறனை மேம்படுத்தி, திக்கித் திக்கிப் பேசும் பிரச்னையைக்  குணமாக்க நல்ல வாய்ப்ப்பிருக்கிறது.

மூளையைச் சார்ந்த உபாதையாக இது இருப்பதால், தலைக்கு பிராம்மீ தைலத்தை, நெற்றிப் பொட்டு, உச்சந்தலை ஆகிய பகுதிகளில் இதமாகத் தேய்த்து அரை மணி ஊறிய பிறகு, சூடு ஆறிய தண்ணீரால், அந்த எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற சீயக்காய் தூளைக் கரைத்துப்  பயன்படுத்தலாம்.

உணவு நன்கு செரிமானமாகிறதா? அதன் சத்து நன்றாக உள்வாங்கப்படுகிறதா? என்பதையும் நன்றாக அறிந்து கொள்வது நலம். வெண்ணெய், நெய், பால், தேன் போன்றவற்றைச் சமச் சீராக உணவில் சேர்த்து அதைப் பேரன் சுவைத்துச் சாப்பிடும் வகையில் தயாராக்கிக் கொடுக்க வேண்டியது குடும்பத்தாரின் கடமையாகும். இவற்றால் மூளை நன்கு வலுப்பெற்று சுறுசுறுப்பாகச் செயல்படும்.

மூளைக்குத் தேவையான அளவு பிராண வாயுவைக் கொண்டு செல்லும் வகையில் சில யோகாசனப் பயிற்சிகளையும், பிராணயாமப் பயிற்சிகளையும் நல்ல யோக ஆசானிடமிருந்து கற்றறிந்து அவற்றைத் தொடர்ந்து பேரனுக்குச் சொல்லிக் கொடுத்து,   செய்யச் செய்வதன் மூலமாகவும் பேரனின் பிரச்னையைத் தீர்க்கலாம்.

சம வயதுடைய நன்றாகப் பேசக் கூடிய குழந்தைகளுடன் விளையாட விடுவதையும்,  அவர்களுடன் அடிக்கடி பேசுவதையும் செய்ய வைத்தால், அதன் வாயிலாகவும் பேச்சுத்திறன் சீராக வர வாய்ப்பிருக்கிறது.

உடலெங்கும் லாக்ஷôதி குழம்பு எனும் தைலத்தைத் தடவி, தலைக்கு பிராம்மீ தைலத்தைத் தடவி, அரை -முக்கால் மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளிப்பாட்டி,  பத்திய உணவுகளின் விவரத்தை உடல் தன்மைக்கு ஏற்ப கூறுவதும், தலப்பொதிச்சல் எனும் மூலிகைகளை அரைத்து தலையில் பற்று இடுவதுமாகிய சிறப்புச் சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்வது, குழந்தைகளின் பல உபாதைகளையும் குணப்படுத்தும் சிறப்பான சிகிச்சைமுறைகளாகும்.

தற்சமயம் பல ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிவந்துள்ள மூலிகை டானிக் மருந்துகள் சிறு பிள்ளைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் இருப்பதால், அவை பற்றிய விவரம் ஆயுர்வேத மருத்துவர்களிடமிருந்து அறிந்து அவற்றையும் பயன்படுத்தி குணம் காண முயற்சிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com