Enable Javscript for better performance
Is Incense Stick Smoke Harmful For Health | சிகரெட் புகை போன்றே ஊதுபத்திப் புகையும் ஆபத்தானது: ஆய்வு- Dinamani

சுடச்சுட

  
  oothupathi

   

  இந்திய வழிபாட்டு முறைகளைப் பொறுத்தவரை, மணி அடிக்காமல், ஊதுபத்தி (தீபம் மற்றும் தூபக் குச்சிகளை) காட்டாமல் தெய்வங்களுக்கு எந்த பூஜையும் ஒருபோதும் நிறைவடைவதில்லை.  ஆனால் ஊதுபத்திப் புகைக்கும், சிகரெட் புகைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று.

  கோடிக் கணக்கான ஹிந்துக்கள், பத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் காற்றை சுத்திகரிக்கவும், நறுமணத்துக்காகவும், புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்கும் ஊதுபத்தி, அகர்பத்தி, கம்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்ட பல வாசனைப் பொருட்களைப்  பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்களின் பண்டிகைகளிலும் விழாக்களிலும் இவையெல்லாம் இன்றியமையாத பகுதியாகும்.

  ஆனால் இன்னொரு ஊதுபத்தியை ஏற்றி வைப்பதற்கு முன்பு நீங்கள் இருமுறை யோசிக்க வேண்டியதன் காரணம் ஒன்று உள்ளது. அதிலும் நீங்கள் புகைப்பிடிக்காதவர் என்று பெருமிதம் கொண்டால். பல ஆய்வுகளின்படி, நீங்கள் சிகரெட் புகைப்பதை விட ஆபத்தான ஒன்றினை உங்கள் நுரையீரல் சுவாசிக்கக் கூடும். அது வேறு எதுவும் இல்லை ஊதுபத்தியின் புகைதான்.

  பாரம்பரியம் மிக்க ஊதுபத்திகளில் அப்படி என்ன ஆபத்து ஏற்படக்கூடும் என்றுதானே நினைக்கிறீர்கள். 

  இதற்கான பதிலை சீன ஆய்வாளர்கள் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளனர். சீனாவில் உள்ள சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஊதுபத்தி புகையை சுவாசிப்பதன் மூலம், நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் புற்றுநோயின் அபாயத்தில் சிக்கலாம் என்றார்கள்.
   
  தென் சீன தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய அந்த ஆய்வில் - மிகவும் பொதுவான இரண்டு வகை ஊதுபத்திகளைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். அவை அகர்பத்திகள் மற்றும் சந்தனம்.  காரணம் இவற்றில் அபாயகரமான ரசாயனங்கள் ஏராளமாக கலந்திருப்பதாகவும் அவை அப்படியே சிகரெட் புகையில் இருக்கும் ரசாயனங்களை ஒத்து இருப்பதாகவும் அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஊதுபத்தி புகையில் கலந்திருக்கும் மிக நுண்ணிய சாம்பல் துகள்கள், மூச்சுக்காற்று வழியே உள்ளே சென்று உடலுக்குள்ளேயே தங்கிவிடுகிறதாம். நுரையீரலுக்குள் தங்கும் இந்தப் புகை எரிச்சல் உண்டாக்குவதுடன், அதிலிருக்கும் பலவகையான மூலப்பொருட்கள் மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிய வந்திருக்கிறது. 

  தி க்விண்டின் எனும் சஞ்சிகையின் கூற்றுப்படி, அதிகப்படியான தூபப் புகை மனப் பிறழ்வு (செல் மட்டத்தில் டி.என்.ஏ மாற்றங்களை ஏற்படுத்துகிறது), ஜெனோடாக்ஸிக் (புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மரபணு மாற்றங்களை ஏற்படுத்துகிறது) மற்றும் சைட்டோடாக்ஸிக் (இது உங்கள் உயிரணுக்களைக் கொல்லும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டது) உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிகரெட் புகைப்பதை விட இத்தகைய புகைகள் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.
   
  அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் ஜர்னலில் மற்றொரு ஆய்வு, இந்த ஊதுபத்தி புகைகளை நீண்ட காலமாக சுவாசித்து வந்தால்,  சுவாசக்குழாயின் மேற்புறம் பாதிப்புக்குள்ளாகி புற்றுநோய்க்கான ஆபத்து அதிகமாகிறது என்று தி ஹெல்த் எனும் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

  மேலும் ஊதிபத்தியின் சாம்பல் அபாயகரமான துகள்களை உடையது. இதன் புகை ஆவியாகும் தன்மைகளைக் கொண்டுள்ளன, அவை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். இதிலிருந்து வெளியேறும் மாசுக்கள் மூச்சுக்குழாய் குழாய்களின் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன, அவை நுரையீரலுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். இது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் ஆஸ்துமா நோய்களை உருவாக்கிவிடும்.
   
  மேலும், இந்த அபாயகரமான புகை நுகர்வினால் ஒற்றைத் தலைவலி, தலைவலி மற்றும் மறதி உள்ளிட்ட நரம்பியல் பிரச்னைகளைத் தூண்டும் என்றும் கூறப்பட்டது.

  இதிலிருந்து தப்ப நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • ஊதுபத்திப் புகை நுரையீரலில் தீங்கு விளைவிக்கும் என்பதால், சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இருக்கும்போது, ​​இதை ஏற்றாமல் இருப்பது நல்லது.
  • அத்தியாவசியமாக சமயங்களில் மட்டுமே ஊதுபத்திகளை பயன்படுத்த வேண்டும், அதுவும் நல்ல காற்றோட்டம் உள்ள ஒரு பகுதியில் கொளுத்துவது நல்லது.
  • சுவாசப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் ஊதுபத்திப் பயன்பாடுகள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  எனவே, அடுத்த முறை சாமி கும்பிடுகையில், நீங்கள் ஊதுபத்திகளைக் கொளுத்தும்போது, ​​அவை கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட கடுமையான காற்று மாசுபாட்டை உருவாக்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai