Enable Javscript for better performance
புதைய- Dinamani

சுடச்சுட

  
  GettyImages-487332630_resized-450x400

  வழக்கமாக பள்ளியா அல்லது சந்தையா என சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் மிக அதிக சத்தத்துடன் இருக்கக் கூடிய பள்ளியில் அன்று குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் என்பது போன்ற அசாதாரண அமைதி நிலவியது. காரணம் புதிய தலைமை ஆசிரியர் அடிக்கடி வகுப்பு வராண்டாக்களில் சுற்றி நடந்து பார்வையிட்டுக் கொண்டிருந்ததும், அவரிடம் கெட்ட பெயர் வாங்கி விடக் கூடாதென ஆசிரியர்கள் போனில் பேசுதல், பிற ஆசிரியர்களிடம் அரட்டை அடித்தல், அந்த வகுப்பிற்கு தொடர்பற்ற வேறு வேலைகள் பார்த்தல் போன்றவற்றை எல்லாம்  விடுத்து  ஒழுங்காகப் பாடம் நடத்திக் கொண்டிருந்ததுமே  முக்கிய காரணம்..

  அப்படி வந்து கொண்டிருந்த போது ஒரு வகுப்பிலிருந்து மட்டும் சத்தம் வரவே ஜன்னலருகில் நின்று பார்த்தார் அறிவொளி. முன் இருக்கையில் இருக்கும்  சில மாணவர்கள் மட்டும் ஒழுங்காக வகுப்புத் தேர்வு எழுதிக் கொண்டிருக்க, பின் இருக்கை மாணவர்கள் பலரும் புத்தகத்தைப் பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்தனர். திடீரென கடைசி இருக்கையிலிருந்த  இரு மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர், ஒருவன்  மற்றவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது,    நடப்பது எதுவுமே தன்னை பாதிக்காததுபோல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அலைபேசியை   நோண்டிக்கொண்டிருந்த தமிழாசிரியர் ராஜாராம், ‘ஐயோ சார் இரத்தம்’, என்ற மாணவர்களின்  சத்தம் கேட்டு நிஜவுலகிற்கு மீண்டு வந்தார்.

  ரமேஷ் என்ற மாணவனின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதைக் கண்டு ‘என்னடா ஆச்சு?’ என அதிகாரத் தொனியில் மிரட்டினார். ‘கார்த்திக்கும்  விஷ்ணுவும்  காப்பி அடிச்சிக்கிட்டிருந்தாங்க  சார். உங்க கிட்ட சொல்லிடுவேன்னு சொன்னதுக்கு என்ன அடிச்சுட்டான் சார்’  என அவன் பக்கத்திலிருந்த கார்த்திக்கைக்    காட்டினான். உடனே  மூக்குடைந்த ரமேஷை வகுப்புத் தலைவனோடு  முதலுதவிக்காக  அனுப்பிவிட்டு கார்த்திக் விஷ்ணு இருவரையும் நோட்டை எடுத்துக் கொண்டு முன்னால்  வரச்சொன்னார். இருவரது நோட்டியிலும் ஒரே மாதிரியான பதில் ஒரே விதமான பிழைகளுடன் இருப்பது கண்டு காப்பி அடித்ததை உறுதி படுத்திக்கொண்டார்.

  ராஜாராம்: சொல்லுங்க, யாரு யாரைப் பார்த்து எழுதுனீங்க?

  இரண்டு பேருக்கும் பிரம்பு கொண்டு காலில் ஒரு அடி போட்டார். பின் கார்த்திக்கின் சட்டையை பிடித்து இழுத்து   மீண்டும் அடிக்க கைஓங்கினார். ஓங்கிய அவரது கையை பிடித்து தடுத்தான் கார்த்திக்.

  கார்த்திக் : சார் சும்மா அடிக்காதிங்க. நாங்க காப்பி அடிச்சதை  நீங்க பாத்தீங்களா? கிளாஸ் டைம்ல  போன்ல ஏதோ பண்ணிக்கிட்டிருந்தீங்க? உங்களுக்கு எப்படி நாங்க ஒழுங்கா எழுதினோமா இல்ல காப்பி அடிச்சோமான்னு   தெரியும்?

  ராஜாராம் : ஏண்டா, மொசப் புடிக்கிற நாயை மூஞ்சியப் பாத்தா தெரியாது? நீ எப்புடி படிப்பேன்னு எனக்குத் தெரியாதா? காப்பி அடிக்கிறதுமில்லாம என்னையே எதிர்த்து பேசுறியா? 

  ஆத்திரத்தில் கண்கள் சிவக்க   கார்த்திக்கைப்  பிரம்பு கொண்டு அடிக்க ஆரம்பித்தார். ‘மிஸ்டர். ராஜாராம்’ என்ற குரல் கேட்டு  திரும்பிப்  பார்த்தபோது தான் ஜன்னலருகே தலைமை ஆசிரியர் நிற்பதை கண்டு  அதிர்ந்தார் ராஜாராம். வகுப்பறையை விட்டு வெளியே வந்தவர் தலைமை ஆசிரியர் நடந்ததைப்  பற்றி  ஒன்றுமே சொல்லாமல் கார்த்திக்கையும் விஷ்ணுவையும்  என் அறைக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு  போவதைக் கண்டு இது புயலுக்கு முன் அமைதியோ எனக்  குழம்பினார். 

  அவர் சென்று சில நிமிடங்களில் பள்ளி அலுவலக ஊழியர் ஒரு சுற்றறிக்கையைக் கொண்டு வந்தார். அதில் ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியை காலை வந்ததும் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு மாலை வீட்டிற்குச் செல்லும் போது  எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களை கடும் வார்த்தைகளால் திட்டவோ, அடிக்கவோ  கூடாது, என்பது உள்ளிட்ட இருபது விதிமுறைகள் பட்டியலிடப்பட்டிருந்ததோடு அன்று மாலை பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களுக்கான கூட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்  படித்ததும் ராஜாராம்   கோபத்தில் சுற்றறிக்கையில்  கையெழுத்து போடாமல் அதைக் கொண்டு வந்தவரின் முகத்திலேயே விட்டெறிந்தார்.

  ராஜாராம் :  எங்கள என்ன இவர் வீட்டு வேலைக்காரங்கன்னு நெனச்சாரா? இவருக்கு யாரு இந்த அதிகாரத்தை கொடுத்தது?

  ஊழியர் :  உங்க கோபத்தை என்கிட்ட ஏன் சார் காட்டுறீங்க? முடிஞ்சா அவர் கிட்ட காட்டுங்க.

  (கீழே விழுந்த சுற்றறிக்கையை  எடுத்துக் கொண்டு அடுத்த ஆசிரியரை நோக்கிப் போனார்)

  ராஜாராம் : காட்றேன். நான் யாருனு அவருக்கு காட்றேன் .

  (கறுவிக் கொண்டே ஆசிரியர் ஓய்வறையை நோக்கிச் சென்றார்.)

  தலைமை ஆசிரியர் அறையில் அறிவொளி நாற்காலியில் அமர்ந்திருக்க கார்த்திக்கும் விஷ்ணுவும் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தனர்.

  அறிவொளி : என்ன விஷ்ணு, என்ன நடந்துச்சு?

  (விஷ்ணு  அமைதியாக இருக்கவே  கார்த்திக் பேச ஆரம்பித்தான்.)

  கார்த்திக்: சார் என்ன மன்னிச்சுடுங்க .எனக்குப்  பாடம் புரியாததால நான் படிக்கல. மார்க் கம்மியா எடுத்தா சார் அடிப்பாருனு   நான் தான் சார் காட்ட சொல்லி தொந்தரவு பண்ணேன். ஃப்ரெண்டாச்சே காட்டலேன்னா கோச்சிக்குவேனோன்னு நினச்சு அவன் காட்டிட்டான். தப்பு எம் மேல தான்.

  அறிவொளி : காப்பி அடிக்கிறது, காப்பி அடிக்க உதவுறது ரெண்டுமே தப்புதான். நீயா முன்வந்து   ஒத்துக்கொண்டது எனக்கு சந்தோசம். ஆனா கிளாஸ்ல சார் கேட்டப்போ ஏன் நீ ஒத்துக்கல ?

  கார்த்திக் : நீங்க கேக்குறது போல அவர் தனியா கூப்பிட்டு கேட்டிருந்தா ஒத்துக்கிட்டிருப்பேன் சார், எடுத்தவுடனே குச்சிய வெச்சு எல்லார் முன்னாடியும் அடிக்கிறவர்கிட்ட நான் ஏன் உண்மையை சொல்லணும், எதிர்த்து பேசணும்னு தான் தோணும். நான் காப்பி அடிச்சது தப்புன்னா அவர் கிளாஸ்ல  உக்காந்துக்கிட்டு  போன்ல வாட்ஸ் அப்  பாக்குறதும்  தப்பு தானே சார். அவர் ஒழுங்கா டெஸ்ட் வெச்சு ரவுண்ட்ஸ் வந்து காப்பி அடிக்காம பாத்துக்கலாம் இல்ல?   

  அறிவொளி : இதெல்லாம் சரி தம்பி, இப்ப நீ பத்தாவது படிக்குற, வகுப்புத்தேர்வுல எல்லாம் காப்பி அடிச்சுக்கிட்டிருந்தா கடைசியில என்னாகும் யோசிச்சியா?

  (ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தான்  கார்த்திக். அந்த ஒரு நிமிடமும் அதைத் தொடர்ந்து அவன் அறிவொளியுடன் பல நாட்கள் பேசிக் கற்றுக்கொண்ட பல விஷயங்களும் அவனது வாழ்க்கையை மாற்றி போட்டன)

  கார்த்திக் : பத்தாவது ஃபெயிலாகி நான்தான் வாழ்க்கையில கஷ்டப்படணும். சாரி சார், இனி நான் காப்பி அடிக்க மாட்டேன். ஆனா படிக்கணும்னு உக்காந்தாலும் எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது சார்.என்ன பண்றது?

  அறிவொளி : விஷ்ணு நீ சொல்லு இதுக்கு என்ன பண்ணலாம்?

  விஷ்ணு : சார், டெஸ்ட் நேரத்துல காப்பி அடிக்க உதவுறதுக்கு பதிலா தினமும் ஸ்கூல் முடிஞ்ச பிறகு ஒரு மணி நேரம் நான் இவனுக்கு சொல்லித்தரேன் சார்.

  அறிவொளி : வெரி  குட். பதிலுக்கு கார்த்திக் நீ உனக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை விஷ்ணுவுக்கு சொல்லிக் கொடு.

  கார்த்திக் : எனக்கு என்ன சார் தெரியும்? நான் தான் எதுக்கும் லாயக்கில்லை, சுத்த வேஸ்ட்டுனு எல்லாரும் சொல்றாங்களே.

  அறிவொளி : விஷ்ணு நீ கார்த்திக் கிட்ட கத்துக்க கூடிய நல்ல விஷயம் ஏதாவது இருக்கா?

  விஷ்ணு : ஓ! நிறைய இருக்கு சார். கார்த்திக் ரொம்ப தைரியமானவன் சார். இப்பக்கூட பாருங்க ராஜாராம் சார் பண்ற தப்பைக் கூட தைரியமா உங்ககிட்ட சொல்லிட்டான். எல்லோரையும் பேசியே கவுத்துடுவான் சார் . விவாதம்னு வந்தா இவனை பேசி ஜெயிக்க முடியாது. இவனை சுத்தி எப்பவும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். நல்லா பாட்டு பாடுவான். சமயத்துல எனக்கு பொறாமையா கூட இருக்கும்.  

  அறிவொளி : பாத்தியா கார்த்திக், உன்னோட பலம் உனக்கு தெரியல. ஆனா உன் பிரெண்டுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு. உலகத்துல யாருமே வேஸ்ட்  கிடையாது. நல்ல படிக்குறவங்க மட்டும் தான் வாழ்க்கையில பெரிய ஆளா ஆக முடியும்னு எல்லாம் எந்த சட்டமும் கிடையாது. மொத்தம் எட்டு விதமான அறிவுத் திறன் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் இதில் இரண்டு அல்லது மூணாவது இருக்கும். நம்ம பலம் என்ன பலவீனம் என்ன என்ற விழிப்புணர்வும், எதையும் கத்துக்கணும் என்ற ஆர்வமும், முயற்சியும் இருந்தாலே போதும். எல்லோராலும் சாதிக்க முடியும்.  

  கார்த்திக் :  சார், அது  என்ன சார் எட்டு விதமான அறிவுத்திறன்?

  அறிவொளி : இப்ப நேரமாச்சு, வகுப்புக்கு போய்ட்டு  நாளைக்கு வாங்க நான் சொல்றேன்.

  கார்த்திக் : சரிங்க சார்.

  (சந்தோஷமாக செல்லும் பிள்ளைகளை ரசித்தவாறே மாலை ஆசிரியர் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பது பற்றி சிந்திக்கலானார் அறிவொளி.)

  பிள்ளைகள் தவறு செய்யும் போது, தான் தவறு செய்கிறோம் என்பதை அவர்கள் உணரும்படி செய்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டுமென  அவர்களாகவே முடிவெடுக்கும்படியாக உதவி செய்வதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பணி . மாறாக அறிவுரை கூறுவதோ , திட்டுவதோ, அடிப்பதோ எவ்விதத்திலும் பயனளிக்காது.

   தேடலாம்….

  - பிரியசகி

  priyasahi20673@gmail.com 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai