ஆயுர்வேதத்தில் கண் நோய்க்கு மருந்து!

கழுத்திற்கு மேற்பட்ட, தொண்டை மற்றும் தலையைச் சார்ந்த உபாதைகளில் "நஸ்யம்' எனும் மூக்கினுள் மருந்து விடும் முறையே மிகவும் நல்லது
ஆயுர்வேதத்தில் கண் நோய்க்கு மருந்து!

எனது பேத்தியின் வயது 10. பிறந்த சில வருடங்களில் NYSTAGMUS-SQUINT EYES கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை தான் வழி என கண்மருத்துவமனையில் கருத்து கூறியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்தால் குணப்படுத்த இயலுமா?
-த. நாகராஜன், சிவகாசி.

கழுத்திற்கு மேற்பட்ட, தொண்டை மற்றும் தலையைச் சார்ந்த உபாதைகளில் "நஸ்யம்' எனும் மூக்கினுள் மருந்து விடும் முறையே மிகவும் நல்லது என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. தலைக்கு மருந்தை நேரடியாக எடுத்துச் செல்லும் ஒரே வழியானது மூக்கினுள் அமைந்துள்ள வெற்றிடப்பாதை என்பதாலேயே அதற்கு இத்தனை சிறப்பு. மூன்று வகையான நஸ்யப் பிரயோகங்களாகிய "விரேசனம்',  "ப்ரம்ஹனம்',  "சமனம்' ஆகியவற்றில் தங்களுடைய பேத்திக்கு எதைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துவது என்பதை மருத்துவரால் மட்டுமே கூற இயலும். இம்மூன்றிலும் ப்ரம்ஹணம் எனும் நஸ்யப்பிரயோகம் பற்றிய வர்ணணையில் - வாதத்தினுடைய ஆதிக்கத்தால் ஏற்படும் தலைவலிக்கும், சூர்யாவர்த்தம் எனும் வெயில் ஏற ஏற உண்டாகும் தலை வலிக்கும்,  குரல்வளை குன்றிய நிலையில் பேசமுடியாமல் அவதியுறும் நபர்களுக்கும், மூக்கு உட்புறம் வறண்டு போவதிலும், வாய் வறண்டு போகும் நிலையிலும், திக்கு வாயிலும், கண் இமைகள் பிரித்து விரிக்க முடியாத உபாதையிலும், தோள் பட்டை சதை காய்ந்து போவதால் கைகளை உயர்த்த முடியாத கஷ்டத்திற்கும் நல்ல பலனை உண்டாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இந்த ப்ரம்ஹண நஸ்யம் தங்களுடைய பேத்திக்கு குணமளிக்க ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? என்று முயற்சி செய்து பார்க்கலாம்.

கண் உபாதைக்குத் தக்கவாறு மருந்துகளைத் தேர்வு செய்து தயாரிக்கப்பட்ட கொழுப்பு அல்லது நெய் மருந்துகள், மருந்துகளை அரைத்து உருண்டையாக்கி அந்த கொழுப்பு அல்லது நெய் மருந்துகளுடன் கலந்து உசிதமான கஷாயமும் சேர்த்து, ஆடு, முயல், வெள்ளை நிறப்பன்றி, அவற்றின் இரத்தம் ஆகியவை கலந்து கூட்டாக சேர்த்து செய்யப்படும் ப்ரம்ஹண நஸ்யம் பயன்படுத்த உகந்ததாகும்.

மேற்குறிப்பிட்ட மூக்கில் மருந்துவிடும் முறையால், கண்களைச் சார்ந்த அழுக்குகள் ஏதேனும் இருந்தால், நெகிழ வாய்ப்பிருக்கிறது. அதைச்  சரி செய்து கொள்ள திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் திரவமான மருந்தை கண்ணில் சிறிது தாரையாக ஊற்றுவது, ஆச்யோதனம் எனும் சிகிச்சை முறையாகும். இதனால் கண்ணில் உண்டாகும் வலி, குத்தல், அரிப்பு, உறுத்தல், நீர்க்கசிவு, அழற்சி, சிவப்பு ஆகியவை நீங்கும்.

அஞ்சனம் எனும் கண்களில் மை எழுதுதல் எனும் சிகிச்சை முறையும் ஆயுர்வேதம் கண் நோய்களுக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு தரக்கூடியது என்றும் கூறுகிறது. கண்ணில் ஏற்படும் வீக்கம், அதிக அரிப்பு, பிசுபிசுப்பு, உறுத்தல், கசிவு, சிவப்பு இவை குறைந்து பீளை அதிகரித்தல், பித்தம், கபம், இரத்தம் மற்றும் விசேஷமாக வாயுவால் ஏற்பட்ட உபாதைகள் ஆகியவற்றில் நல்ல பலனைத் தரக்கூடியது.

மேற்குறிப்பிட்ட ஆச்யோதன அஞ்சன பிரயோகங்களால் கண்களுக்கு பலக்குறைவு ஏற்படலாம். அது நீங்க தர்ப்பண புடபாகம் எனும் சிகிச்சை முறைகளாலும் கண்களுக்கு வலுவூட்டலாம். கண்கள் வாட்டமடைதல், தம்பித்தல், காய்ந்திருத்தல், வடுபோதல், அடிபட்டிருத்தல், வாத பித்த தோஷங்களால் வருத்தமடைதல், கண்கள் வளைந்திருத்தல், இமைமயிர் உதிர்தல், கலங்கிய பார்வை, சிரமப்பட்டு கண்விழித்தல், வெண்பகுதியில் சிவந்த கோடுகளுடன் வீக்கம், வேதனை, எரிச்சல் காணப்படுதல், எந்நேரமும் கண்ணீர் ஒழுகுதல், கண்பார்வை மங்குதல், வெண்பகுதியில் சிவப்புப்புள்ளி காணப்படுதல், கண்கூசுதல், மென்னி, கண்பொட்டு அல்லது மற்ற இடங்களிலிருந்து கண்ணில் வேதனையைத்தோற்றுவித்தல், புருவத்திலும் கண்ணிலும் வாயு மாற்றி மாற்றிச் சென்று விசேஷமாகக் கடுமையான வேதனை, குத்தல், கிளர்ச்சி  இவை அடங்கிய நிலையில் யவை எனப்படும் வாற்கோதுமையுடன் உளுந்து சேர்த்து அரைத்து, கண்களில் வெளிப்புறத்தில் இரண்டு அங்குல உயரத்திற்கு சமமாக வரம்பு ஒன்று உறுதியாக அமைத்து, நோய்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட நெய்யை நீராவியில் உருக்கி, கண்களை மூடச் செய்து ஊற்றுவதால் பேத்திக்கு நிவாரணம் கிடைக்குமா என்பதை செய்து பார்த்தால்தான் தெரிய  வாய்ப்பிருக்கிறது. 

கண்களை வலுப்படுத்துவதற்கான சில விசேஷ பயிற்சி முறைகளும் உள்ளன. அவற்றையும் சற்று நிதானமாகச் சொல்லிக் கொடுத்து தொடர்ந்து முயற்சி செய்துவந்தாலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசில மருந்துகளை உள்ளுக்குச் சாப்பிட்டு, முன் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளையும் செய்வதால், கண்சார்ந்த உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கலாம். இவை அனைத்தும் செய்து குணமடையாவிட்டால், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com