இந்துப்பின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்!

'சேந்தாநமக்' என்ற பெயரில் தற்சமயம் ஓர் உப்பு விற்கப்படுகிறது. விசாரித்ததில் அது  இந்துப்பு என்று கடையில் கூறினார்கள்.
இந்துப்பின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்!

'சேந்தாநமக்' என்ற பெயரில் தற்சமயம் ஓர் உப்பு விற்கப்படுகிறது. விசாரித்ததில் அது  இந்துப்பு என்று கடையில் கூறினார்கள். இந்துப்பைப் பற்றிய விவரம் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளதா? இதன் மருத்துவகுணங்கள் எவை? மற்ற உப்புகளிலிருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது? 

- கோ.ஸ்ரீதர், காஞ்சிபுரம்.

"அஷ்டாங்கஹ்ருதயம்' எனும் ஆயுர்வேதநூலில் உப்பினுடைய பொது குணம் பற்றிய வர்ணனையில் எல்லா உப்புக்களும் கபத்தை இளக்கும், உட்புறக் குழாய்களில் துளைத்துக் கொண்டு ஊடுருவிச் செல்லும் தன்மை உடையவை. மலச்சிக்கல் உபாதையைப் போக்கக் கூடியவை. மிருதுவான தன்மையுடையவை. குடல் வாயுவைக் கட்டுப்படுத்தும். எளிதில் செரிக்கும். சூடான வீரியம் கொண்டவை. நாக்கிலுள்ள ருசிக்கோளங்களைத் திறந்து ருசியை உண்டு பண்ணுபவை என்றும், கபம் மற்றும் பித்த தோஷங்களைத் தூண்டிவிடும் தன்மை உடையவை என்றும் கூறப்பட்டுள்ளது. 

நீங்கள் குறிப்பிடும் சேந்தாநமக் எனும் இந்துப்பானது,  சிறிது இனிப்பான சுவையுடையது. ஆண்மையைப் பெருக்கும். இதயத்திற்கு நன்மை செய்யும். மூன்று தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களைப் போக்கும். எளிதில் செரிக்கும். சிறிதே உஷ்ணவீரியம் உள்ளது. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தாது. பசியைத் தூண்டிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற உப்புக்களை விட இந்துப்பு கண்களுக்கு நல்லது. ஆயுர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயாரிப்புகளில் இந்த இந்துப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் அந்த மருந்தினுடைய வீரியமானது வேகமாக உட்புற உடலில் எடுத்துச் செல்லப்பட்டு வேலை செய்வதற்கு உதவுகிறது.

உதாரணத்திற்கு ஹிங்குவசாதி எனும் சூரணமருந்தில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் இதய உபாதைகள், விலாவலி, கழுத்தினுடைய குருத்தெலும்பு மற்றும் இடுப்பிலுள்ள வில்லைகளில் ஏற்படும் வலி ஆகியவற்றை இந்த சூரணமருந்து நீக்குகிறது. மாதவிடாயின் பொழுது ஏற்படும் கருப்பை வலி மேலும் ஆசனவாய் வலி, வாயு மற்றும் கபங்களால் ஏற்படும் குடல் உபாதைகள் ஆகியவற்றை நீக்கும். மலம் மற்றும் சிறுநீரை விடுவிக்கும் தன்மையுடையது. நெஞ்சுபிடிப்பு, சோகை, உணவில் விருப்பமின்மை, மூலம், விக்கல், விதைவாதம், மூச்சிரைப்பு, இருமல், பசியின்மை ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை இந்துப்பினால் மேம்படுத்தப்படுகிறது. 

நாக்கில் ருசி, பசி ஆகியவை இல்லாமல் குடல் வாயுவினாலும், மலச்சிக்கலினாலும் அவதியுறும் நபர்களுக்கு கந்தர்வஹஸ்தாதி எனும் கஷாயம் கொடுக்கப்படும் தறுவாயில் அதில் இந்துப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகைச் சேர்த்துக் கொடுக்கப்படுவதால் மருந்தினுடைய செயல்பாடானது குடலில் துரிதப்படுத்தப்படுகிறது. சிரிவில்வாதி எனும் கஷாயம் வெளிமூலம் மற்றும் உள்மூல பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படும்போது இந்துப்பு சேர்த்தே கொடுப்பது வழக்கம். இதனால் மூலத்தில் ஏற்படும் வலி, மலச்சிக்கல் ஆகியவை விரைவில் நீங்குவதோடு பசியும் நன்றாக எடுக்கத் தொடங்கும். 

வைஷ்வானரம் எனும் சூரண மருந்திலும் இந்துப்பு ஒரு முக்கிய மருந்தாகச் சேர்க்கப்படுகிறது. அரை, ஒரு ஸ்பூன் இந்த சூரண மருந்தை சிறிது வெந்நீருடன் கலந்து காலை, இரவு உணவிற்கு அரைமணி முன் சாப்பிடுவதால் குடல் சார்ந்த வாயு உபாதைகள் பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை நீக்கப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுபோலவே, அஷ்டசூரணம் எனும் ஆயுர்வேத மருந்திலும் இந்துப்புச் சேர்க்கப்படுவதால் குடலில் வாயு  பந்து போன்று உருண்டு ஒருபகுதியில் உந்தப்பட்டு பெரிதாகக் காணப்படும் உபாதையையும்,  பசியின்மையையும் குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

இந்துப்பு தற்சமயம் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு கடைகளில் கிடைக்கிறது. இதை பழங்களை நறுக்கி அதில் தூவியும் சாப்பிடலாம். பழங்களால் ஏற்படும் குளிர்ச்சியும், கனமான தன்மையும் இந்துப்பினால் நீக்கப்பட்டு விரைவில் செரிமானத்திற்கு உதவுகிறது. கண்களுக்கு நல்லது என்பதால் பல ஆயுர்வேதக் கண்சொட்டு மருந்துகளிலும் இந்துப்பு சேர்க்கப்பட்டே தயாரிக்கப்படுகின்றன. ஒரு சிட்டிகை இந்துப்பைச் சூடாக்கப்பட்ட மூலிகைத் தைலங்களில் சேர்த்து நன்றாகக் கரைத்து அதன் பின்னர் வலியுள்ள மூட்டு போன்ற பகுதிகளில் தடவினால்,  சிறந்த வலிநிவாரணியாக அந்தத் தைலம் செயல்படும். 

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை -  600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com