உடலிலுள்ள பூட்டுகளை கலகலக்கச் செய்வது எது? சரி செய்ய வழி உள்ளதா?

சிலருக்கு கால்களில் தொடங்கி, வேகமாக மற்ற பூட்டுகளில் பரவுவதை போல, வேறு சிலருக்கு, கை மணிக்கட்டில் தொடங்கி,
உடலிலுள்ள பூட்டுகளை கலகலக்கச் செய்வது எது? சரி செய்ய வழி உள்ளதா?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்


என் வயது 68. மணிக்கட்டில் நல்லவலி. வலி ஒரே மாதிரி ஒரே இடத்தில் இருப்பதில்லை. இன்று 2 விரல், நாளை 1 விரல், அப்புறம் மணிக்கட்டு என்று மாறுபடும். செம்பு வளையம் போட்டால் பலன் இருக்குமா? BYSONIA செடி வலிகளுக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறேன். வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க என்ன வழி?

லோகநாயகி, கோவை.

உணவில் உப்பு, புளி, காரம், மசாலா, நெய்ப்பு, சூடு, எளிதில் செரிக்காதவை, நீர்ப்பாங்கான பகுதிகளைச் சார்ந்த மாமிசம், பிண்ணாக்கு, முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, இறைச்சி, கரும்பு, தயிர், காரக் குழம்பு, ஒவ்வாமை வகைகள் (உதாரணம், பால், உப்பு, சூடாக்கிய தயிர்) போன்றவற்றை அதிகம் சேர்ப்பதாலும், முன் உணவு செரிமானமாகாத நிலையிலேயே அடுத்த உணவைச் சாப்பிடுவதும், கோபம், பகலில் தூங்குவது- இரவில் கண்விழிப்பது ஆகியவற்றாலும் வாதமெனும் உடல் தோஷமும், இரத்தமும் சீற்றமடைந்து, உடலிலுள்ள பூட்டுகளை கலகலக்கச் செய்து, வலியை ஏற்படுத்தும்.

உட்புறக் குடலில் எரிச்சலுடன் வாயுவைக் கிளறிவிடும் பொருட்களைச் சாப்பிட்டு, பேருந்து, இரு சக்கரவாகனம், ரயில் பிரயாணம், நெடுந்தூரம் விமானப் பயணம் போன்றவை அடிக்கடி செய்ய நேர்ந்தால், அந்த உணவுப் பொருட்கள், செரித்த நிலையில், உடனே இரத்தத்தை சூடாக்கி, சவாரியினால் ஏற்பட்ட களைப்பினால் தளர்ந்துள்ள பாதங்களின் குழாய்களில் சேருகிறது. கெட்டுப்போன சீற்றமடைந்த வாயுவினோடு, இரத்தமும் சேர்ந்து, நீங்கள் குறிப்பிடும் வகையில் உபாதையைத்தோற்றுவிக்கும்.

சிலருக்கு கால்களில் தொடங்கி, வேகமாக மற்ற பூட்டுகளில் பரவுவதை போல, வேறு சிலருக்கு, கை மணிக்கட்டில் தொடங்கி, மற்ற பூட்டுகளுக்குப் பரவும், ஓர்இடத்திலிருந்து மற்றோர்இடத்திற்கு அடிக்கடி வலி மாறிக் கொண்டேயிருப்பது, வாயுவினுடைய இயற்கையான தன்மையினால்தான்.

ஆரம்ப நிலையில் மேற்புற தாதுக்களாகிய ரஸ- ரத்த- மாமிசங்களைப் பிடிக்கும் இந்த உபாதையானது, சிகிச்சை செய்யாமலிருந்தால், ஆழமான தாதுக்களாகிய மேதஸ்- எலும்பு- மஜ்ஜை என்ற அளவில் உள் இறங்கி பெரும் துன்பத்தை விளைவிக்கும் என்று சரகர், ஸுச்ருதர் போன்ற முனிவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பூட்டுகளுக்கு நெய்ப்பு ஏற்படுத்தும் மூலிகை மருந்துகளாகிய இந்துகாந்தம் கிருதம், விதார்யாதி கிருதம், கல்யாண கிருதம் ஆகியவற்றில் ஒன்றை சிலகாலம் சாப்பிடக் கொடுத்து, அம் மருந்தினுடைய வீர்யமானது பூட்டுகளில் நன்கு வந்து சேர்ந்துவிட்டதற்கான அறிகுறிகளை அறிந்த பிறகு, மணிகட்டின் இரண்டு அங்குலத்திற்கு மேலாக உள்ள காரிரத்தக் குழாய்களைக் கீறி, அட்டைப்பூச்சியை வைத்து, இரத்தம் குடிக்கச் செய்து, இரத்தத்திலுள்ள கெடுதிகளை நீக்க வேண்டுமென்றும், இரத்தம் எடுப்பது சிறிய அளவில் மட்டுமே ஆனால் பல தடவை செய்ய வேண்டும் என்றும் வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதனால் வாயுவின் சீற்றம் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மேற்குறிப்பிட்ட சுத்தி முறைகளைச் செய்தபிறகே, மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற குறிப்பும் ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளன.

எடுத்த எடுப்பிலேயே இன்றைய மருத்துவர்கள் சிகிச்சை செய்வதாலேயே, நோய்மாறாமல் நிற்பதாகத் தெரிகிறது. இரத்த சுத்தியும் வாயுவின் சீற்றமும் கட்டுப்படுத்திய பிறகு, பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியைக்குணப்படுத்தும் மருந்துகளாகிய ராஸ்னா ஏரண்டாதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், ராஸ்னா ஸப்தகம் கஷாயம், சப்தஸாரம் கஷாயம் போன்றவை சாப்பிட வேண்டும்.

அதுவும் மருத்துவர் ஆலோசனைப்படி தகுந்த மேம்பொடி எனும் கஷாயத்துடன் சேர்த்து சாப்பிடப்படும் மருந்துகளையே சாப்பிட வேண்டும். க்ஷீரவஸ்தி எனும் பால்கலந்த மூலிகைகளால், ஆஸனவாய் வழியாக உட்செலுத்தும் சிகிச்சையும் சிறப்பானதே. கந்தகபஸ்மம், கோகிலாக்ஷம் கஷாயம் உள்ளுக்குச் சாப்பிடலாம்.

பிண்ட தைலம் வெளிப்புற பூச்சுக்கு உகந்ததைலம். சதகுப்பையை புளித்த மோருடன் அல்லது பூட்டுகளில் எரிச்சல் இருந்தால், பாலுடன் அரைத்து பற்று இடலாம். நோயினுடைய தன்மைக்கேற்ப மருந்துகள் விரிவாகக் கூறப்பட்டு செம்புவளையம், BYSONIA பற்றிய விவரங்கள் அவை பற்றிய நவீன ஆராய்ச்சியாளர்கள் கருத்தை அறிவதே நலம். ஆயுர்வேதத்தில் இவை பற்றிய கருத்துகளை காணமுடியவில்லை. 

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com