அனைத்து வியாதிகளும் மது அருந்தினால் குணமாகுமா?

மது அருந்துவதால்,  ஒருவர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்று நினைப்பது மாயையே.
அனைத்து வியாதிகளும் மது அருந்தினால் குணமாகுமா?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

சர்க்கரை உபாதையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக காலையில் ஆறு கிலோமீட்டர், மாலையில் ஆறு கிலோமீட்டர் நடக்கிறேன். இதனால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அனைத்து வியாதிகளும் மது அருந்தினால் குணமாகுமா? அல்சர் வர  காரணமென்ன?

 - கா. திருமாவளவன், 
திருவெண்ணெய் நல்லூர்.

நாம் எளிதாக நடப்பதற்காகவும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமலிருப்பதற்காகவும் சிலேஷகம் எனும் ஒரு கபம்  மூட்டுகளைப் பாதுகாக்கிறது. இதனுடைய இயற்கை குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைப்பு போன்றவை, அதிக தூரமான நடையால், வறட்சி, சூடு, லேசு, ஊடுருவும் தன்மை, சொர சொரப்பு,  அசைவு போன்ற எதிரான குணங்களைச் சந்திக்க நேருவதால் அவற்றுள் கடுமையான பலப் பரீட்சையைத் தோற்றுவிக்கின்றன. எந்தெந்த குணங்கள் அவற்றிற்கு எதிரான குணங்களை வீழ்த்துகிறதோ, அதற்கு ஏற்றாற் போல் மூட்டுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு விளைவுகளை  ஏற்படுத்துகின்றன. அதனால், தங்களுடைய விஷயத்தில், உணவின் சீரான வரவால் ஏற்படுத்தப்பட்ட மூட்டுகளின் குணாதிசயங்கள், மூட்டுகளின் தாங்கக் கூடிய திறனையோ, அவை கலகலத்து வீழ்வதையோ, செயலின் மூலமாக தீர்மானிக்கக் காத்திருக்கின்றன.

இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளினால் ஏற்றம் பெறும் மூட்டுகளின் சிலேஷக கபமானது, அதிக தூர நடையினால் வீழ்ச்சியடைகின்றது. சர்க்கரை உபாதையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இனிப்புச் சுவை கூடாது என்பதால், மூட்டுகளிலுள்ள கபம் இயற்கையாகவே நெய்ப்பைப் பெற முடியாமல் வறண்ட நிலைக்குத் தள்ளப்படும். அதிக தூர நடையால், வறட்சி மேலும் கூடுவதால், தாங்களுக்கு மூட்டுகளில் பெரிய ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. உட்புற வழியாக வர வேண்டிய நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசை வராமல் போனால், வெளிப்புற வழியாக அதைச் சம்பாதித்துக் கொள்வதே சிறந்தது. எதிர்காலப் பாதுகாப்பும் கூட. அந்தவகையில், சில ஆயுர்வேத தைலப் பூச்சுகள் உதவிடக் கூடும். 

மஹாமாஷ தைலம் எனும் உளுந்தை முக்கிய உட்பொருளாக  மூட்டுகளில் தடவி, சுமார் அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை ஊறிய பிறகு, வேறு ஒரு துணியால் துடைத்து விடுவதையோ, வெது வெதுப்பான நீரால் கழுவிவிடுவதையோ தொடர்ந்து செய்து வந்தால், மூட்டுகளின் நெய்ப்பு காப்பாற்றப்படலாம். புழுங்கலரிசியுடன், கோதுமைக் குருணை, ஜவ்வரிசி, உளுந்து, எள்ளு ஆகியவற்றைச் சம அளவில் கலந்து, கஞ்சி காய்ச்சி, அந்தக் கஞ்சியைத் தைலம் தேய்த்து ஊறிய மூட்டுகளின் மீது இதமாக உருட்டி உருட்டித் தேய்த்து சுமார் அரை மணி நேரம் ஊறிய பிறகு, கழுவிவிடுவதும் நல்லதே. இந்த முறை நீரால் கழுவிவிடுவதை விட சிறந்ததாகும்.

க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை, காலை, மாலை வெறும் வயிற்றில் வெது வெதுப்பான பாலுடன் பருகுவதால், மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள வழுவழுப்பான தன்மை குறையாமல் பாதுகாக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தான் குணத்தை எதிர்பார்க்க முடியும்.

நடைக்குப் பிறகும் மூட்டுகளுக்கு ஓய்வு தராமல்  நடப்பதையோ, நிற்பதையோ செய்தால், தேய்மானம் விரைவில் ஏற்பட்டு, முடக்கிவிடும் என்பதால், உழைப்பிற்கு பிறகு ஓய்வு, ஓய்விற்குப் பிறகு உழைப்பு என்ற வகையில் வாழப் பழகுவதே நலம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

மது அருந்துவதால்,  ஒருவர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்று நினைப்பது மாயையே. சூடான வீர்யம் கொண்ட மது, கபத்திற்கு எதிரான குணங்களையே அதிகம் கொண்டிருப்பதால், நடையைப் போலவே, மூட்டுகளிலுள்ள கபத்தை வளரச் செய்யும். அதனால் மூட்டுகளை கலகலக்கச் செய்து வலுவிழக்கும்.

அல்சர் எனும் வயிற்றுப்புண் உபாதை உட்பகுதிகளிலுள்ள சவ்வுப்பகுதியில் ரத்தக் கசிவையும் ஏற்படுத்தக் கூடும். அதிக காரம், புளிப்பு, உப்புச்சுவை, புலால் உணவு, எண்ணெய்யில் பொரித்தவை, வயிற்றுப் புண் உபாதையை தோற்றுவிக்கக் கூடும். சந்தனாதி லேஹ்யம், அப்ரகபஸ்மம், விதார்யாதி கிருதம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் அல்சர் உபாதைக்குப் பயன்படுத்தத் தக்கவை.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com