Enable Javscript for better performance
ஏப்பம்.. தும்மல்.. கொட்டாவி.. அடக்கினால் என்னவாகும்?- Dinamani

சுடச்சுட

  

  ஏப்பம்.. தும்மல்.. கொட்டாவி.. அடக்கினால் என்னவாகும்?

  By டாக்டர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 08th February 2018 12:00 AM  |   அ+அ அ-   |    |  

  thummal

  இயற்கை உந்துதல்களாகிய ஏப்பம், தும்மல், கொட்டாவி போன்றவை அலுவலக நேரத்தில் பலபேர் முன்னிலையில், வந்துவிட்டால் மரியாதைக் குறைவும் பிறர் கேலி செய்வாரோ என்றும் எண்ணி நான் வலுக்கட்டாயமாக அடக்கிவிடுகிறேன். இதனால் எனக்கு பிரச்னைகள் ஏற்படுமா?
  -மணிசேகரன், சென்னை.

  வயிற்றில் உள்ள உணவு ஜீரணமாகி அவ்விடம் காலியாக இருக்கும்பொழுது அங்குள்ள வாயுவின் ஓர் அம்சம் உணவு உண்டவுடன் வெளிப்படுகிறது. நல்ல பசி வந்துள்ளதையும் சிறு ஏப்பம் அறிவிக்கும். மேல்வாய் வழியாக சிறு சப்தத்துடன் வெளியாகும் இவ்வித ஏப்பம் இயற்கை வேகம். இதை வாயு வெளிவராத படிக்கு வாயையும் தொண்டையையும் இறுக்கி மூடிக்கொண்டு அடக்கவே கூடாது. அடக்கினால் உள்ளே தங்கிய பெரிய வாயுவினால் வயிறு முழுவதும் கெட்டுவிடும். வயிற்றையே தூக்கிப்போடும் விக்கல்களும், வயிறு உப்புசம், மாரடைப்பு, உடல் நடுக்கம், மூச்சிறைப்பு, இருமல், ருசியின்மை போன்றவை ஏற்படும்.

  ஏப்ப வேகத்திற்கான உபாதைகளை சிகிச்சை மூலம் சரி செய்வது என்பது சுலபமல்ல. ஏப்பத்தை அடக்கியதால் வயிற்றில் ஏற்பட்டுள்ள விக்கல் குணமாக ஆயுர்வேத மருந்துகளாகிய ஹிங்குவசாதி சூரண மருந்தை சிறிது சூடான தண்ணீருடன் கரைத்து உணவிற்கு முன்பும் , உப்புசம் முதலிய வாயு தோஷங்களைக் குணப்படுத்துவதற்கு தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரையை காலை, இரவு உணவிற்குப் பிறகு வெந்நீருடன் பருகுவது நல்லது.

  இந்த இயற்கை ஏப்ப வேகம் தவிர வயிற்றில் வாயுவின் கெடுதியினால் அடிக்கடி, சிலநேரத்தில் தூங்கும் பொழுதுகூட, மிகப்பெரிய சப்தத்துடன் வாய்வழியே தொடர்ந்து 10 - 12 ஏப்பங்கள் வரும். இது தனி வியாதி, சிகிச்சைக்கு எளிதில் வசமாவதில்லை. வரும் ஏப்பத்தை அடக்கவே முடியாது. 10 - 12 ஏப்பங்கள் வந்த பிறகு தானே நிற்கும்.

  சுவாசக் காற்று நாசியின் உள்ளே சென்று அது திரும்ப வெளிவருவதில் சுவாசக் குழாயின் மேல்புறத்தில் ஏதாவது அலுவலக தூள் தூசி நெடி உண்டாக்கும் வஸ்து கலந்த காற்று சம்பந்தத்தினால் தடங்கல் ஏற்பட்டபொழுது, அந்த நெடி காரத்தை உதறி வெளிப்படுத்துவதற்காக சுவாசக்குழலைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இருக்கும் சுவாசக் காற்று மூக்கு முகத்தை எல்லாம் சட்டென குலுக்கி, சுண்டி, விசை வேகத்துடன் வெளியாகிறது. இயற்கை வாயு மூலம் உடலுக்குச் செய்யும் உதவி தும்மல் வேகம். இதை அடக்குவது மிகக் கெடுதல். சுவாச வாயுவில் தானே பிராணன் நிற்கிறது?

  தும்மல் வேகத்தை அடக்கினால் கழுத்துப் பிடரிப்பக்கம் அசைவுகளில் வலி, தலை பூராவும் வலி, ஒற்றைத் தலைவலி, அர்திதம் எனப்படும் கோணவாய் நோய், கண் முதலிய கழுத்துக்குமேல் இருக்கும் புலன்களுக்கு பலமின்மை முதலிய தொந்தரவுகள் வரும்.

  இதில் அடக்கப்பட்ட தும்மலைத் திருப்பி உண்டாக்க வேண்டியது முக்கியம். சுவாசக்குழல், தும்மலினால் சுத்தம் செய்யப்படும். சூரிய கிரணங்கள் மூக்குத் துவாரத்தில் படும்படியாக சூரியனைப் பார்த்தால் உடனே தும்மல் உண்டாகும். மிளகைக் கொளுத்தி அணைத்து அதிலிருந்து கிளம்பும் புகையை மூக்கில் நுழையும்படிச் செய்தல், புகையிலைப் பொடியையும் சுண்ணாம்பையும் நவச்சாரத்தையும் கரைத்த நீரின் வாயு இவற்றை முகர்தல், சூடான வீரியமுள்ள மூக்கிலிடும் முறை இவை எல்லாம் தும்மலை உடனே கிளப்பும். சில தும்மல்கள் வெளிவந்து அடங்கிய பிறகு தலைவலி தொடர்ந்தால் நல்லெண்ணெய் சுட வைத்து கழுத்து மென்னி தலை பூராவும் தேய்த்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்து துணியினால் ஒத்தடம் கொடுக்கவும். நாராயண தைலம் போன்ற வாயுவை சமனம் செய்யும் தைலம் வெறும் நல்லெண்ணெய்யை விட மிகவும் தரம். இந்த உஷ்ணம் உடலைத் தாக்காமலிருக்க பிறகு 2 - 3 நாட்கள் இருவேளையும் உணவிற்குப் பிறகு நெய் தனியே ஜீரணசக்திக்குத் தகுந்தபடி குடிக்கவும்.

  வேலை செய்து ஓய்வு எடுக்க, உடலில் ஏற்படும் உணர்ச்சி வேளையில் அசதி சோம்பல் தூக்கம் வரும். வாயுவினால் உண்டாக்கப்படும் இயற்கை வேகம் கொட்டாவி, எல்லாப் புலன்களும் தளர்ந்துள்ள தருணத்தில் சுவாசம் மூக்கின் வழியாக உள்ளும் வெளியும் போய்வருவதில் சிறிது அதிக அளவிலும் நீண்டதாகவும் திறந்த வாய் வழியாக உள்ளே சென்று வெளியாவது இயல்பு. இந்த இயற்கை வேகத்தை உதடுகளைச் சேர்த்து இறுக்கி மூடிக்கொண்டு அடக்கினால் விளையும் கெடுதல்கள் - தும்மல் வேகத்தை அடக்குவதில் வரும் நடுக்கம் முதலிய தொந்தரவுகளே. ஆனால் சிகிச்சை தும்மலைக் கிளப்புவதுபோல் கொட்டாவியைக் கிளப்புவதல்ல; உடனே ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு வாயு சமனம் செய்து கொள்ள வேண்டியது.

  கொட்டாவி ஏற்படும்பொழுது வாய் வழியே மூச்சு போய்வருவதற்காக வாய் திறந்திருப்பதால் வாய் வழியே தூசி, சிறு கொசு, பூச்சி காற்றுடன் நுழைய ஏதுவுண்டு. இதைத் தடுக்க கொட்டாவி வரும்பொழுது பிறர் அறியாவண்ணம் ஒரு கைக் குட்டையால் வாயை மறைத்து விடுவது நல்லது.

  தலைக்கு க்ஷீரபலா தைலம், வாயினுள் அரிமேதஸ் தைலம், மூக்கினுள் அனுதைலம் விடுதல், கண்களில் இளநீர்குழம்பு விடுதல் போன்ற சிகிச்சை முறைகளால் தங்களுக்கு ஏற்படக் கூடிய பல உபாதைகளையும் நீக்கிக் கொள்ளலாம்.

  (தொடரும்)
  பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
  செல் : 94444 41771
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai