செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்!

செயற்கை முறை தயாரிப்பில்லாமல் செக்கிலாட்டப்பட்ட நல்லெண்ணெய்யை உணவாகச் சாப்பிடப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் - சுவையில்
செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தின் அடிப்படையில் மரச்செக்கு மூலம் (COLD PROCESS) ரசாயனங்களை பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளனவா? 

-சுப்ர. அனந்தராமன், சென்னை-40. 

செயற்கை முறை தயாரிப்பில்லாமல் செக்கிலாட்டப்பட்ட நல்லெண்ணெய்யை உணவாகச் சாப்பிடப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் - சுவையில் இனிப்பு மேலாகவும் கசப்பு துவர்ப்பு குறைவாகவும் உள்ளது. குடலில் செரிமான இறுதியிலும் இனிப்புச் சுவையுடன் தானிருக்கும். வயிற்றிலுள்ள பசித்தீயையும், தாதுக்களில் பொதிந்துள்ள நெருப்பையும் சீர் செய்யும். சூடான வீர்யமுடையது. உடலின் இயற்கையான சூட்டைப் பாதுகாக்கும். எளிதில் செரிக்காது. ஆனால் குடலில் செரிமானமாவதற்கு முன்பே தாதுக்களில் முழுவதுமாக சீக்கிரம் பரவும் சக்தியுடையது. உடல் உறுப்புகளுக்கு உறுதி, பலம், நல்ல நிறம், புஷ்டி, தெளிவு, உணவில் திருப்தி, குடல்களில் எண்ணெய்ப்பசை, வெளி - உள் மலங்களை வெளிப்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்தும். 

உடலெங்கும் வெது வெதுப்பாக தேய்த்துக் குளிப்பதால் - மூளைக்கு புத்தி மேதை, தோலுக்கு - மிருது, வழவழப்பு, பளபளப்பு, தசைகளுக்கு உறுதி, கண்களுக்கு தெளிவு, விசேஷ பலம் முதலியவை ஏற்படும். மூப்பு எனும் வயோதிகத்தை மிகவும் தள்ளிப்போடும்.

நல்லெண்ணெய்: குடல் பூச்சிகளையும், அழுக்கிலிருந்து வெளித் தோலில் ஒட்டிய அணுக்கிருமிகளையும் அப்புறப்படுத்தும். வெளிப்பூச்சினால் காணாக்கடி எனும் தோல் நோயைத் தடுக்கும். தலைவலி, காதுவலி ஆகியவற்றைத் தீர்க்கும். கருக்குழியைச் சுத்தப்படுத்தி மாதவிடாய் ஒழுக்கைச் சீர் செய்யும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணமாக்கும். பலவித வெட்டுக் காயங்கள், சிதைவுகள், எலும்பு முறிவுகள், தடியடிகள், மிருகக் கடிப்புண்கள் முதலியவற்றின் வேதனையைக் குறைத்து முறைப்படி ஆற்றிவிடும்.

மேலும் - நீரிழிவு நோயில் சிறுநீர் அதிகம் போவதைக் குறைக்கும். கேசம் உதிர்வதைத் தடுத்து, வளர்த்து நன்றாக்கும். 

நல்ல சுகமான உறக்கத்தைக் கொடுத்து, உடல் களைப்பு சிரமத்தைப் போக்கும். வெளி, உட்புறப் பயன்பாட்டினால் வாயு தோஷத்தினால் ஏற்படும் உடல் வலி, குடல் வாயு ஆகியவை நீங்கும். உடல் உட்புறக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்பைச் சுரண்டி வெளியேற்றும் லேகனம் எனும் குணமிருப்பதால், உடல் கொழுப்பை அண்டவிடாது. நல்லெண்ணெய்க்கு சிறு குறைகளுமுண்டு - பித்தம் மேலிட்ட உடல் அமைப்புள்ளவர்கள், ரத்தக் கசிவு உபாதை, கபத்தினால் ஏற்படும் இருமல், கசிவுடன் கூடிய தோல் உபாதை, மூச்சிரைப்பு, மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், குறைந்த ரத்த அழுத்த உபாதை, தலை சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவற்றுக்குத் தனியாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தினால், இந்த உபாதைகள் அதிகமாகும். எல்லாவிதமான செயல்களையும் செய்து உடலைக் காத்தல், நோய்க்கு உட்படுத்தல், அழித்தல் ஆகிய முக்காரியங்களையும் வாயுதான் தலைவனாக இருந்து செய்கிறது. இந்த வாயுவை சீர் செய்யும் பொருள்களில் நல்லெண்ணெய் தான் தலை சிறந்தது. அதனால் மனித வாழ்க்கையில் நல்லெண்ணெய் இன்றியமையாத பொருளாக விளங்குகிறது.

தேங்காய் எண்ணெய்: பச்சைத் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் ஜீவசத்து குறையாமல் நிறைந்து இருக்கும். மரச்செக்கில் மந்த வேகத்தில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஜீவசத்து கொஞ்சம் குறைவாகும். எலெக்டிரிக் விசையில், ரசாயன சாரத் திரவங்கள் சேர்த்து வெகு வேகமாய் அரைத்து எடுக்கப்படும் எண்ணெய்யில் ஜீவசத்து மிகக் குறையும். தேங்காய் எண்ணெய்யை உள்ளுக்குச் சாப்பிட்டால் எளிதில் செரிக்கக் கூடியதல்ல. 
இளைத்த தாதுக்களுக்குப் புஷ்டி தந்து பெருக்கச் செய்யும். மூச்சிரைப்பு, இருமல், காச நோய், நீரிழிவு நோயாளிகளுக்குப் பத்தியமானது. மூளையின் ஞாபக சக்தியை வளர்க்கும். சுட்ட புண்கள், வெட்டுக் காயங்கள், சொறி சிரங்குகள், கரப்பான்களில் மேலுக்குப் பூசுவதினால் மிகவும் நல்ல குணம் கிடைக்கும். பித்த வாயுவின் சீற்றத்தை அடக்கும். கபத்தை சிறிது அதிகரிக்கும்.

கடலெண்ணெய்: பட்சண வகையறாக்களைத் தயாரிப்பதற்கு கடலெண்ணெய் உகந்தது. சமையலுக்கு கடலெண்ணெய்யைப் பயன்படுத்தினால் சமானன் மற்றும் அபானன் எனும் குடல் காற்றை அதிகரிக்கச் செய்யும் துர்குணம் கொண்டது. இதனால் மலச்சிக்கலும் நரம்புகளில் வாயுவினுடைய சீற்றமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சமையலுக்கு கடலெண்ணெய்யை விட நல்லெண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யுமே உகந்தது.

(தொடரும்) 

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com