சுடச்சுட

  

  தலைப்பாரத்துக்கு பார்க்காத சிகிச்சையில்லையா? இதோ தீர்வு

  By டாக்டர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 03rd May 2018 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  headache

  வயது 65. இருபது வருடங்களாக தலை கனத்தால் சிரமப்படுகிறேன். தலை எப்போதும் பாரமாகவே இருக்கிறது. தலையை வலப்புறம் திருப்பினால் தண்ணீர் அசைவது போன்ற சத்தம் வருகிறது. பார்க்காத சிகிச்சை இல்லை. இதை எப்படிக் குணப்படுத்துவது ?

  -ஜெயகுமார், சாக்கோட்டை, கும்பகோணம். 

  மூவகை தோஷங்களாகிய வாத பித்தம் கபம், உடலெங்கும் பரவியிருந்தாலும், நிலம் மற்றும் நீரினுடைய ஆதிக்க முடைய கபம் எனும் தோஷமானது தன் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழ கொழப்பு, நிலைப்பு ஆகியவற்றை, இந்த இரு மகாபூதங்களின் வரவால் வலுப் பெற்று, தன் இருப்பிடமாகிய மார்பு முதல் உச்சந் தலை வரை ஆட்கொள்கிறது. இதில் வியப்பான விஷயமென்னவென்றால், கனத்திற்கு அடித்தளம் அமைத்துத் தரும் கபம் - மனித உடலில் மேல்பாகத்திலும், லேசான தன்மையுடைய வாயுவானது, உடலில் கீழ்ப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது தான்! 

  மேற்குறிப்பிட்ட குணங்களுக்கு நேர் எதிரான குணங்களை உணவாகவும், மருந்தாகவும், செயலாகவும் செய்ய நேர்ந்தால், தலைக் கனம் குறைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன. அந்த வகையில் - உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை குறைவாகவும், காரம் - கசப்பு - துவர்ப்புச் சுவை அதிகமாகவும் சேர்க்க வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். வாரணாதி கஷாயம் - குக்குலுதிக்க கஷாயம் - தசமூலகடுத்ரயம் கஷாயம்- திரிகடு சூரணம் - அக்னி குமாரரஸம் குளிகை - கற்பூராதி சூரணம் - ராஸனாதி சூரணம் - வாஸாரிஷ்டம்- தசமூலாரிஷ்டம்- அகஸ்திய ரசாயனம் போன்ற சில மருந்துகள் - தங்களுக்கு நல்ல பலனைத் தரக் கூடும். அதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவை. ஆறிய வெந்நீரை தலைக்குவிட்டுக் கொள்வது, குளிரூட்டப்பட்ட அறையில் படுக்காதிருப்பது, தலைமுடியை அடர்த்தியாக இல்லாமல், கிராப்பு வெட்டிக் கொள்வது ஆகியவற்றை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். 

  கண் நரம்புகளின் செயல் திறன் குன்றுவதாலும், கழுத்து நரம்புகளில் ஏற்படும் நரம்புப் பிடிப்பாலும், மூளையிலுள்ள நுண்ணிய நரம்பு மண்டலங்களில் ஏற்படும் நீர்க் கோர்வையினாலும் தலைப்பகுதியில் ஏற்படும் நீர் அழுத்தத்தினாலும் தலை கனக்கக் கூடும். அதுபோன்ற நிலைகளில் மூக்கினுள் விடப்படும் மூலிகைப் புகை , நெற்றியில் மூலிகைப் பற்றிடுதல் , காதினுள் வெது வெதுப்பாக மூலிகைத் தைலங்களை விடுதல், வாயில் நல்லெண்ணெய் விட்டுக் குலுக்கித் துப்புதல் போன்றவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவிடும் சிகிச்சை முறைகளாகும்.

  மனதில் எழும் எண்ணக் குமுறல்களாலும், அடக்க முடியாத சினத்தாலும், பயத்தாலும், காமக் குரோதத்தினாலும் சிலருக்கு தலைபாரம் ஏற்படுகிறது. மனதை அமைதியுறச் செய்யும் மூலிகை நெய் மருந்துகளை அருந்துதல், மனதை வலுப்படுத்த உதவிடும் குளிகைகள் அவர்களுக்குத் தேவைப்படலாம்.

  ஐம்புலன்களின் இருப்பிடமாகிய தலையை, மர்மஸ்தானம் அதாவது உடல் உறுப்புகளில் ஒரு முக்கிய அங்கமாக ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. அதிகமான சத்தம் அல்லது சத்தத்தை கேட்காமலேயே இருத்தல், கேட்கக் கூடாத வகையில் சொற்களைக் கேட்டல் ஆகியவற்றால் செவிப்புலன் வழியாக ஏற்படும் பாதிப்புகள் பல மூளையை பாதிப்புறச் செய்து, தலை பாரமாக ஆவதற்குக் காரணமாகலாம். அது போலவே அதிக ஒளியைப் பார்க்க நேர்வதும், எந்த ஒரு பொருளையும் பார்க்காமலேயே இருப்பதும், பார்க்கக் கூடாத பொருட்களை அடிக்கடி பார்க்க நேர்வதும் கண்கள் வழியாக, மூளை பாதிக்கப்பட்டு கனக்கலாம். துர்நாற்றத்தை அடிக்கடி முகர வேண்டிய நிலையும், அதிக அளவில் வாசனாதி திரவியங்களை முகர்வதும் நாசிகையினால் மூளை பாதிக்கப்பட்டும் பாரமாகலாம். இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை. மூளையின் அருகே இப்புலன்கள் அமைந்திருப்பதால் இதில் கவனம் தேவை என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. 

  தலைப்பகுதிக்கு மட்டுமே சிகிச்சை செய்து மாற்றிவிடக் கூடிய நிலை தங்களுக்கு இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளுமுண்டு. பலகாலமாக இந்த உபாதை இருப்பதால், குடல் சுத்தி முறைகள் செய்வதும், ஆசனவாய் வழியாக வஸ்தி செய்யும் சிகிச்சையினாலும், உட்புற குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு, அதன் பிறகு, தலைப் பகுதிக்கான சிகிச்சை முறைகளால், நிவாரணம் எளிதில் கிடைக்கக் கூடும். நெற்றிப் பரப்பில் விடப்படும் மூலிகைத் தைலங்களால், தலை கனம் குறைய வாய்ப்பிருக்கிறது.

  CT Scan report-ல் எந்தப் பிரச்சனையுமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் சிந்தனையானது மேலும் கூர்மையாகிறது. அப்பட்டமான காரணம் விளங்காததால் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளில் பலதும் செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கிறது. 

  யோகப்பயிற்சி, பிரணாயாமம் ஆகியவை உதவிடக் கூடும். 

  (தொடரும்)

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai