Enable Javscript for better performance
உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!- Dinamani

சுடச்சுட

  

  உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

  By டாக்டர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 09th May 2018 05:58 PM  |   அ+அ அ-   |    |  

  Woman-Taking-Broccoli-From-Fridge

  வேகவைத்த சாதம், குழம்பு, பொரியல், கூட்டு ஆகியவற்றையும் எல்லாவிதமான சமைத்த பண்டங்களையும் FRIDGE என்ற குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து ஒரு வாரம், பத்து நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகமாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கதா?

   -சுப்ர. அனந்தராமன், அண்ணாநகர்,  சென்னை.

  "அன்னாத் புருஷ:' என்று வேதம். அதாவது உடலை சோற்றால் ஆன சுவர் என்று குறிப்பிடலாம். புதிதாக சமைத்த உணவினுடைய சூடு ஆறுவதற்குள் கிழக்கு முகமாக, தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து இடது கையை பூமியில் படாதவாறு இருகால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு, மேலே மின்விசிறி ஓடாமல், ஏசி அறையில் அமராமல், பேசாமலும் சிரிக்காமலும் உண்ணும் உணவில் மட்டுமே கவனம் வைத்து, உணவின் நடுவே நீர் அருந்திச் சாப்பிட்ட, நம் முன்னோர்களின் சிறப்பான உணவு உண்ணும் முறை மறந்து, இன்றைய தலைமுறை பாழ்பட்டுப் போனது வேதனையான விஷயம் தான்.


  கேட்டால் காலத்தின் கட்டாயம் என்று கூறுவர். ஆனால் காலத்திற்கு ஏற்றாற் போல் மனித உடல் உட்புற உறுப்புகள் மாறவில்லையே என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. "யாதயாமம் கதரஸம்  பூதி பர்யுஷிதம் சயத் உச்சிஷ்டமபி ச மேத்யம் போஜனம் தாமஸப்ரியம்' என்கிறது பகவத்கீதை. அதாவது ஓர் இரவு தங்கிப்போனதும், சுவையிழந்ததும், கிருமிகளால் ஆக்ரமிக்கப்பட்டு துர்நாற்றமடைந்ததும்,  சாப்பிட்டு மீந்துபோன மலினமான உணவு- மனதைச் சார்ந்த தாமஸம் எனும் சோம்பலையும், சுறுசுறுப்பற்ற தன்மையும், அதிக உறக்கத்தைத் தருபவையும், எதிர்மறையான எண்ணங்களையும் (NEGATIVE THOUGHTS) உருவாக்கும் குணத்தை தூண்டச் செய்யும் என்று அர்த்தம் கூறலாம். அதனால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவைச் சாப்பிடுவதால், உடலுடன் சேர்ந்து மனதும் கெட்டுப் போகிறது என்பது உறுதியாகிறது. 

  அது போன்ற உணவு வகைகளை, நாங்கள் மறுபடியும் சூடாக்கித் தானே சாப்பிடுகிறோம் என்று கூறுபவர்களுக்கு,  "உஷ்ணீ கிருதம் புன:' அதாவது மறுபடியும் சூடு செய்யப்பட்ட உணவுப் பொருள் - நிஷித்த போஜனம் - மட்டமான உணவு என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இதுபோன்ற உணவுப் பொருட்களை, பசித் தீயில் வேகவைப்பதற்காக வாய் வழியாக, உட்செலுத்தினால் அதை செரிமானம் செய்ய முடியாமல், பசித்தீ தடுமாறக் கூடும். கையெடுத்துக் கும்பிட்டு, ஆளைவிடு என்று பசித்தீ படுத்துக் கொண்டால் உண்ட உணவு வாந்தியுமாகாமல், பேதியுமாகாமல், செரிமானமுமாகாமல், வயிற்றிலேயே கெட்டுப்போய் கிடந்து, மப்பு நிலையை ஏற்படுத்தக் கூடும். அப்படியல்லாமல், சில நேரங்களில், திடீரென்று வாந்தியாகும், பேதியுமாகும், உடலெங்கும் ஊசியால் குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தும். அதோடு மட்டும் விடாது - உட்புற குழாய் அடைப்பு, உடல் பலவீனமடைதல், உடல் கனத்தல், குடலில் வாயுவினுடைய அசைவுகள் தடையுறுதல், சோம்பல், அஜீரணம், அதிக அளவில் எச்சில் சுரத்தல், அதை துப்பிக் கொண்டேயிருத்தல், உட்புற மலங்கள் வெளியேறாமல் தடையுறுதல், ருசியின்மை, சுறுசுறுப்பில்லாதிருத்தல் போன்ற உபாதைகளையும் நீங்கள் குறிப்பிடும் உணவு வகைகள் ஏற்படுத்தும். 

   உடலெங்கும் கொழுப்புக் கட்டிகள் உருவாவதும், பசி மந்தமாகி உடல்மெலிந்து, அவற்றிற்கான காரணம் புரியாமல் தவிப்பவர்களும், கொழுப்பு ரத்தத்தில் கூடுவதும் இதுபோன்ற உணவு வகைகளால் ஏற்படக் கூடும். இதுபோன்ற கெடுதிகளை நீக்க, ஆயுர்வேதம் குறிப்பிடும் நெய்ப்புள்ள பொருட்களாகிய நெய் - எண்ணெய்} வûஸ - மஜ்ஜை போன்றவற்றில், தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பருக  வைத்து, அவை உடலில் முழுவதுமாக சேர்ந்து விட்ட உணர்வை அறிந்தவுடன், வியர்வை சிகிச்சை செய்து, உட்புறப் படிவங்களை நீராக உருக்கி, குடலுக்குக் கொண்டு வந்த பிறகு, வாந்தி அல்லது பேதி சிகிச்சை செய்தும், வஸ்தி எனும் எனிமா சிகிச்சை மூலமாகவும், மூக்கினுள் விடப்படும் நஸ்ய சிகிச்சையும், ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்டுப் போன ரத்தத்தை வெளியேற்றும் அட்டைப்பூச்சி வைத்திய முறையாலும், உடல் உட்புற சுத்தத்தை வரவழைத்து, உடல் உபாதைகளை ஏற்படுத்திய உணவு முறைகளை மறுபடியும் தொடராமல், அன்றே  சமைத்த புதிய உணவுகளின் நிறம், தரம், சூடு குறையாத நிலையில் புசித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதே சிறந்த வழி.

   (தொடரும்)

  பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
  செல் : 94444 41771

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai