சுடச்சுட

  

  சிறுநீரக நோய்களுக்குப் பூசணிக்காய்!

  By டாக்டர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 17th May 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  koluthum-veyilukku-ugantha-poosani

  எனக்கு பூசணிக்காய் சாம்பார், மோர்குழம்பு, கூட்டு என்ற வகையிலெல்லாம் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் அதன் மருத்துவ பயன்கள் பற்றி தெரியவில்லை. ஆயுர்வேதத்தில் இது பற்றிய விவரங்கள் உள்ளதா?

  - சுஜிதா, கோவை. 

  பாவபிரகாசர் என்ற ஆயுர்வேத வித்தகர், பூசணிக்காய் பற்றிய வர்ணனையில் - "உடலுக்குப் புஷ்டியைத் தருகிறது, ஆண்களுக்கு விந்தணு வளர்ச்சியைத் தூண்டுகிறது, செரிப்பதில் கடினமானது, பித்த ஊறலை குடலில் கட்டுப் படுத்துகிறது, ரத்தவாதம் எனும் வாயு, ரத்தத்தில் சேர்ந்து ஏற்படுத்தும் உடல் வலியைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறுகிறார்.

  முற்றாத சிறிய பூசணிக்காய் - பித்தத்தை நன்கு கட்டுப்படுத்தும், நல்ல குளிர்ச்சியான வீர்யமுடையது. நடுத்தர வளர்ச்சியை உடைய பூசணிக்காய்- கபத்தை அதிகரித்து தலைபாரம், தலைவலி, மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல் போன்ற உபாதைகளுக்குக் காரணமாகலாம். நல்ல முற்றிய அல்லது நன்கு வளர்ந்த பூசணிக்காய், அத்தனை குளிர்ச்சியானது அல்ல, இனிப்புச் சுவையுடையது, பசியைத் தூண்டிவிடும், எளிதாக செரிமானமாகிவிடும். எல்லா வகையான பூசணிக்காய்களுமே, சிறு நீர்ப்பையைச் சார்ந்த உட்புற அழுக்குகளை அகற்றி சுத்தப்படுத்துபவை; மனதிற்கு இத மூட்டுபவை, மன உபாதைகளுக்கு நல்ல உணவாகவும், மருந்தாகவும் பயன்படும், மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை- பெரியவகை பூசணிக்காய் (நன்கு வளர்ந்த) சமநிலையில் நீடிக்கச் செய்பவை' என்று மேலும் கூறுகிறார்.

  நிகண்டு ரத்னாகரத்தில் - "மனிதர்களுடைய உடலிலுள்ள சப்த தாதுக்களாகிய ரஸம் - ரக்தம் - மாம்ஸம் - மேதஸ் - எலும்பு - மஜ்ஜை - விந்து ஆகியவற்றை வளர்க்கச் செய்கிறது. சிறுநீரை உற்பத்தி செய்யும் சிறுநீரகங்களில் ஏற்படும் உள்காயங்களை ஆற்றிவிடும். சர்க்கரை உபாதையுள்ளவர்களுக்கு நல்ல உணவு. சிறுநீரகக் கற்களை உடைக்கும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குணப்படுத்தும். தண்ணீர் தாகத்தை நீக்கும். நாக்கில் ஏற்படும் ருசியின்மையை மாற்றும். குடல் வாயுவுடன் சேர்ந்து பித்தம் ஏற்படுத்தும் வேக்காளத்தை அடக்கும். பித்த ரக்தம் எனும் பித்த சூட்டை ரத்தத்தில் அதிகப்படுத்தி உடலெங்கும் ஏற்படும் எரிச்சலைக் குணப்படுத்தும். விந்தணுக்களில் வாயுவின் வரவால் ஏற்படும் வறட்சி, அவற்றில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்துவிடும்' என்று கூறுகிறது.

  தன்வந்தரி நிகண்டுவில் - "கொடியினத்தைச் சார்ந்த காய்களில், பூசணிக்காய் மிகவும் உயர்ந்தது. குடல் சார்ந்த வாத பித்த தோஷ சீற்றத்தை அடக்கக் கூடியது' என்று வர்ணிக்கிறது.

  ராஜ நிகண்டுவில் - "பழது பட்டுப்போன உடல் உறுப்புகளை புஷ்டிப்படுத்தும் திறனுடையது' என்று கூறப்பட்டுள்ளது.

  ஆயுர்வேத மருந்துகளில் பழுத்த கல்யாணப் பூசணிக்காயைக் கொண்டு - கூச்மாண்ட ரசாயனம் என்ற மருந்து மிகவும் பிரசித்தமானது. இந்த மருந்து வறட்டு இருமல், விக்கல், காய்ச்சல், மூச்சிரைப்பு, ரத்தபித்தம், நெஞ்சுப்புண், காசநோய் ஆகியவற்றைப் போக்கும். நெஞ்சுக் கூட்டிற்கு நல்ல வலுவூட்டும். ஞாபக சக்தி, எத்தனை பழைய விஷயமாக இருந்தாலும் நினைவுபடுத்தி எடுத்துக் கூறும் திறமை, உடல் மற்றும் மன வலுவைக் கூட்டும் சக்தி உடையது. அச்வினி தேவர்கள் எனும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருத்துவர்களால் கூறப்பட்டதாகும். இதயத்திற்கு ஏற்றதாகும்.

  வட இந்தியாவில் பூசணிக்காய் அல்வா மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. நல்ல இனிப்புச் சுவையுடைய இந்த அல்வா, உடலை வளப்படுத்துகிறது. தோலை நல்ல நிறமாக மாற்றுகிறது. மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறுது. அதனால் நீங்கள் பூசணிக்காய் சாப்பிடுவதால் நல்ல பலன்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

  க்ஷயம் எனும் கடுமையான இருமல் உபாதையால் ஏற்படும் உடல் பலவீனம், இளைப்பு, பெண்களுக்கு ஏற்படும் கடும் உதிரப்போக்கு, ருசியின்மை, மூலம் போன்ற உபாதைகளுக்கு - வெண் பூசணிச்சாறு 3.2 லிட்டர், வெல்லம் 3 கிலோ சேர்த்து பாகு வைத்து, வெண் பூசணி துருவல் நெய்விட்டு வறுத்து - 750 கிராம் சேர்த்துக் கிளறி, லேகிய பதம் வரும் போது, ஏல அரிசி, கிராம்பு, மிளகு, ஓமம், சுக்கு, பச்சிலை, திப்பலி ஆகியவை வகைக்கு 50 கிராம், கற்கண்டு 400 கிராம், நெய் 200 மி.லி. சேர்த்துக் கிளறி, பசித்தன்மைக்கு ஏற்ப 5 முதல் 10 கிராம் வரை சாப்பிட குணமாகும்.

  (தொடரும்)
  பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
  செல் : 94444 41771

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai