Enable Javscript for better performance
கை மரத்துப் போவது ஒரு நோயா? தீர்வு உண்டா??- Dinamani

சுடச்சுட

  

  கை மரத்துப் போவது ஒரு நோயா? தீர்வு உண்டா??

  By டாக்டர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 31st May 2018 11:00 AM  |   அ+அ அ-   |    |  

  helmet1

  என்னுடைய தொழில் அபிவிருத்திக்காக அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் அடிக்கடி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். அப்படி பயணம் செய்யும் போது, வலது கை முழுவதும் மரத்துப் போகிறது. வண்டி ஓட்டும் போதே, கையை கீழே தொங்கவிட்டு, மெதுவாக உதறிக் கொண்டால் சரியாகிறது. மறுபடியும் ஓட்டும் போது ஏற்படுகிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்தலாம்?
   -சாய்ராம், சேலம்.

  தலை, உடலுடன் உட்காரும் கழுத்தின் முதுகுத் தண்டுவடப் பகுதியில் அமைந்துள்ள எலும்புகளின் இடையேயுள்ள வில்லைகளின் உயரம் குறைதல், அவற்றிலுள்ள நீர்ப்பசையான தன்மை வறண்டு, விரிசலடைதல், அவை தம் இடம் விட்டு நழுவி, சுற்றியுள்ள நரம்புக் கூட்டங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துதல், எலும்பு அடுக்குகளின் உட்புற விட்டம் குறைதல் போன்றவை, நீங்கள் குறிப்பிடும் உபாதை தோன்றுவதற்குக் காரணங்களாகலாம். 

  வலது தோள்பட்டையினுள்ளே அமைந்துள்ள ஜவ்வுப்பகுதியின் அடர்த்தியின் குறைவு காரணமாகவும் கை எலும்புப் பந்து போன்ற பகுதி, தான் பதிந்துள்ள குழியினுள்ளே ஏற்படுத்தும் உரசல்களாலும், அப்பகுதியைத் தாங்கி, கையை உயரே தூக்கவும், தாழ்த்தவும், நீட்டவும், மடக்கவும் உதவக் கூடிய தசை நார்களில் ஏற்படும் வலுவின்மையாலும் இந்த உபாதை ஏற்படக் கூடும். கழுத்து எலும்புத் தண்டுவடப் பகுதியில் ஒரு விதமான அழுத்தத்தையும், எளிதில் தலையை இடம், வலம், மேல், கீழ் என்ற வகையில் உருட்ட முடியாத அளவிற்குச் சிறுவலியையும் நீங்கள் உணர்ந்தால், அந்த குறுத்தெலும்புப் பகுதியை, MRI SCAN  எடுத்துப் பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த ஸ்கேன் ரிப்போட்டில், அப்பகுதியிலுள்ள அனைத்துப் பிரச்னைகளையும் நாம் நன்கு அறியலாம். வலது தோள்பட்டைக்கும்  இது போலவே ஸ்கேன் செய்து பார்த்தால் விவரம் நன்கு அறிய முடியும்.

  தலையிலுள்ள எலும்பு, மூளை ஆகியவற்றின் கனத்தை, கழுத்திலுள்ள குறுத்தெலும்புகளே தாங்க வேண்டிய நிர்பந்தமிருப்பதால், அதன் கனத்தைக் குறைக்கும் வகையில், நிறைய நேரம் படுக்கையில் படுத்து, தலையணையில் தலையை வைத்துக் கொண்டால், தலையிலுள்ள கனமானது தலையணைக்கு மாற்றப்படுவதால், கழுத்திலுள்ள தண்டுவட எலும்புகளுக்கு ஏற்படும் அழுத்தமானது குறைகிறது. அவற்றிற்கு ஓய்வும் கிடைப்பதால், தற்சமயம் மருத்துவர்கள், இந்த உபதேசத்தை, உங்களைப் போன்றவர்களுக்கு அதிகம் வழங்குகிறார்கள். பிரத்யேக வடிவத்தில் இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே, தலையணைகள் செய்யப்படுகின்றன.

  வண்டி ஓட்டும் போது, வலது கையை THROTTLE செய்தால் தான் வண்டி சீரான வேகத்தில் ஓடும். HANDLE BARலிருந்து கையை எடுத்து தொங்க விட்டாலோ, உதறினாலோ வண்டியினுடைய வேகம் குறைவதற்கு வாய்ப்புள்ளதால், பின்னால் வரும் வாகனங்கள், பக்க வாட்டில் வரும் வாகனங்களின் தூரம் ஆகியவற்றையும் கவனித்தறிந்து மிக கவனமாக ஓட்ட வேண்டியிருப்பதால், ஒருவித பதட்டம் மனதளவில் எழக்கூடும். இதனால், நீங்கள் வாகனம் ஓட்டும் போது, இடது பக்கமாக சாலையில் சீரான வேகத்தில் மட்டுமே செல்வது நல்லது. நல்ல தரமான தலைக்கவசம் அணிதலும் அவசியமாகும். 

  கழுத்து வில்லைப் பகுதிகளையும், தோள்பட்டைப் பகுதியையும் வலுவூட்டக் கூடிய நல்ல மூலிகைத் தைலங்கள் பலவுள்ளன. உங்களுடைய உடல் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, மூக்கினுள் விட்டு உறிஞ்சி, நெற்றியில் இதமான வெந்நீரில் பிழிந்தெடுத்த துணியைக் கொண்டு ஒத்தடமிடுதல், தலையில் மூலிகைத் தைலத்தை வெது வெதுப்பான ஊறவிடும், "பிசு' எனும் சிகிச்சை முறை, கழுத்து எலும்பு, தோள் பட்டைகளில், தைலத்தை இளஞ்சூடாக, சுமார் முக்கால் மணி நேரம் ஊற வைத்து அப்பகுதியில் மூலிகை வேர்களைக் கொண்டு காட்டப்படும் நீராவி சிகிச்சை முறை, குடலில் வாயுவினுடைய சீற்றம் ஏற்படாத வகையில் உணவு முறை மாற்றம், ஆசனவாய் வழியாக செலுத்தப்படும், தைலம் மற்றும் கஷாயங்களால் குடல்களில் தங்கியுள்ள காற்று மற்றும் மலங்களை வெளியேற்றுதல், சித்தாமுட்டி வேர்க் கஷாயத்தை, நவர அரிசியுடன், பாலுடனும் வேக வைத்து, அந்த சாதத்தைக் கொண்டு, கிழிகட்டி கழுத்தெலும்பு மற்றும்  தோள் பட்டையில் இதமாகவும், பதமாகவும் வெது வெதுப்பாகவும் உருட்டித் தேய்த்தல் போன்ற சிறப்பான ஆயுர்வேத சிகிச்சை முறைகளால் நீங்கள் பயனடைய வாய்ப்புள்ளது. உள் மருந்துகள், நபருக்கு நபர் இவ்விஷயத்தில் மாறக் கூடுமென்றாலும், நல்ல தரமான ஆயுர்வேத மருந்துகளுமுள்ளன. 

  வில்லைகளை வலுப்படுத்தும் மஹாராஜ பிரசாரணி எனும் கேப்ஸ்யூல் மருந்தை ஒரு பொது மருந்தாக காலை, இரவு உணவிற்குப் பிறகு வெது வெதுப்பான தண்ணீருடன் சில மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  (தொடரும்)

  பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
  செல் : 94444 41771

  kattana sevai