Enable Javscript for better performance
புதைய- Dinamani

சுடச்சுட

  
  books

  நல்லாசானின் நற்குணங்கள்

  (ஆசிரியர் கூட்டம் நடக்கும் அறையில் ராஜாராமைச் சுற்றிலும் நான்கைந்து பேர் அமர்ந்து காரசாரமாக  விவாதித்துக் கொண்டிருக்க தலைமை ஆசிரியர் அறிவொளி உள்ளே நுழைந்ததும் சலசலப்பு அடங்கி நிசப்தமானது.  

  அறிவொளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தும் முதல் கூட்டம் என்பதால் என்ன சொல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும், சுற்றறிக்கையில் வந்ததுபோல் இன்னும் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப் போகிறாரோ என்ற அச்சமும் பொதுவாக நிலவியது. 

  உதவித்தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று அமர்ந்தபின் எழுந்த அறிவொளி எதுவும் பேசாமல்  அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை ஆன் செய்து ப்ரொஜெக்டரில் ஒரு பவர் பாயிண்ட் ப்ரசன்டேஷனைக் காண்பித்தார். 

  அதில் ஒருவர்  தான் தயாரித்த பென்சில் மிகச்சிறந்த பென்சில் ஆவதற்கான ஐந்து வழிகளைக் கூறுகின்றார்.

  1. பல உன்னதமான காரியங்களை உன்னால் சாதிக்க முடியும்.ஆனால் அதற்கு நீ பிறருடைய கையில் இருக்க சம்மதிக்க வேண்டும்.

  2.அவ்வப்போது நீ கூர்மை படுத்தப்படுவாய். அது வலி  மிகுந்ததாயினும் நீ இன்னும் சிறந்த பென்சிலாக உதவும்.

  3. நீ செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உன்னால் முடியும்.

  4.உனக்குள்ளே என்ன உள்ளது என்பதைப்  பொறுத்தே உன் தகுதி நிர்ணயிக்கப்படும் என்பதை மறந்து விடாதே.

  5.எத்தகைய கடினமான சூழ்நிலை வந்தாலும் எழுதுவதை நிறுத்திவிடாதே. உன் காலத்திற்குப் பின்னும் நிலைத்து நிற்கக்  கூடியப் பதிவுகளை விட்டுச் செல்வதே நீ  படைக்கப்பட்டதற்கான நோக்கம்.

  பென்சில் தன படைப்பாளரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது.

  சிறந்த ஆசிரியராக விரும்புகின்றவர்களும் இந்த ஐந்து வழிகளை பின்பற்றுதல் நலம்.

  1.உங்கள் பணியில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்போது உங்களாலும் மிகப்பெரிய காரியங்களை சாதிக்க முடியும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள திறமைகளை மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

  2.அவ்வப்போது பல வலிதரும் அனுபவங்களை பெறுவீர்கள் .ஆயினும் அவை உங்களை வலிமை உள்ளவர்களாக்கும்.

  3.தவறும்போதெல்லாம் தவறைத்  திருத்திக் கொள்ள முயலுகையில் நீங்கள் வளர அது வாய்ப்பினைத்தரும்.

  4. உங்களிடம் இருப்பதைத்தான் பிறருக்கு கொடுக்க முடியும். எனவே உங்கள் அறிவினை வளப்படுத்திக் கொண்டே இருங்கள்.  

  5.உங்கள் பணிச்சூழல் எத்தகையதாக இருந்தாலும் உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மாணவனின் வாழ்விலும் நல்ல  மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

  நாம் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாக முழுமையடையும்.

                                                                    நன்றி 

  கடைசி ஸ்லைடு நன்றி என்ற வார்த்தையுடன் முடிந்ததும் ஆசிரியர்கள் திரையில் கண்டதை உள்வாங்கியதன் வெளிப்பாடாக தங்களையும் அறியாமல் கைகளைத்தட்டினர். ஆவேசமாக இருந்த ராஜாராமே சற்று சுருதி குறைந்து போனார் என்றுதான் கூறவேண்டும்.

  அறிவொளி எழுந்ததும் கரவொலி அடங்கி நல்லதோர் அமைதி நிலவியது.)

  அறிவொளி: அன்பான ஆசிரிய பெருமக்களே! ஒரு நல்ல பென்சிலாக நாமிருந்தால் நம்பெயர் மாணவர்களின் உள்ளங்களில் கல்வெட்டாகப் பதிந்துவிடும். மாணவர்கள் பலவிதமானக் குடும்பச்சூழலிலிருந்து வருபவர்கள். குடித்துவிட்டு வந்து அடிக்கும் அப்பா, பெற்றோர்களுக்கிடையே எப்போதும் சண்டை என பலருக்கு  வீட்டில் படிப்பதற்குரிய வாய்ப்பே இல்லாதபடி சிக்கலான பின்னனியிலிருந்து வருகின்றனர் . அவர்களது நிறை குறைகளை புரிந்துகொண்டு எல்லா மாணவர்களும்  வகுப்பறையிலேயே முழுமையாகக் கற்றுக்கொள்ளும் படியாக பலவிதமான வழிமுறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.   ஒரு மேய்ப்பன் தன் மந்தையை வழிநடத்துவது போல ஒரு மாணவனும் தவறிப்போகாமல் பார்த்துக்கொள்வது நம் பொறுப்பு.. 

  இளங்கோவன்: பலவிதமான வழிமுறைகள்னு நீங்க எதை சொல்றீங்க சார்?

  அறிவொளி: அதை சொல்றதுக்கு முன்னாடி மனிதர்களுக்கு  எட்டு விதமான  அறிவுத்திறன் இருக்கின்றது உங்களுக்குத் தெரியுமா சார்?

  (இளங்கோவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவே அறிவொளி தொடர்ந்து  பேசலானார்)  

  முதலாவது அறிவுத்திறன்  மொழித்திறன். பாரதியார்,  தாகூர்,  ஷேக்ஸ்பியர் போல  ,கதை, கட்டுரை ,கவிதை என எழுத வல்லவர்கள் இவர்கள். ஏன் நம்ம கூடவே இருக்கும் ராஜாராம் சார் மொழித்திறன் மிக்கவர்.  அறிவிப்புப் பலகையில் இருந்த அவரோட கவிதையைப் படிச்சேன்.

  சூரியன் 

  பகலெல்லாம்  விளையாடிய களைப்பு 

  இரவெல்லாம்  குளித்து எழுந்தது 

  செக்கச்செவேலென நெருப்புப்பந்து.

  சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதும் மீண்டும் காலையில் கிழக்கில் உதிப்பதும் அன்றாட நிகழ்வு. ஆனா அதை எவ்வளவு அழகான கற்பனை நயத்தோடு உருவகித்திருக்கார்! பிறர் கையில் விளையாட்டுப் பொருளாக இருக்கக்கூடிய ஒரு பந்து தானே நாள்முழுதும்  விளையாடுவது போலவும் அந்த களைப்பு நீங்க இரவு முழுக்க கடலில் அழுக்கு போக குளித்து  காலையில் சிவப்பாக நெருப்பு பந்து போல வெளிவருவது போன்ற  அவரோட கற்பனை   கன்னியாகுமரி கடற்கரையின் அதிகாலை அழகை நம் கண்முன்னே கொண்டுவந்துவிட்டது . இதுல இன்னும் சிறப்பு என்னன்னா காலைல ஒரு பையன் அதைப் படிச்சிட்டு நெருப்புடான்னு ரஜினிகாந்த் பாட்டு ஸ்டைல்ல பாடிக்கிட்டே போனான். சிலபேர் கவிதை எழுதுறேன்னு யாருக்குமே புரியாத மாதிரி எழுதுவாங்க. என்னைப்பொறுத்தவரை கவிதை என்பது எளிமையா எல்லோரும் ரசிக்கும்படியா இருக்கணும். அந்தவகையில் ராஜராம்சார் ஒரு சிறந்த கவிஞர்.

  (எல்லோரும் ராஜாராமைத் திரும்பிப்பார்த்து கைகளைத் தட்ட, அவர்  ஒரு குழந்தையின் மகிழ்ச்சியோடு எழுந்து அறிவொளிக்கு நன்றி சொல்லி அமர்ந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன் இருந்த அவரது மனநிலை இப்போது தலைகீழாக மாறிப்போயிருந்தது.)

  [பாராட்டுவதற்கும் புகழ்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.ஒருவரைத் தகுதிக்குமீறிப் பாராட்டுவது அவருக்கு எதிரான ஆயுதமாகக்கூட மாறிவிடலாம். ஆனால் ஒருவரைப்பற்றிய குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி  நுட்பமாக பாராட்டுவது பகையாளியையும் நண்பராக மாற்றிவிடும். ]

  தேடலாம்...

  பிரியசகி 

  priyasahi20673@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai