புதையல் 36

படித்து நல்ல வேலைக்குச் சென்று தன் தாயை நன்றாகப் பார்த்து கொள்ள வேண்டுமென்பதே
புதையல் 36

மகிழ்ச்சியெனும் புதையல்!

(படித்து நல்ல வேலைக்குச் சென்று தன் தாயை நன்றாகப் பார்த்து கொள்ள வேண்டுமென்பதே தன் குறிக்கோள் என்று கூறிய விஷ்ணுவிடம் அறிவொளி குறிக்கோள் என்பது சுயநலம் சார்ந்ததாக மட்டும் இருக்கக் கூடாது என்றும் அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் விளக்கலானார்)

அறிவொளி : குறிக்கோள் என்பது தனக்கு மட்டுமோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமோ நன்மை தருவதாக இல்லாமல் இந்த சமுதாயத்துக்கு உதவக் கூடியதா இருக்கணும். ஒரு முறை இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசியதை  கேட்டேன். 'இளங்கலை பட்டப்படிப்புக்காக கல்லூரியில் நுழைந்த போது ஐ.ஏ.எஸ் ஆக வேண்டுமென்ற நோக்கமெல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் மட்டும் இருந்தது. அந்த எண்ணம் தான் என்னை ஐ.ஏ.எஸ் ஆக்கியது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆகி நிறைய சம்பாதித்து நன்றாக வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று சுயநலமான குறிக்கோளோடு கல்லூரிக்குள் நுழைந்த யாருமே ஐ.ஏ.எஸ் ஆகவில்லை', என்றார். 

நம் எண்ணங்கள் மேலானதாக  குறிக்கோள் உயர்வானதாக  இருக்கும் போது அதை அடையத் தேவையான எல்லா உதவிகளும் இந்த உலகத்தில் எந்த முலையிலிருந்தாவது நமக்குக் கிடைச்சுடும் என்பதை நானே என் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணர்த்தியிருக்கிறேன்.

கார்த்திக் : சார் எனக்கும் கூடத்தான் பெரியவனான பிறகு என்னை மாதிரி ஏழை பசங்க படிப்புக்கு உதவி செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனா எனக்கோ படிப்பு மண்டையில ஏறவே மாட்டேங்குது. நான் எங்கிருந்து ஐ.ஏ.எஸ் படிப்பெல்லாம் படிக்குறது!

விஷ்ணு : ஏண்டா உனக்கு எவ்வளவு தான் சொன்னாலும் திருப்பி இதே மாதிரி நம்பிக்கையில்லாம பேசற. சார் தான், வருமானத்துறை ஆணையர்  நந்தகுமார் மாதிரி நிறையப் பேரைப் பத்தி சொல்லி இருக்காரே! உங்கிட்ட இல்லாததைப் பத்தியே கவலைப் பட்டுக்கிட்டிருக்கியே, இருக்கிறதைப் பத்தி சந்தோஷப்படவே மாட்டியா?

சந்தோஷ் : ரொம்ப சரியா சொன்ன விஷ்ணு. ஒரு கட்டிடத்துக்கு எப்படி பலமான அஸ்திவாரம் முக்கியமோ அதுபோல ஒரு மனிதனோட வெற்றிக்கு அவனோட மனப்பாங்கு (Attitude) ரொம்ப முக்கியம். 100% வெற்றியில் 85% சதவிகிதத்தைத் தீர்மானிப்பது மனப்பாங்கு தான். மீதமுள்ள 15% தான் அவனுடைய அறிவு, திறமை மற்றவை எல்லாம். ஆனா இப்பல்லாம் நம்ம நாட்டில் கல்விக்காக செலவிடப்படும் பணத்தில் பெரும் பகுதி அறிவை வளர்க்கும் புள்ளி விவரங்களை மாணவர்களின் மூளைக்குள் திணிப்பதற்காகத்தான் செலவிடறாங்களே தவிர நேர்மறையான மனப்பாங்கை வளர்க்க அல்ல. அதனாலதான் படிச்ச இளைஞர்களே ஆடம்பர செலவுக்காக கொலை கொள்ளையில் ஈடுபடுறாங்க.

விதைகள் நல்லதா இருந்தாலும் அது விழும் நிலத்தைப் பொறுத்துதான் பலன் தரும். பாறையில் விழுந்த விதை நல்ல விஷயங்கள் சொல்லப்படும் போது மகிழ்ச்சியோடு கேட்பவர்களைக் குறிக்கும். ஆனால் நம்பிக்கை என்ற வேரற்றுப் போவதால் கொஞ்ச நாட்களிலேயே சோர்ந்து போய் பழையபடி ஆகிடுவாங்க. முச்செடிகளுக்குள் விழுந்த விதை தீயபழக்கங்களுடைய நண்பர்கள், மற்றும் அன்றாட வாழ்வின் இன்ப துன்பங்களால் நெருக்கப்பட்டவர்களைக் குறிக்கும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ நல்ல மனப்பான்மையோடு, நல்ல வார்த்தைகளைக் கேட்டு, மன உறுதியோடு அதைக் கடைப்பிடித்து பலமடங்கு பலன் தருபவர்களைக் குறிக்கும். அதனால கார்த்திக், எப்பவும் ஒரு விஷயத்துல தெளிவா இரு. உன்னோட வெற்றி என்பது நீ இப்போ இருக்கும் நிலையைப் பொறுத்ததல்ல. அது உன் மனநிலையைப் பொறுத்ததே.

கார்த்திக்: நல்ல நிலமா என் தகுதியை வளர்த்துக்க முயற்சி செய்றேன் சார்.

அறிவொளி : கார்த்திக், எதை உன் மனசு அதிகமா விரும்புதோ அதை நீ அடைந்தே தீருவாய். ஒரு முறை ஒரு ஜென் குரு ஆத்துல குளிச்சுக்கிட்டிருந்தப்போ ஒரு இளைஞன் அவரிடம், 'அய்யா வாழ்க்கையில நிறைய தோல்விகளை சந்திச்சிட்டேன். நான் வெற்றி பெற என்ன வழி?', என்று கேட்டான். அவர் அவனைப் பக்கத்துல கூப்பிட்டு, எதிர்பார்க்காத தருணத்துல தண்ணீருக்குள் பிடிச்சு அழுத்தினார். முதலில் மூச்சு திணறி கை காலை உதறியவன் பிறகு உயிர் பிழைப்பதற்காக ஆனமட்டும் பலங்கொண்டு அவரை உதைத்து தள்ளிவிட்டு தண்ணீருக்கு மேலே வந்தான். இரண்டு நிமிடம் தேவையான அளவு பிராணவாயுவை உள்ளிழுத்து தன்னைச் சமநிலைப் படுத்துக்கொண்டான். பின் குருவைப் பார்த்து கோபமா, 'இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு என்னைக் கொல்லப் பார்த்தீங்க?' என்றான். அவர் ரொம்ப அமைதியா ,'நான் எங்கே உன்னைக் கொல்லப் பார்த்தேன், நீ கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னேன்னார். அவன் நீங்க சொல்றது எனக்குப் புரியலையேன்னான். 

'நீ தண்ணிக்குள் இருந்தப்போ எதை அதிகமா விரும்பினாய்?'  

'காற்று'

'அது கிடைக்கலைன்னதும் என்ன செய்தே?'

காற்று எனக்குக் கிடைக்கத் தடையா இருந்த உங்களை உதைத்துத் தள்ளிவிட்டு மேலே வந்து எனக்குத் தேவையான காற்றை எடுத்துக்கிட்டேன்.'

'சரி, அதேதான் வெற்றிக்கான வழியும். எந்த அளவு காற்றை விரும்பினாயோ அதே அளவு வெற்றியை விரும்பு. அதை அடைய எந்தத் தடை வந்தாலும் அதைத் தகர்த்தெறிஞ்சுட்டு வெற்றியை நோக்கி உழை. குறிக்கோளை நோக்கிய தொடர் உழைப்பு உன்னை வெற்றியின் வாசலுக்கே கொண்டுபோய் விட்டுடும்.  ஆனால் அங்கேயே தேங்கி நின்று விடாமல் அதற்கடுத்த நிலைக்கு இலக்கைத் தொடர்ந்து நகர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்', என்றார். இது உனக்கான பாடம் கார்த்திக். 

சந்தோஷ் : சிறிய தீயால் அதிக வெப்பத்தைத் தர முடியாது. பலவீனமான ஆசையால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியாது. சிறிய இலக்கு பெரிய குற்றம்னு நம்ம அப்துல் கலாம் அய்யாவே சொல்லியிருக்கார். பெரிய இலக்குக்காக ஆசைப்படுங்க. சார் சொன்ன மாதிரி அது உங்களைச் சார்ந்ததா மட்டுமில்லாம இந்த சமுதாயம் சார்ந்ததா இருக்கட்டும். அதை அடைஞ்சுட்டதாக ஒவ்வொரு நாளும் கற்பனை பண்ணிக்கோங்க. எல்லாத்துக்கும் மேல உங்களை முழுசா ஏற்றுக் கொண்டு அன்பு செய்யுங்க.

கார்த்திக்: என்னை நானே அன்பு செய்தா அதை சுயநலம்னு சொல்லிடுவாங்களே சார்! 

சந்தோஷ்: இல்லை கார்த்திக், தன்னை முழுசா ஏத்துக்குறவங்களால மட்டும் தான் மத்தவங்களை ஏத்துக்கிட்டு அன்பு செய்யவும், பிரதி பலன் எதிர்பார்க்காம உதவவும் முடியும்.

அறிவொளி : நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவது எப்படின்னு உங்களுக்குத் தெரியுமா?

விஷ்ணு : தெரியாது சார்.

அறிவொளி : அரட்டை அடிக்கிறது, சினிமாவுக்குப் போறது, ஹோட்டலுக்குப் போய் பிடிச்ச உணவை சாப்பிடுறது  இது மாதிரி ஐம்புலன்களால் கிடைக்கும் இன்பம் அந்த நேரம் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியைக்  கொடுக்கும். தனக்கு தனக்கு பிடித்த வேலையை செய்வது சிறிது காலம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் . ஆனால் எந்தவித எதிர்பார்ப்புமே இல்லாம மத்தவங்களுக்கு நீ செய்யக்கூடிய உதவிதான் உன் வாழ்க்கையில எப்ப நீ நினைச்சுப் பார்த்தாலும் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும் என்று  அமெரிக்காவின் தலைசிறந்த மனோத்தத்துவ நிபுணர் செலிங்மேன் சொல்லறார். இதுக்காக இவர் நிறைய உளவியல் ஆய்வுகள் செய்திருக்கார்.

விஷ்ணு : அப்படியா! என்ன ஆய்வு செத்திருக்கார் சார்? 

அறிவொளி : ஒரு நாள் தன் மாணவர்களிடம்   இன்னைக்கு உங்களுக்கு வகுப்பு கிடையாது நாம்  சினிமாவுக்கு போகலாம்னு அழைச்சுட்டுப் போனார். திரும்பி  வந்த பிறகு அவர்களுக்கு ஒரு கேள்வித் தாளை கொடுத்து அவங்களோட மனநிலையைப் பத்தி எழுதச் சொன்னார். அதில் அவங்க எல்லோருமே சந்தோசமாக இருந்ததா எழுதியிருந்தாங்க.

சில மாதங்கள் கடந்த பிறகு அதே மாணவர்களுடைய வகுப்புக்குப் போய் இன்னைக்கு உங்களுக்கு வகுப்பு கிடையாது, பக்கத்துல இருக்கும் தாய், தந்தை இல்லாத குழந்தைகள் வாழும் விடுதிக்குப் போகலாம் அங்க இருக்கும் அந்த குழந்தைகளுக்கு நீங்க எந்த விதமான உதவி வேணா செய்யலாம் என்று சொல்லி அழைத்துப் போனார். அங்கு மாணவர்கள் சிலர் குழந்தைகளோட பாட்டுப் பாடி, நடனம் ஆடி, கதை சொல்லி, குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் உதவி செய்து நேரத்தை செலவிட்டனர். இப்போதும்  செலிங்மேன் ஒரு வினாத்தாளைக் கொடுத்து அவர்களோட மகிழ்ச்சியை அளவிடச் சொன்னபோது உச்சக்கட்ட மகிழ்ச்சியைத் தான் அடைந்ததாக   எல்லோரும் கூறினார்கள்.

சில மாதங்கள் கழித்து இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு எது அதிக மகிழ்ச்சியை கொடுத்தது என்று கேட்ட போது பலருக்கு தான் பார்த்த சினிமாவைப் பற்றிய பல விஷயங்கள் மறந்து போயிருந்தது. ஆனால் குழந்தைகளோடு செலவிட்ட ஒவ்வொரு வினாடியும் அவர்களால் மகிழ்ச்சியோடு  நினைவு கூற முடிந்தது . இப்படி அடுத்தவர்களுக்கு தன்னாலான உதவியை செய்து அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வதுதான் உண்மையான நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும்  எனத்  தன் ஆய்வை நிறைவு செய்தார்.

சந்தோஷ் : கேட்கும் போதே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இந்த மாதிரியான அனுபவங்களை பிள்ளைகளுக்குக் கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும் இல்லையா?

அறிவொளி : ஆமா சந்தோஷ் அதனாலதான் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம், நாட்டு நலத் திட்டம், தேசிய மாணவர் பசுமைப்படை போன்ற இயக்கங்களில் களப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . புத்தகங்களில் பெறும் அறிவை விட பிள்ளைகளின் இந்தக் களப்பணிகளில் பெறக் கூடிய அறிவு அவர்களது வாழ்க்கைக்கு ரொம்ப உதவியா இருக்கும். பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுக்கும் போது வெறும் மதிப்பெண்களைக் குறி வைத்து மாணவ இயந்திரங்களை உருவாக்கும் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காமல் முழு ஆளுமை வளர்ச்சிக்கும் உதவக் கூடிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கணும். முக்கியமா பிள்ளைகளை நன்றி உணர்வுள்ளவர்களாக வளர்க்கணும். இதில் பெற்றோர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு.

கார்த்திக் :  எது பற்றிய நன்றியுணர்வு சார் ?

அறிவொளி : உன்கிட்ட இல்லாததைப் பத்தியே கவலைப் பட்டுக்கிட்டு இருக்கியே, இருக்கறதை பத்தி சந்தோஷப்பட மாட்டியானு விஷ்ணு உன்னை ஒரு கேள்வி கேட்டானே நினைவிருக்கா? அதைத்தான் நன்றியுணர்வுன்னு நான் சொல்றேன். நம்மிடம் இருப்பது எல்லாவற்றையும் குறித்து இறைவனுக்கோ, இயற்கைக்கோ நன்றி சொல்லணும்.

ரோண்டா பைர்ன் என்பவர் ஆங்கிலத்தில் 'சீக்ரட்' அப்படின்னு ஒரு புத்தகம் எழுதினார். ரொம்ப பிரபலமா பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற இப்புத்தகம் மாயாஜாலம் என்று தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டது . இப்புத்தகத்தோட மையக் கருத்தே 'நேற்றும் இன்றும் நடந்தவற்றிற்காகவும், நாளை நடக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் அனைத்திற்காகவும் நன்றி கூறுங்கள், அதிசயங்களைக் காண்பீர்கள்' என்பது தான்.  நீங்களும் ஒவ்வொரு நாளும் இரவு தூங்கப் போவதற்கு முன் அன்றைக்கு நீங்கள் சந்தித்த இரண்டு நல்ல விஷயங்களுக்காக நன்றி சொல்லி விட்டு படுங்கள்.

விஷ்ணு : யாருக்கு நன்றி சொல்லணும் சார் ?

அறிவொளி : கடவுள் மேல நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளுக்கும், அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கைக்கும் நன்றி சொல்லலாம்.

கார்த்திக் : ஒரு வேளை அந்த நாளில் பெரிசா எதுவும் நல்ல விஷயம் நடக்காம ஒரு சாதாரணமான நாளாவோ   அல்லது துன்பமான நாளாவோ இருந்தா என்ன செய்யுறது?

அறிவொளி : நல்ல கேள்வி கார்த்திக், அந்த சாதாரண நாளை அல்லது இறப்பு முதலான துன்பமான நாளை அனுபவிக்க நாம உயிரோட இருக்கோம் என்பதே நன்றி சொல்லப்பட  வேண்டிய விஷயம் தானே !

கார்த்திக் : ஆமா சார், உண்மைதான்.

அறிவொளி : இப்படி ஒவ்வொன்னா நாம் யோசிக்க ஆரம்பிச்சா  நம் பெற்றோர், நமக்குக் கிடைத்த நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள், உண்ணும் உணவு, நாம் இருக்கும் இடம், சுவாசிக்கும் காற்று, நாம் நட்ட செடியில் பூத்த பூ, சாலையோரத்தில் பார்த்த அழகான  நாய்க்குட்டி என பெரியதில் ஆரம்பித்து ஒவ்வொரு  சின்ன விஷயத்துக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்துவிடுவோம்.

எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே பார்த்து நன்றி கூறும் இந்த பழக்கம், எதிர்காலத்தில் நடக்க வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றைக் குறித்தும் நன்றி கூறும்படி உங்களை மாற்றிவிடும். அது உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். சில வருஷங்கள் கழித்து யோசித்துப் பார்க்கும் போது, அடடா! இது எப்படி நடந்துச்சு என உங்களை மலைத்துப் போக வைக்கும். புரியுதா ?

கார்த்திக் : நல்லா புரிஞ்சது சார், நிச்சயமா இதையெல்லாம் நாங்க வாழ்க்கையில் பின்பற்றி நடப்போம் சார்.

விஷ்ணு : பள்ளிக்கூடமெல்லாம் முடிஞ்சுப் போனாலும் ஒரு நாள் பெரிய ஆளாகி  உங்களைக் கண்டிப்பா வந்து பாப்போம் சார்.

அறிவொளி : ஆசிரியர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தோஷமே இதுதான் தம்பிகளா. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தன்னை வந்து பார்ப்பவனை இவன் என்னோட மாணவன் அப்படின்னு சொல்லிக்குறதுல தான் ஆசிரியர்களுக்கு சந்தோஷமே. அதை  நீங்க நிச்சயம்  தருவீங்கன்னு எங்களுக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருக்கு. உங்களுக்குளே இருக்கும் திறமையை அடையாளம் கண்டு பிடிச்சு அந்தத் துறையில் தொடர்ந்து நம்பிக்கையோடு உழைப்பதோடு மற்றவர்களுக்கும் உதவும் குணத்தோடு வாழுங்க. நிரந்தர மகிழ்ச்சி என்னும் புதையல் நிச்சயம் கிடைக்கும்.

சரி நேரமாச்சு வீட்டுக்கு போயிட்டு வாங்க, நாளைக்கு பள்ளிக்கூடத்தில் பாப்போம்.

(விடை கூறி அனுப்பிய அறிவொளிக்கு சந்தோஷ், விஷ்ணு, கார்த்திக் மூவரும் நன்றி கூறி புறப்பட்டனர். அவர்களது விழிகளில் தெரிந்த நம்பிக்கை நிறைந்த நன்றியுணர்வையும், முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் காணும் போது இனி சந்தோஷ் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்குவார் என்பதிலும், கார்த்திக்கும், விஷ்ணுவும் தானும் உயர்ந்து இச்சமுதாயத்தையும் உயர்த்துவார்கள் என்பதிலும் சிறிதும்  சந்தேகமில்லை. அவர்களோடு சேர்ந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்ட நீங்களும் வாழ்வில் இன்றிருக்கும் நிலையை விட பல மடங்கு உயரவும், பலருக்கும் பயனுள்ள விதத்தில்  நிரந்தர மகிழ்வுடன் வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள்.)

நிறைவுற்றது 

அன்பும் நன்றியும்,

பிரியசகி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com