தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை
By kirthika | Published On : 28th May 2016 08:27 AM | Last Updated : 28th May 2016 08:27 AM | அ+அ அ- |

சென்னை : சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று.
ஆனால், தர்பூசணியைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக பார்த்து வாங்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்பூசணி பழங்களை வாங்கும்போது அதனை முழுமையாகச் சுற்றிப் பார்த்து வாங்க வேண்டும். அதில் ஊசி போட்டது போன்ற துவாரங்கள் இருந்தாலும் பழங்களை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் பழங்களில் ஊசி மூலம் சிறு சிறு துவாரம் போட்டு, அதனை தண்ணீரில் ஊறவைத்து எடையைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சி செய்வார்கள்.
இதுதவிர உடலுக்கு உபாதை விளைவிக்கும் வண்ணங்களை பழங்களுக்குள் செலுத்தி விற்பனை செய்வதாக வெளிமாநிலங்களில் புகார்கள் வந்துள்ளன. தமிழகத்தில் அதேபோன்ற புகார்கள் ஏதுமில்லை. இருப்பினும் பொதுமக்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். வியாபாரிகள் துண்டுகளாக விற்கும்போது சுகாதாரத்தோடு விற்பனை செய்ய வேண்டும். முத்திரையிடப்பட்ட எடைக் கற்களை பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் பழங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.