Enable Javscript for better performance
cure for head ache |கடும் தலைவலியா?- Dinamani

சுடச்சுட

  
  lady-with-headache

  உணவின் துணைப் பொருட்களைக் கொண்டே பல உடல் உபாதைகளைக் குணப்படுத்திக் கொள்ள முடியும். 

  • புளியை நீரில் கரைத்து அதில் மிளகு, கிராம்பு, ஏலம் இம் மூன்றையும் சிறிது தூளாக்கிக் கலந்து சர்க்கரை பச்சைக் கற்பூரம் சேர்த்துச் சாப்பிட சூட்டினால் ஏற்படும் தலைவலி, கண் எரிச்சல் நீங்கும்.
  • சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு ஊற வைத்து உலர்த்திப் பொடித்துச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட நல்ல பசி உண்டாகும்.
  • கர்ப்பம் தரித்தவர்களுக்கு 4 - 5 மாதங்களுக்குப் பின் வறுத்த பெருஞ்சீரகத்தை (சோம்பு விதை) வெந்நீரிலிட்டு ஊற வைத்து வடித்துச் சாப்பிட சிறுநீர் தாராளமாகப் பெருகும். உடம்பு லேசாக இருக்கும். அசதி தோன்றாது. வெகுட்டல், உமட்டல் இராது. கரு நன்கு வளரும்.
  • கொத்துமல்லி விதையையும் சோம்பையும் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு தினம் 1 - 2 வேளை வாயிலிட்டு மென்று சாப்பிட வாய் நாற்றம், ருசியின்மை, ஏப்பம் நீங்கும். மல்லியை ஓமம் சேர்த்தும் தனித்தும் தண்ணீர் விட்டு அரைத்துத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க, வயிறு உப்பி ஜீரணமாகாமல் வாந்தியாவதும், பேதியாவதும் குழந்தை இளைத்துச் சிடுசிடுப்பதும் தணியும். 
  • வாந்தியை ஏற்படுத்த சிறு கடுகை உபயோகிப்பதுண்டு. இரைப்பை சோம்பியிருந்தாலும், மார்பில் கபம் கட்டியிருந்தாலும், இரைப்பையில் பித்த சேர்க்கை அதிகமாக இருந்தாலும், ஏதேனும் விஷப்பொருளைச் சாப்பிட்டிருந்தாலும் வாந்தி எடுப்பது நல்லது. அதற்கு 5 - 6 கிராம் அளவு கடுகையும் 10 கிராம் இந்துப்பையும் தூளாக்கி அரைலிட்டர் சூடான வெந்நீரில் கலக்கிச் சிறிது சிறிதாகச் சாப்பிட சிறிது நேரத்தில் வாந்தி ஏற்படும். மறுபடியும் சிறிது சாப்பிட மறுபடியும் வாந்தியாகும். இப்படித் தேவையான அளவிற்கு வாந்தியானதும் நிறுத்திக் கொள்ளலாம். இதனால் உடலில் களைப்போ, ஆயாசமோ, உமட்டலோ தொடராது. இதனால் உட்சென்ற நஞ்சுப்பதார்த்தம் வெளியாகும். உணவே செரியாமல் தங்கி விஷம் போன்று ஸ்தம்பித்து மூச்சுத்திணறல் முதலியவை ஏற்படும் போது இதைக் கொண்டு வாந்தியை ஏற்படுத்தி சுகமடையலாம்.
  • 100 கிராம் ஓமம், 20 கிராம் மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்துத் தூளாக்கி வெல்லம் 120 கிராம் சேர்த்து நன்கு கலக்கும்படி இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, பொருமல், அஜீரணபேதி குறையும். 
  • கிராம்பு வயிற்று வாயுவைப் போக்கக் கூடியது. பேதி, வாந்தி, ரத்தக் கடுப்பு, கிராணி முதலியவற்றில் மலத்தைக் கட்டி வாயுவைச் சீராக வெளியேற்றி குடல் அழற்சியைப் போக்கக் கூடியது. சுண்டிச் சுண்டி ஏற்படும் வலியை அகற்றும். லேசாக வதக்கி வாயிலிட்டுச் சுவைக்க, தொண்டைப் புண் ஆறும். பற்களில் ஈறு கெட்டிப்படும். ஈறுகளில் அழற்சி குறைந்து பல்வலி நிற்கும். கடும் தலைவலியின்போது, கிராம்பைப் பாலிலோ தண்ணீரிலோ அரைத்துப் பற்றுப் போட்டால் நல்லது. 
  • சிறு குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் வயிற்றில் மப்பு வாயு சேர்ந்து வயிற்று வலி, உப்புசம், நீர், மலம் தங்கிக் குத்துவலி ஏற்படும் போது, பெருங்காயத்தைத் தண்ணீர்விட்டரைத்து லேசாகச் சுட வைத்து வயிற்றில் சந்தனம் போல் மெல்லிய பூச்சாகத் தடவி விட, நல்ல குணம் கிடைக்கும். மார்பில் சளி உறைந்த நிலையிலும், விலாப்பிடிப்பு, மென்னிப்பிடிப்புகளிலும், பெருங்காயத்தைப் பற்று இடலாம்.
  • காணாக்கடி போன்று உடலில் தடிப்புடன் வரும் பல அலர்ஜி தடிப்புகளில் வேளைக்கு 5 - 7 - 9 - 11 - 13 என்று கிரமமாக எண்ணிக்கையை அதிகமாக்கி மிளகைக் சாப்பிட்டுவர பித்தம் சீரடைந்து தடிப்பு குறைந்து விடும். வயிற்றில் ஜீரணமில்லாமல் போக்கு அதிகமாக இருக்கும் போது மிளகை நல்லெண்ணெய்யில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
  • வெந்தயம் - இதிலுள்ள குழகுழப்பும் நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவும். விதை, வெந்தயக்கீரையைப் போலல்லாமல், மலத்தை இறுக்க உதவக் கூடியது. வலியுடன் சீதமும் ரத்தமும் மலத்துடனோ மலமில்லாமலோ போகும்போது விதையை வறுத்துக் கஷாயமாக்கி தேனுடன் சாப்பிட மிகவும் நல்லது. குடலோட்டத்தில் தினமும் இரவில் தயிரில் விதையை ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட, வயிற்றுப்போக்கு குணமாகிவிடும்.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
  செல் : 94444 41771
   

  TAGS
  head ache
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai