கோடையை சமாளிக்க விதவிதமான ஜில்ஜில் சர்பத் ரெசிபி!

தகிக்கும் கோடை தொடங்கி விட்டது. வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது.
கோடையை சமாளிக்க விதவிதமான ஜில்ஜில் சர்பத் ரெசிபி!

தகிக்கும் கோடை தொடங்கி விட்டது. வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் குளிர்ச்சியான ஐஸ் வாட்டர், கெமிக்கல்கள் நிறைந்த குளிர்பானங்களை பருகிட மனம் நம்மையும் அறியாமல் நாடிச் செல்வது இயல்பு. ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு பெரும்பாலும் தீங்கைத் தான் விளைவிக்குமே தவிர நன்மைகளை அல்ல. கோடையில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடல் வறட்சியைத் தடுக்கவும், ஒருசில சர்பத்துகள் உதவும். உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் சில எளிய சர்பத் குறித்த செய்முறைகளை இப்போது பார்ப்போம். அதை தயாரித்து வைத்து அவ்வப்போது பருகி மகிழலாம்.

நன்னாரி சர்பத்

தேவையானவை: 

நன்னாரி வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 2 கிண்ணம் 
சர்க்கரை -1கிண்ணம் , எலுமிச்சைப் பழம் - 2 
சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை


செய்முறை: நன்னாரி வேரை, தண்ணீரில் கழுவி எடுத்து, பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடிவைக்கவும். சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும். நன்கு ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி, இத்துடன் சேர்த்துக் கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது, இந்த ஜூûஸ கால் டம்ளர் எடுத்து முக்கால் டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது, கூடுதல் சுவை தரும்.

இளநீர் சர்பத் 

தேவையானவை 
இளநீர் - 2 , கொத்துமல்லி - 1கைப்பிடி (நறுக்கியது) 
புதினா - 2 கைப்பிடி (நறுக்கியது) 
எலுமிச்சை இலை - 1-2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (விதையை நீக்கிவிடவும்)
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி, மல்லித் தூள் - அரை தேக்கரண்டி 
மிளகு - கால் தேக்கரண்டி, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை 

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, மிளகு, பெருங்காயத் தூள் சேர்த்து, தீயை குறைவாக வைத்து, லேசாக வறுத்து இறக்கி, குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் கொத்துமல்லி, புதினா, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி அரைத்தப் பொடி, நாட்டுச் சர்க்கரை, உப்பு மற்றும் தேவையான அளவு இளநீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை இளநீரில் வேண்டிய அளவு சேர்த்து கலந்து, எலுமிச்சை இலைகளையும் அத்துடன் சேர்த்து நன்கு கிளறி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் அதனை வடிகட்டினால், இளநீர் சர்பத் ரெடி! 
(குறிப்பு: இந்த சர்பத்தை செய்த பின்னர், மண் பானையில் ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் குடித்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் இன்னும் ஏராளம்.)

புளி சர்பத்


புளியில் உள்ள விட்டமின்களும், கனிமச் சத்துக்களும் உடல் வறட்சியால் இழக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுக்களை தக்க வைக்க உதவும். 
 

தேவையானவை: 
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 கிண்ணம்
கல் உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை: சிறிது புளியை வெல்லம் மற்றும் கல் உப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் நீர் சேர்த்து கையால் கரைத்து வடி கட்டினால், புளி சர்பத் ரெடி!

சப்ஜா சர்பத்

சப்ஜா சர்பத் சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அற்புத பானம். இந்த பானம் செரிமானத்திற்கு மட்டுமின்றி, உடல் வறட்சி அல்லது வெப்ப பக்கவாதம் வராமலும் தடுக்கும். 

தேவையானவை:

சப்ஜா விதை - கால் தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை: ஒரு டம்ளர் குளிர்ச்சியான நீரில் கால் தேக்கரண்டி சப்ஜா விதைகளை போட்டு ஊற வைக்க வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்தால் சப்ஜா சர்பத் ரெடி.

குல்கந்த் சர்பத்

ரோஜாப் பூ இதழ்கள் உடல் மற்றும் சருமத்தை இதமாக வைத்துக் கொள்ளும். கோடையில் ரோஜாப் பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்த்தை வைத்து சர்பத் தயாரித்து குடித்தால், உடல் சூடு குறையும். 

தேவையானவை:

குல்கந்த் அல்லது உலர்ந்த ரோஜாப்பூ இதழ் - 1 கைப்பிடி 
வெல்லம் - தேவைக்கேற்ப

செய்முறை: குல்கந்த் அல்லது உலர்ந்த ரோஜாப்பூ இதழ்களை, வெல்லம் கலந்த நீரில் 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை வட்டிகட்டிக் கொண்டு, அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, ஐஸ்கட்டிகளைச் சேர்த்தால் குல்கந்த் சர்பத் தயார்.

சோம்பு சர்பத்

சோம்பு சர்பத் உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள மட்டுமின்றி, உடல் வெப்பத்தையும் குறைக்கும். 

தேவையானவை: 

சோம்பு -  1 தேக்கரண்டி, தண்ணீர்  - 1 லிட்டர்
தேன் - தேவைக்கேற்ப

செய்முறை:  1 லிட்டர் நீரில்  சோம்பை  இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, தேன் கலந்தால், சோம்பு சர்பத் ரெடி.

- எல்.மோகனசுந்தரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com