தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா?

காலையில் நல்ல ஒரு டிகிரி காபியை சூடாக, உறிஞ்சிக் குடிப்பதில் கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது
தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா?

வயது 61. நான் ஒரு காபி பிரியன். நண்பர் சொன்னதைக் கேட்டு, சர்க்கரை உபாதையைக் குறைக்க வெந்தயத்தையும் நெல்லிக்காயையும் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை சாப்பிடுகிறேன். ஆனால் சூடான காபியை முதலில் குடித்த பிறகே, இந்த ஊறிய வெந்தயம், நெல்லிக்காயைச் சாப்பிடுகிறேன். ஆனால் அவர் இதை முதலில் சாப்பிட்ட பிறகு, 45 நிமிடங்கள் கழித்து தான் காபி சாப்பிட வேண்டும் என்கிறார். நிச்சயமாக என்னால் அது முடியாது. காலையில் நல்ல ஒரு டிகிரி காபியை சூடாக, உறிஞ்சிக் குடிப்பதில் கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது என்பதால், நான் என்ன செய்வது?

-ராமலிங்கம், வளசரவாக்கம்,  சென்னை.

நீங்கள் குறிப்பிடுவது சரியே! பொழுது முழுவதுமாக புலர்ந்திருக்கவில்லை. பல் துலக்கியவுடன், சூடான டிகிரி காபியை தேடி, நாக்கும் வாயும் பரபரக்கும். அது கிடைத்தவுடன், அதிலிருந்து வரும் நறுமணம் உறங்குபவர்களையும் தட்டி எழுப்பும், பார்ப்பதற்கே உவகையூட்டும் அதன் நுரையுடன் கூடிய தன்மை, ருசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஆனந்த விஷயமாகும்! "காபியை விட முடியாது என்று யார் சொன்னார்கள் நான் ஆயிரம் முறை விட்டிருக்கிறேன்!' என்று ஒரு விஞ்ஞானி கூறியது, உங்கள் கடிதத்தைப் படித்தவுடன் ஞாபகத்திற்கு வருகிறது. வெந்தயமும், நெல்லிக்காயும் அந்தச் சுவையை ஒருநாளும் தர இயலாதது தான்! ஆனால் எத்தனையோ மருத்துவச் சிறப்பு வாய்ந்த இந்தச் சேர்க்கை, சர்க்கரையை மட்டுமா குறைக்கிறது? வாய்ப்புண், குடல் புண், எலும்புகளினுள்ளே ஏற்படும் தேய்மானம், உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், சுண்ணாம்புச் சத்து குறைந்த நிலை, ரத்தத்தில் அதிக கொழுப்பின் அளவு போன்றவற்றையும் குறைக்கிறதே! காபிக்கு இவற்றைக் குணப்படுத்தும் திராணி இருக்கிறதா? இல்லையே, ஆனாலும் பாழாய்ப் போன நாக்கு நல்லதைக் காலையில் ஏற்க மறுக்கிறது!   

உடலுக்கு நன்மை செய்யும் இரு பொருட்களாகிய நெல்லிக்காயையும் வெந்தயத்தையும் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நீங்கள் மனதைத் திடப்படுத்திவிட்டால் அதன் பிறகு அவை செய்யும் நன்மைகள் எவை? என்று ஒரு பட்டியலே இடலாம். அவற்றில் சில-வெந்தயம் பொதுவாக உடலிற்கும் தனித்து நரம்புகளுக்கும் நல்ல பலமளிக்கக் கூடியது. தாது புஷ்டி, பசி உண்டாக்க வல்லது. அதிலுள்ள கொழ கொழப்பும், கசப்பும், நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவுகின்றன. மலத்தை இறுக்க உதவக் கூடியது. ஆனால், கடுப்பும் சீதமும் ரத்தமும் மலத்துடனோ மலமில்லாமலோ போகும் போது, வெந்தயம் அதனை மாற்றித் தருகிறது. 

வெந்தயம், கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது, குளிர்ச்சியை உண்டாக்கும். காய்ச்சல், சீதக் கழிச்சல், வெள்ளைப்படுதல், உடல் எரிச்சல், இளைப்பு நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். மேலும், கல்லீரல் நோய்கள் வயிற்று உப்புசம், மந்தம், குடல் வாயு போன்றவற்றையும் குணமாக்கும், ஆண்மையையும் பெருக்கும்.

தாய் என போற்றப்படும் நெல்லிக்காய், வயது முதிராதபடி இளமையைக் காக்கிறது. பச்சை நெல்லிக்காய் புளிப்பு தூக்கலாகவும், இனிப்பு, கசப்பும், துவர்ப்பு, உரைப்பு சற்று தாழ்ந்தும் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. குளிர்ச்சி, வறட்சி தரக் கூடியது. வைட்டமின் - சி  நிறைய உள்ளதென்றாலும் தோலின் நிறத்தை நன்கு பாதுக்காக்கவல்லதென்பது அதன் தனிச் சிறப்பு. ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிட ஆரோக்கியம் நிலைக்கும். மலத்தை இறுகவிடாது. குடலிலும் மற்ற குழாய்களிலும் ஏற்படும் அடைப்பை நீக்கும். நுரையீரலுக்கு வலிமை தந்து இருமல், சளி வராமல் பாதுகாக்கும். இதயத்திற்குப் பலம் தந்து தலை சுற்றுதல், களைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். மூளைக்குப் பலம் தந்து ஞாபக சக்தியையும் கடும் உழைப்பிலும் அயராதிருப்பதையும் தரும். மென்மையான குரல், தோலின் மென்மை, தெளிந்த முகம் இவை இதன் தொடர்ந்த உபயோகத்தால் கிடைப்பவை. இரும்புச்சத்தும் கண்ணாம்புச் சத்தும் உடலில் சேர இது உதவும். சியவனபிராசம், ஆமலகரஸாயனம் முதலியவை நெல்லிக்கனியாலான சிறந்த ரசாயன மருந்துகள்.

மேற்குறிப்பிட்ட மருத்துவ மேன்மைகளை ஆராய்ந்து பார்க்கும் போது  நண்பர் குறிப்பிட்ட படி நீங்கள் சாப்பிட முடியாவிட்டாலும் காலை உணவிற்கு சுமார் முக்கால் மணி நேரத்திற்கு  முன்பாவது இந்த இரு பொருட்களின் மருத்துவ பெருமையை உணர்ந்து சாப்பிட முயற்சி செய்யவும் அல்லது இவை சாப்பிட்ட பிறகு நெடுநேரம் நாக்கைக் காக்கவிடாமல் சிறிய அளவில் நறுமணத்துடன் கூடிய சூடான காபியை அருந்தலாமே!

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com