சுடச்சுட

  
  dr

  (சென்ற வார தொடர்ச்சி)

  கர்ப்பகால நீரிழிவுநோய் உள்ள பெண்களின் உணவு முறையானது, மற்றவர்களின் உணவுமுறையிலிருந்து மிகச் சிறிதளவே மாற்றம் பெற்றது. அதனால், இவர்கள் கவலையடைவதையும், மன அழுத்தத்திற்கு உள்ளாவதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

  இப்பெண்களின் ஒருநாளைக்குரிய உணவானது, அவர்களுடைய வயது, உடல் எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
  நீரிழிவுள்ள கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய மொத்த கர்ப்பகால எடையானது 10-12 கிலோவிற்கு அதிகமாகாமல் கவனமாக இருக்க வேண்டும். இவர்களின் உடல் எடையானது, பரிந்துரைக்கப்பட்ட எடையிலிருந்து 10 சதவிகிதம் குறைவாக இருக்குமளவிற்கு உணவு முறை கடைபிடிக்க வேண்டும். 

  ஒரு நாள் உணவு பட்டியலில் கிடைக்கும் மொத்த கலோரியானது 55-65% மாவுப் பொருட்களிலிருந்தும், 15-20% புரத உணவுகளிலிருந்தும், 20-25% கொழுப்பு உணவுகளிலிருந்தும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

  குறைந்தபட்சம் 200 கிராம் காய்கள், 200 கிராம் கீரைகள், இவர்களுடைய உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்காய்களும், பந்தல் வகைக்காய்களும் இவர்களுக்கு ஏற்றதாகும். செயற்கை முறையில் தவிடு நீக்கப்படாத முழுதானியங்கள் போதுமான அளவு நார்ச்சத்தை அளிக்க வல்லவை. 

  அதிக கலோரி மற்றும் மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, அக்ரோட் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 

  சாதாரண அளவு வெப்பநிலையில் திடமாக இருக்கும் கொழுப்பு பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவை நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருப்பதால், இரத்தத்தில் கொழுப்பின்; அளவை அதிகரித்து, உடல் எடையை எளிதில் அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே, அவற்றை தவிர்க்க வேண்டும்.

  தாவர எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், மணிலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் ஒற்றை நிறைவுறா கொழுப்பைக் கொண்டிருப்பதால் அவை உடலுக்கு நன்மையளிக்கின்றன. நீரிழிவுள்ள கர்ப்பிணிப்பெண்கள் அசைவமாக இருப்பின், சிறு மீன்கள், தோல் நீக்கிய கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

  கர்ப்பகாலத்தில் அனைத்து பழங்களையும் உண்பதால் உயிர்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும் என்றாலும், எளிதில் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பழங்களான ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, வாழைப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை அதிக அளவிலும், தினந்தோறும் சாப்பிடுவதைவிட வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றைத்தவிர, மாதுளம், கொய்யா, நெல்லிக்கனி, நாவல், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களை தினமும் உண்ணலாம். 

  கர்ப்பகாலத்தில் நீரிழிவு உள்ள பெண்கள், மேற்கூறிய உணவுமுறையுடன், போதுமான உடற்பயிற்சி அல்லது மூச்சுப்பயிற்சி, அன்றாட வீட்டு வேலைகளை உற்சாகத்துடன் செய்யும் பழக்கம், மகிழ்ச்சியான மனநிலை மற்றும் நிம்மதியான உறக்கம் ஆகியவை ஒருசேர கடைபிடித்தார்களானால், கர்ப்பகால நீரிழிவை வென்று ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai