திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் அழுதால் நமக்கும் கண்ணில் நீர் வர இதுதான் காரணம்! ‘மிரர் நியுரான்ஸ்’

ஃப்ளாஷ்பக்கில் தோன்றும் சந்தோஷப் படும் நேரங்களை, நம் மூளை அதை நாம் அப்பொழுது எப்படி அனுபவித்தோமோ அது போலவே மறுபடி தத்ரூபமாக உணரச் செய்யும்.
திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் அழுதால் நமக்கும் கண்ணில் நீர் வர இதுதான் காரணம்! ‘மிரர் நியுரான்ஸ்’

வருட முடிவில் நாம் எல்லோரும் வழக்கமாகச் செய்வது வருடத்தின் நிகழ்வுகளை புரட்டிப் பார்த்துக் கொள்வதே!  இந்த 12 மாதங்களில் நாம் உணர்ந்த பல விதமான சந்தோஷம் தரும் தருணங்களை நினைத்துப் பார்க்கையில், நம் மனதைத் தொட்ட பல ஞாபகங்கள் மறுபடி அப்படியே அச்சு அசலாக உணர்வது போலத் தோன்றும். அப்பொழுது உணர்ந்த அதே குதூகலமும், புத்துணர்ச்சியும் திரும்ப அப்படியே உண்டாகும்! இப்படித்தான் என்று ஆராய்ச்சியிலும் உறுதி செய்திருக்கிறார்கள்.

அதாவது, ஃப்ளாஷ்பக்கில் தோன்றும் சந்தோஷப் படும் நேரங்களை, நம் மூளை அதை நாம் அப்பொழுது எப்படி அனுபவித்தோமோ அது போலவே மறுபடி தத்ரூபமாக உணரச் செய்யும். ஒரு சில நிமிடங்களுக்கு, அப்பொழுது இருந்த நிலைக்கே சென்று விடுவோம். நம் ரசாயனங்களும் இதற்கு ஏற்றார் போலவே சுரக்கும்.

இதன் இன்னொரு வடிவமும் உண்டு. நம்மைச் சார்ந்தவர்கள் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று அறிந்ததுமே, அது நமக்கே கிடைத்தது போல் பூத்துக்குலுங்கி ஆனந்தப்படுவோம். 

இதே போல் வெவ்வேறு அனுபவங்கள் நமக்கு மனச் சந்தோஷத்தைத் தரக்கூடும். பல முறை, புத்தகத்தில், சினிமா, நாடகங்களில் வரும் கதாப்பாத்திரங்களின் அனுபவங்களுடன், சூழ்நிலைகளுடன் நாமும் ஒன்றிவிடுவோம். அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதாப்பாத்திரத்துடன் நாமும் சிரிப்பதும், அழுவதும், சந்தோஷப் படுவதும் உண்டு!

இதற்கான காரணம், “மிரர் நியுரான்ஸ்” என்பதால் தான். இந்த நிலையில் இருவரும் (கதாப்பாத்திரம் + பார்வையாளர்கள்/படிப்பவர்கள்) ஒன்றிணைந்து அனுபவிப்பது போல் ஆகும். அதாவது காட்சிகள் அங்கே நடந்து கொண்டிருந்தாலும், இங்கே நமக்கு அதே நிலை தொற்றிக் கொண்டு விடுகிறது.  இருவருமே அதே உணர்ச்சிகளைக் காண்பிப்பார்கள். இது, கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் இருப்பதாலேயே இதை “மிரர் நியுரான்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.

விளையாட்டிலும் இதைப் பார்த்திருக்கிறோம். விளையாட்டு களத்தில் அவர்கள் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து ஆனந்தப் பட, பார்வையாளர்களான நாமும் அதே அளவுக்குச் சந்தோஷப் படுவோம். இதுவும் “மிரர் நியுரான்ஸ்”! 

சந்தோஷம் எத்தனை எளிதானது! நாம்தான் அவ்வப்போது, இதை வேறு ஒரு விஷயத்துடனோ, செயலுடனோ கோர்த்து விடுகிறோம். அதாவது இதைச் சாதித்தால் தான் சந்தோஷப் படுவேன், இது மட்டும் கிடைத்து விட்டால் அல்லது நடந்து விட்டால் தான் எனக்குச் சந்தோஷம் என்று முடிவு செய்து கொள்கிறோம். இப்படி இருந்தால் நாம் சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.

இப்படிச் செய்வதால் நாம் சந்தோஷத்தை பின்னோடியாக செய்து விடுகிறோம். நிஜத்தில், சந்தோஷம் என்பது முன்னோடி. நாம் முடிந்த வரையில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொண்டால், தானாகவே நன்றாக இயங்குவோம். புத்துணர்ச்சி கூடி, செய்யும் எல்லாவற்றையும் கவனித்து செய்வோம், வெற்றி பெற வாய்ப்பு அதிகரிக்கும். சந்தோஷம் முன்னோடியாக இருந்தால் நிலைத்து நிற்கும்!

இதன் பயன்களோ கணக்கிலடங்காது! இப்படி மனச் சந்தோஷத்துடன் செயல்பட, எதை நாம் செய்கிறோமோ அது கடினமாக தோன்றவே தோன்றாது. அதற்குப் பதிலாக பல மடங்கு பலம் வந்தது போல் தோன்றும். ஆனந்தமாக ஆழ்ந்து செய்வதால், நேரம் கடந்து போவதும் தெரியாது, சோர்வும் தெரியாமல் செயல்படுவோம். இப்படி மும்முரமாக, ஆழ்ந்து செயல்படும் நிலையில் இருப்பதற்கு “ஃப்ளோ” (flow) என்ற பெயர் சூட்டப் பட்டிருக்கிறது!

சந்தோஷம் நிலைத்து விட்டாலே, எல்லாவற்றையும் நாம் பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்ப்போம். இதனாலேயே பரந்த மனப்பான்மையும் சேர்ந்துவிடும். நாம் பல முறை கேட்டிருக்கிறோம் - “சந்தோஷம் என்பது உன் கையில்” என்று. ஆராய்ச்சியும் இதைக் காட்டி இருக்கிறது: 80% சந்தோஷம் நம்முள்ளிலிருந்தே, 20% மற்றவற்றிடமிருந்து. ஒரு வேளை நாம் தடுமாறினாலும் சற்று முன் சொன்னது போல், கடந்த கால சந்தோஷங்களை நினைவூட்டி அதே நிலையை உணர்ந்து, திரும்பவும் சந்தோஷ நிலையைக் கொண்டு வர முடியும். சந்தோஷம் என்பது பின்னோடியாக இருக்கத் தேவையில்லை, முன்னோடியாக்க முடியும்!

- மாலதி சுவாமிநாதன்
malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com