சுடச்சுட

  
  13-Interesting-Facts-about-Dreams-bubbles

  மனம் பல எண்ணங்களாலும் பல வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. நீ எந்த கம்ப்யூட்டரை வேண்டுமானாலும் நிறுத்தலாம், இயங்கச் செய்யலாம். ஆனால் உனது மனத்தை நிறுத்தச் செய்ய உன்னால் முடியாது. அதற்கான பட்டன் இல்லை. கடவுள் இந்த உலகத்தை, மனிதனை, உருவாக்கும்போது மனத்தை நிறுத்துவதற்கான பட்டனை எங்கே வைத்தார் எனற விவரமே இல்லை. அதனால் மனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான சுவிட்சு இல்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

  இந்த தொணதொணப்புக்கு காரணம் நமது கல்வி முறைதான். அது அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் அது எப்படி மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே சொல்லித் தருகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது நீ தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல் படுகிறது.

  நம்மால் அதையும் சொல்லிக் கொடுக்க முடிந்தால்… அது சாத்தியம்தான். இதைதான் நான் உங்களிடம் வற்புறுத்த விரும்புகிறேன். நாம் அதை தியானம் என அழைக்கிறோம். மனது தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும். அது இரண்டு வழிகளில் உதவும். நீ இதுவரை அறிந்திராத ஒருவிதமான அமைதியை, ஒருவிதமான மௌனத்தை அது உனக்கு கொடுக்கும். உன்னைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உனக்கு கொடுக்கும். எப்போதும் தொணதொணத்துக் கொண்டிருக்கும் மனதினால் அந்த அறிமுகம் கிடைக்காமல் இருக்கிறது. அது உன்னை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

  இரண்டாவதாக, இந்த தியானம் மனதுக்கு ஓய்வை கொடுக்கும். மனதுக்கு ஓய்வை கொடுக்கும்போது அது விஷயங்களை மேலும் அதிக திறமையோடும், அதிக புத்திசாலித்தனத்தோடும் செய்யும் வலிமை பெறும். ஆக இரு விதமாகவும் நீ  மனதின் விதமாகவும் இருப்பின் விதமாகவும்  பயன் பெறுவாய். எப்படி மனதின் இயக்கத்தை நிறுத்துவது, எப்படி அதனிடம், போதும் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்படாதே  நீ ஓய்வெடுத்துக் கொள், என்று கூறுவது எனக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

  தேவைப்படும்போது மட்டும் மனதை உபயோகப்படுத்து. பின் அது எப்போதும் இளமையாகவும், புதிதாகவும், மிகவும் சக்தியோடும், புத்துணர்வோடும் இருக்கும். பின் நீ சொல்வது எதுவும் வற்றிப் போனதாக இராது. அதில் உண்மையும் நேர்மையும் இருக்கும், அது ஆணித்தரமானதாக, ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கும். அதனுள் வாழ்விருக்கும். நீ அதே வார்த்தைகளை உபயோகிக்கலாம், ஆனால் ஓய்வெடுத்ததன் மூலமாக மனம் மிகவும் சக்தி பெற்றிருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு போல மிகவும் வீரியமாக வெளி வரும்.

  தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.

  முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.

  மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் – அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.

  இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன்.  வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.

  தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது. தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று. மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.

  மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும். அதன் பின் இருப்பு முதலாளியாகும். அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும். 

  - ஓஷோ

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai