சுடச்சுட

  

  பெறுவதினும் தருதலே நன்று! 

  By  பிரியசகி -ஆசிரியர், எழுத்தாளர்  ஜோசப் ஜெயராஜ் -  |   Published on : 25th August 2018 05:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kids

   

  முதியோர் இல்லத்தில் தன் அறையில் அழுது கொண்டிருந்த கீதாவை தேற்றும் விதமாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் இல்லத்தை நடத்தி வரும் மாலதி 

  'கீதாம்மா என்னாச்சு? எதுக்கு இப்படி சாப்பிடக் கூட வராம  அழுதுகிட்டிருக்கீங்க?

  'பாருங்க மேடம், இன்னைக்கு என் பிறந்தநாள், என் பையன் ஒரு போன் கூட செய்யல. என்னதான் அமெரிக்காவில பெரிய வேலைல பிஸியா இருந்தாலும் ஒரு போன் கூடவா பண்ண முடியாது? பெத்தவ ஒருத்தி இங்கத் தனியா இருக்கேங்கிற ஞாபகமே அவனுக்கு இல்லையே. அவன் இந்த நிலைக்கு வர்றதுக்கு நான் தானே காரணம்?'

  'ஆமா கீதாம்மா உண்மைதான், ஆனா அங்க உங்க பிள்ளையோட சூழ்நிலை என்னவோ நமக்குத் தெரியாது. பையன் போன் பண்ணா தான் பிறந்தநாளா? நாங்க இவ்ளோ பேர் இருக்கோம் இல்லையா, வாங்க சாப்பிடப் போகலாம்', என்று கீதாவை அழைத்துச் சென்றார் மாலதி.

  முப்பது ஆண்டுகளாக கீதாவின் குடும்பத்தை நன்கு அறிந்தவர் மாலதி. ஒரே மகன் எல்லாவற்றிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என நகரின் தலைசிறந்த பள்ளியில் சேர்த்து விட்டனர் . பள்ளி முடிந்ததும் டியூஷன், ஹிந்தி கிளாஸ், பாட்டு கிளாஸ், டென்னிஸ் என ஓய்வற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமென ஆறாம் வகுப்பிலேயே நாமக்கல்லில் புகழ் பெற்ற  ஒரு பள்ளி விடுதியில் சேர்த்து விட்டனர். படிப்பு ஒன்றைத் தவிர வேறெதையும் மாணவர்களுக்குத் தராத சிறைச் சாலையைவிட மோசமான சூழல்;  பெற்றோரின் நெருக்கத்தை இழந்தது; எல்லாம் சேர்ந்து அவனை ஐ ஐ டி யில் தலை சிறந்த பொறியாளனாக்கியதோடு மட்டுமல்லாமல் பாசமறியா கனத்த இதயம் கொண்டவனாகவும் ஆக்கி விட்டது. இதனால் அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்து விட்டதென அங்கேயே செட்டிலானவன் இந்தியாவிற்கு வருவதையே நிறுத்திக்கொண்டான். நல்லா படி அப்பத் தான் நல்ல வேலை கிடைக்கும் , கை நிறைய சம்பாதிக்க முடியும் என அம்மா சொல்லிக் கொடுத்ததை தவறாமல் செய்தான். ஆனால் சொல்லிக் கொடுத்த அம்மாவை மறந்து விட்டான். அப்பா இறந்தப்பின் அம்மாவை வசதியான முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு மாதந்தோறும் பணம் மட்டும் அனுப்பி விடுகிறான். வயதான காலத்தில் பணமிருந்தால் மட்டும் போதுமா ?

  'அம்மா எனக்கு ரெண்டு கம்பெனியில் இருந்து வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு , ஒன்னு உணவுப் பொருட்கள் உற்பத்தி பண்ணக்கூடியது , இன்னொன்னு  ஐ டி கம்பெனி நான் எதில்  சேரட்டும்?',  என்றான் சந்திரன் . 

  'சந்திரன் இது உன்னோட வாழ்க்கையில முக்கியமான முடிவெடுக்கும் நேரம். என் ஐடியா இருக்கட்டும் எதுல சேரலாம்னு நீ நினைக்குற?'

  'எனக்கு முடிவெடுக்க முடியலம்மா' 

  'ரெண்டு வேலையிலும் இருக்குற நல்லது கெட்டதை யோசிச்சுப்பாரு'. 

  'ஐடி கம்பெனியில சம்பளம் நிறைய கிடைக்கும் . ஆனா கொஞ்ச நாள் தான் இங்க இருக்க முடியும் , அப்புறம் வெளிநாட்டுக்குப் போக வேண்டியிருக்கும். அதுல எனக்கு எப்பவுமே விருப்பம் இருந்ததில்லை . உங்களையும், அப்பாவையும்,  நம்ம சொந்தக்காரங்களையெல்லாம் இங்க விட்டுட்டு நான் மட்டும் வெளிநாட்டுல போய் வசதியா வாழறதுல என்ன சந்தோஷம் இருக்கு ? நான் படிச்ச படிப்புக்கும்  இந்த வேலைக்கும் சம்பந்தமில்லை. என்னால கம்பெனிக்கு லாபம், கம்பெனியால  எனக்குப் பணம் கிடைக்கும் அவ்ளோ தான்.  இன்னொன்னு இயற்கை உணவு தயாரிக்கும் கம்பெனி. இன்னைக்கு மார்க்கெட்டில் இருக்கும் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் போட்டு விளைவிக்கும் உணவுப் பொருட்களாலயும், உணவுப் பொருட்களை பதப்படுத்தவும், சுவையூட்டவும் சேர்க்கும் வேதிப் பொருட்களாலயும் மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் நிறைய இருக்கு. இதுக்கு மாற்றா இந்த கம்பெனியோட இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இருக்குறதால இந்த கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா என்னோட உழைப்பு இந்த சமுதாயத்துக்குப் பயனுள்ளதா இருக்கும் என்ற மனநிறைவு கிடைக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்கம்மா?'

  'ரொம்ப நல்ல முடிவு சந்திரா . நாம செய்யக் கூடிய எந்த விஷயமும் நமக்கோ மத்தவங்களுக்கோ சிறு கெடுதலும் இல்லாம நன்மையைத் தரக் கூடியதா இருக்கணும். அதுவும் வேலையைத்  தேர்ந்தெடுக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும். நிலம், நீர் , காற்று எல்லாமே மாசுப்பட்டு போயிருக்கும் இந்த காலத்துல மக்களோட ஆரோக்கியம் ரொம்ப கெட்டுப் போயிருச்சு . இதுக்கு நம்மளோட உணவு பழக்கங்களும் , வாழ்க்கை முறையும் இயற்கையை விட்டு ரொம்ப விலகிப் போனதும் ரொம்ப முக்கியமான காரணம். அறிவியலுக்கும் ,பகுத்தறிவுக்கும் உட்பட்டு இயற்கையான வழியில் வாழ்க்கை தொடர்ந்தா  மனித வாழ்க்கை மகிழ்ச்சியானதா இருக்கும். அதுக்குத் துணை போகக் கூடிய ஒரு வேலையை நீ தேர்ந்தெடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்பா', என பெருமிதப்பட்டார் சந்திரனின் தாயார்.

  இருவகைப் பெற்றோர்கள்:

  இருவிதமானப் பெற்றோர்களை நாம் இங்கு கண்டோம். ஒருவர் தன் மகனைப் பணத்தைத் தேடி ஓடும் பந்தயக் குதிரையாகத் தயார் செய்கிறார். அவனோ இறுதியில் பணமே பிரதானம் என்று பாசமற்று அன்னையை மறந்து அயல்நாட்டில் அடைக்கலம் புகுந்து விடுகிறான். மற்றொரு தாயோ மகனுக்கு தாய் பாசத்தோடு பிறர் மீது அக்கறையையும், இவ்வுலகத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிக்கடனைத் தான் செய்யும் செயல்கள் மூலமாகத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற மாண்பினையும் கற்றுக் கொடுத்துள்ளார். அவனும் அவ்வாறே  நடந்து கொள்கிறான். இதை ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  பெரியோரும் உளவியலாளர்களும் கூறுவதென்ன?

  பிறர் மீது அக்கறை கொள்வது எப்படி என்பதை அண்மையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் "நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஓட்டும். நான் என்று சொல்வது அகங்காரம், நாம் என்ற எண்ணமே சமூகத்திற்கு நன்மை பயக்கும்" என்று அழகாகக் கூறியுள்ளார்.

  ஆல்பர்ட் பந்தூரா என்ற உளவியலாளரின்  சமூகக் கற்றல் கொள்கையின்படி (Theory of vicarious learning - 1977) பிள்ளைகள் தம் பெற்றோரையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் பார்த்து தானாகக் கற்றுக் கொள்கின்றனர். கற்றுக் கொண்டது நல்லதோ கெட்டதோ எதுவாயினும் அதைத் தன் வாழ்வில் பிரதிபலிக்கின்றனர். மேற்கண்ட இரு வேறு குடும்பங்களிலும் பிள்ளைகள் தம் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டபடியே வளர்ந்த பின்னும் நடந்து கொள்வதைப் பார்த்தோம்.

  பந்தூராவின் 'பிறரால் தூண்டப்படுத்தல்' ( Theory of Reinforcement ) என்ற கொள்கையின்படி ஒரு குடும்பத்தில் அண்ணனின் நற்செயல்களுக்காகக் கிடைக்கும் பாராட்டு தம்பியையும் அத்தகு செயல்களைச் செய்யத் தூண்டும். அல்லது அண்ணனின் தீய செயல்களுக்கு பெற்றோரிடமிருந்தோ அல்லது சமூகத்திடமிருந்தோ கிடைக்கும் தண்டனை தம்பியை அத்தீய செயல்களிலிருந்து விலகியிருக்கச் செய்யும் என்பதையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

  மூன்று வழிப் பாதை:

  பிறருக்கான சேவை என்பது பூமி என்ற வீட்டிற்கு நாம் கொடுக்கும் வாடகை. பிறருக்காக வாழாத வாழ்க்கை வீணானது. - முகமது அலி .

  நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் மீதான அக்கறையை வளர்க்க பெற்றோர் மூன்று வழிகளைப் பின்பற்றலாம்.

  துன்புறுவோர் மீது இரக்கம் கொள்வது நல்லது தான். ஆனால் இரக்கம் கொள்வதைவிட பரிவிரக்கத்துடன் (  Empathy )நடந்து கொள்ள குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது அவசியம். ஏனெனில் இரக்கம் என்பது பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவதைப் போல துன்புறுவோரிடமிருந்து நம்மை உணர்வு ரீதியாக தள்ளி நிற்கச் செய்யும். 'அப்பாடா நான் இவரைப் போல் இல்லை' என்று தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கச் செய்யும். ஆனால் பரிவிரக்கமோ 'இவரைப் போல் நான் இருந்திருந்தால் எனக்கு எவ்வளவு துன்பமாக இருக்கும்' என்று நினைக்க வைத்து, கருணையுடன் பிறருக்காக சேவையில் ஈடுபடத் தூண்டும். அண்மையில் புயலால் கேரளம் பெரும் பாதிப்புக்குள்ளான போது  மிதிவண்டி வாங்குவதற்கென  நான்காண்டுகளாகத் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரளாவின்  சீரமைப்பு பணிக்கென தர முன்வந்த விழுப்புரம் சிறுமியின் செயலை பரிவிரக்கத்திற்கு நல்லதோர் உதாரணமாய் கூறலாம்.    

  இவ்வுலகத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்டதை விட  அதிகத்தைத் திருப்பிக் கொடுப்பது தான் உண்மையான வெற்றி. - ஹென்றி ஃபோர்டு

  வீட்டை விட்டு வெளியில் சென்று சேவையில் ஈடுபடுவதற்கு முன் அன்றாட வாழ்க்கையில் தன் குடும்பத்து உறுப்பினர்களின் தேவையை, துன்பங்களை உணர்ந்து நடந்துகொள்ள குழந்தைகள் பழக்கப் படுத்தப்பட வேண்டும். இதனால் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவி செய்தால் அவர்களுக்கும் மகிழ்ச்சி, அதனால் தனக்கும் மகிழ்ச்சி என்பதை பிள்ளைகள் உணர்வார்கள்.

  என் உறக்கத்தில் வந்த கனவில் வாழ்க்கை என்பது கொண்டாட்டமாக இருந்தது. கண் விழித்தபோது தான் வாழ்க்கை என்பது சேவைக்கானது என்று புரிந்தது. -ரவீந்திரநாத் தாகூர் 

  சமூக சேவை நிறுவனங்களுடன் பிள்ளைகளுக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தர வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது இயன்ற போது அங்கு சென்று உடல் ரீதியான உழைப்பு, பணம் அல்லது நேரத்தை செலவிட்டால் எத்துணை மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை பிள்ளைகள் அனுபவபூர்வமாக உணர முடியும்.

  நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. எதை விதைப்போமோ அதையே அறுவடை செய்வோம். முட்களை விதைத்து விட்டு முல்லைப் பூக்களை எதிர் பார்க்க முடியாது. நல்லதை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால் நல்லதை திரும்பப் பெறுவோம். தன்னுள் வரும் காற்றைத் தானே வைத்துக் கொள்ளும் மூங்கில் சாரம் காட்டவே பயன்படும். உள்வாங்கும் காற்றைத் திருப்பித் தரும் மூங்கிலே புல்லாங்குழலாகும். நம் தோட்டத்து மூங்கில்கள் புல்லாங்குழலாகப் போகின்றனவே அல்லது சாரம் கட்டப் பயன்படப் போகின்றனவா என்பது பெற்றோர்களின் வளர்ப்பில் தான் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai