இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்களின் சேட்டைதானா? வியக்க வைக்கும் உளவியல் ரகசியங்கள்!

 வீட்டில் யாருமில்லாத சூழலில் இதுவரையில்லாத சந்தோஷத்துடன் ஹெட்போனை காதில் மாட்டியபடி ஆனந்தமாக
இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்களின் சேட்டைதானா? வியக்க வைக்கும் உளவியல் ரகசியங்கள்!


 
வீட்டில் யாருமில்லாத சூழலில் இதுவரையில்லாத சந்தோஷத்துடன் ஹெட்போனை காதில் மாட்டியபடி ஆனந்தமாக தனக்குப் பிடித்த ஆல்பம் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வினோத் சுளீரெனத் தன் மீது விழுந்த அடியால் திடுக்கிட்டுப் பார்த்தான். எதிரே கையில் பெல்ட்டுடன் அப்பா. பதினாறு வயது வரை எதற்காகவும் தன்னை அடித்திராத அப்பா இப்போது எதற்கு தன்னை அடிக்கிறார் என்ற காரணமே புரியாமல் விழித்தவனின் மேல் மேலும் சில அடிகள் தொடர்ந்து விழுந்தன. ‘அப்பா, எதுக்குப்பா அடிக்குறீங்க; வலிக்குதுப்பா’ என்று அவன் அலறியதையடுத்து சில வினாடிகள் நிறுத்தியவர், 'ஏண்டா? உனக்கு என்னடா குறை வைச்சோம்? ஏண்டா இப்படி தறுதலையா வந்து பொறந்து தொலைச்சிருக்க?  அன்னைக்குத் தம்பி பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டான்னு பொய் தான சொன்ன? நீ தான் அவனத் தள்ளி விட்டேன்னு உன் ஃப்ரெண்டு சொல்லிட்டான். அங்க அவ்ளோ காயப்பட்டு ஆஸ்பிட்டல்ல இருக்கான்னு நானும் உங்கம்மாவும் துடிச்சிக்கிட்டு இருக்கோம். நீ இங்க ஜாலியா பாட்டுக் கேட்டுக்கிட்டு இருக்க!’ என்று ஆவேசமாக மறுபடி அடிக்க  ஆரம்பித்தார்.
 

அது வரை அவர் அடித்ததை வாங்கிக் கொண்டிருந்தவன் தன் கையால் பெல்டைப்  பிடித்து, 'நிறுத்துங்க. ஆமா, நான் தான் அவனைக் கூட்டமாயிருந்த பஸ்ல இருந்து பிடிச்சுத் தள்ளுனேன். அவன் என்னைக்கு இந்த வீட்டுல வந்து பொறந்தானோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. அது வரைக்கும் நான்தான் உங்கச் செல்லப் பிள்ளையா இருந்தேன். அவன் பொறந்துலேர்ந்து நீங்களும், அம்மாவும் என்னை கவனிக்குறதே இல்லை. அவனையே தான் கொஞ்சுனீங்க. அவன் ஏதாவது தப்பு செஞ்சாலும் என்னை தான் திட்டுவீங்க. அவன் நல்லா படிச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? சின்னப் பையன் 95% எடுக்குறான், நீயும் இருக்கியே, அவன்கிட்ட கத்துக்கோடான்னு என்னை இன்சல்ட் பண்றீங்க. ரோட்ல கிரிக்கெட் வெளையாடப் போனாக் கூட என்னடா உன் தம்பி சிக்ஸரா வெளாசுறான், நீ டக் அவுட் ஆவுறேன்றானுங்க. தினமும் காலைல எழுந்ததுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் எனக்கு இதே டார்ச்சராயிருக்கு. அவன் இல்லைன்னா இந்த தொல்லையிருக்காது. அதான் பஸ்ல கூட்டமா இருந்ததைப் பார்த்து அவனா தெரியாமா கால் தவறி விழுந்தா மாதிரிப் பண்ணேன்" என்றதைக் கேட்டு தலையில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தார் யுவராஜ்.

வினோத்திற்கு ஐந்து வயதாகும் போது தனக்கு விளையாட ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அதுவரை தனக்கு மட்டுமாகக் கிடைத்து வந்த பெற்றோரின் அன்பும், அருகாமையும் தம்பியால் பங்கிடப்படுகிறது என்ற நிஜம் உணர்ந்த போது அது பொறாமையாக உருவெடுத்தது. அம்மா அருகில் இல்லாத போது தம்பியை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது என அது வன்முறையாக வளர்ந்தது. பெற்றோருக்கு இதை சரியானபடி கையாளத் தெரியாததால், குழந்தையை அடித்தான் என்ற அவனது செயலை மட்டும் பார்த்தவர்கள் அதற்குக் காரணமான உளவியலைப் புரிந்து கொள்ளாமல், தம்பியை ஏண்டா அடிச்சே என அவனை திட்டவும், அடிக்கவும் செய்தனர். இது இன்னும் தம்பியின் மீதான வெறுப்பை அவனுள் வளர்த்தது.

பள்ளிக்குச் சென்றபிறகு தன் தம்பி தன்னை விட படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்திருக்கும் காரணத்தால் தான் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என எல்லோர் முன்னிலையிலும் தான் அவமானத்திற்குள்ளாகிறோம் என்ற உணர்வு அவனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து அவன் இல்லாது போனால் மட்டுமே தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஓடும் பஸ்ஸிலிருந்து தம்பியைத் தள்ளி விடுமளவு வன்முறையாளனாக வினோத் மாறியதற்கு உண்மையிலேயே காரணம் என்ன?

ஒவ்வொரு மனிதரின் முழுமையான ஆளுமைத் திறனுக்கு மரபணுக்கள் 40 சதவிகிதமும் வளர்ப்பு முறை 60 சதவிதமும் காரணமாகிறது. உருவ அமைப்பு, நிறம், முடி, குணம் போன்றவற்றில் பெற்றோரைப் போல குழந்தைகள் இருப்பதற்கு மரபணுக்கள் காரணம். ஆனால் ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள் எல்லாவற்றிலும் ஒன்று போல் இருக்க வேண்டுமென அவசியமில்லை. உதாரணத்திற்கு வினோத் குழந்தைப் பருவத்திலிருந்தே பூச்சிகளைப் பிடித்து அதன் கால்களை ஒவ்வொன்றாகப் பிய்த்து ரசிப்பது, நாய், பூனை மீது கல்லெறிவது என முரட்டுத்தனமாக இருப்பான். வினோத்தின் தம்பி அரவிந்தோ மிக மென்மையானவன். செல்லப் பிராணிகளிடத்தில் அன்பானவன். வினோத் டிவியில் வன்முறைகள் நிறைந்த தொடர்களையும். படங்களையும் விரும்பிப் பார்ப்பான். அரவிந்தோ அதைச் சற்றும் விரும்பாததால் சேனலை மாற்றச் சொல்லி ரிமோட்டுக்காக இருவரும் அடிக்கடி சண்டை போடுவர். கடைசியில் அரவிந்த் விட்டுக் கொடுத்து விடுவான். 

அரவிந்தின் பொறுமை, பொறுப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய குணங்கள் எப்போதும் எல்லோரிடத்திலும் பாராட்டைப் பெறுவதும் முரட்டுத்தனம், கோபம், பொறுமையற்ற பொறுப்பற்ற குணத்தால் வினோத் திட்டு வாங்குவதும் இயல்பு தானே. ஒரே பெற்றோருக்குப் பிறந்து ஒரே சூழலில் வளரும் இருவர் வெவ்வேறு விதமாக இருப்பதை டிப்ரன்சியல் சஸ்சப்டிபிளிட்டி (Differential Suseptibity) என்கிறார் பெல்ஸ்கி என்கிற உளவியலாளர். 1990-ல் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் 40% சிறுவர்களும், 28% சிறுமியரும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், 80% பேர் தம் சகோதர சகோதரிக்கிடையே வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் (Sibling rivalry) என்றும், அக்கா தங்கை இல்லாத சகோதரர்களிடையே இது அதிகமுள்ளதாவும் கண்டறியப்பட்டுள்ளது.

பருவ வயதுக்கு முன் கூட்டியே பூப்பெய்தும் சிறுமியர் சுற்றுச்சூழல் சரியில்லாத போது அதிக வன்முறையான செயல்களில் ஈடுபடுவதாக 500 சிறுமியரைக் கொண்டு மூன்றாண்டுகள் நடந்த ஆய்வில் தெரிகின்றது. இக்குழந்தைகள் தன் வயதொத்தவர்களின் அங்கீகாரமும் பெற்றோர்களின் அரவணைப்பும் கிடைக்காத பட்சத்தில் சமூக விரோதிகளின் இலக்காகவும் மாறிவிட வாய்ப்புண்டு. தன்னை அன்பு செய்ய யாரும் இல்லை என்ற உணர்வே இதற்கு முக்கியக் காரணம்.

பதின்ம வயது என்பது துரித உடல் வளர்ச்சியையும் அதிக ஹார்மோன் மாற்றங்களையும் கொண்டது. நோட்டில்மேன் என்ற உளவியலாளர் டெஸ்டோஸ்டீரான் அளவு பதின்ம வயது சிறுவர்களின் உடலில் பதினெட்டு மடங்கு அதிகம் சுரக்கிறது என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது ஆண் இனப்பெருக்க ஹார்மோன் என்றாலும் திருடுதல், பொருட்களை உடைத்தல், குடித்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கு இதன் மிகை சுரப்பு காரணமாகிறது. சமூக எதிரி எனப்படும் கார்டிசாலின் அளவு அதிகரித்தால் மனஅழுத்தம் மற்றும் பிற மன நலப் பிரச்சனைகள் வரும். டெஸ்டோஸ்பீரானின் மிகை சுரப்பு ஏமாற்றுவதற்கான தைரியத்தைக் கொடுப்பதோடு தண்டணைக்கான பயத்தைக் குறைக்கிறது என்றால் கார்டிசால் ஏமாற்றுவதற்கு காரணத்தைத் தருகிறது; தனக்கு சந்தோஷத்தைத் தரும் செயல்களிலும், வலியைக் குறைக்கும் நடத்தைகளிலும் ஈடுபடச் செய்கிறது என்கிறார் ஜோசப் என்னும் உளவியலாளர்.
 

மன அழுத்தம் என்பது பரம்பரையாகத் தொடர 5-HTTLPR என்ற ஜீன் காரணமாக உள்ளது. சிறுவயதில் அதிகப் பிரச்சனைகளுக்காளான குழந்தைகள் பிற்காலத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்புண்டு. சரியான அன்பும் அரவணைப்பும் பெற்ற குழந்தைகளுக்கு மன அழுத்தத்திற்கான மரபணுக்கள் இருந்தாலும் மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் குறைவு. மனிதர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க உதவும் முன்மூளைப் புறணி பத்தொன்பது வயதில் தான் முழு வளர்ச்சியடையும். மேலும் மூளையின் அடிப்பகுதியில் பாதாம் பருப்பு போன்றுள்ள அமிக்தலா உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கச் செய்து விடும். இதனால் தான் டீன்ஏஜ் பிள்ளைகள் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு கோபமாக நடந்து கொள்வது எடுத்தெறிந்து பேசுவதெல்லாம் செய்கின்றனர். மூர்க்கத்தனமாக நடத்தல் என்பது ஆரம்ப கட்டத்திலேயே பெற்றோரால் முழு காரணம் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் தான் நடந்து கொள்வது சரி என நினைத்து பிள்ளைகள் மேலும் மூர்க்கத்தனமாக மாறிவிடுவர் என்கிறார் மார்கரெட் வீட்லே என்னும் உளவியலாளர்.

பிள்ளைகளுக்கு உணர்வுகளைக் கையாளக் கற்றுக் கொடுப்பது மிக மிக்கியம். மன அழுத்தத்தில் இருக்கும் பிள்ளைகளை அவர்களது திறமைகளைச் சுட்டிக் காட்டி பாராட்டி ஊக்கப்படுத்தும் போது கார்டிசால், டெஸ்டோஸ்டீரான் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைந்து ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனும் சிரட்டோனின் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டரும் அதிகம் சுரக்கும். இதனால் பிள்ளைகள் கலகலப்புடன் உற்சாகமாக தன் திறன்களில் மேம்படுவர். இவற்றையெல்லாம் பெற்றோர்கள் புரிந்து கொண்டு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே முதல் குழந்தையின் மனதைத் தயார்படுத்த வேண்டும். 

இருகுழந்தைகளுமே தன் அன்பிற்குரியவர்கள் என்பதை பிள்ளைகள் உணரும் படிச் செய்ய வேண்டும். இது உன்னுடைய தம்பி தங்கை நீதான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாசத்தையும், பொறுப்புணர்வையும் வளர்க்க வேண்டும். பிள்ளைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள். அவர்களது அறிவு, குணம், ரசனை, திறமை எல்லாமே தனித்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து அவர்களை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சூழலால் பாதிக்கப்படாதிருக்க கற்றுக் கொடுக்க வேண்டும். 

அதிக கண்டிப்பையும், கடுமையான விதிமுறைகளைக் காட்டிலும், நல்ல குழந்தை வளர்ப்பு முறையும் ஆரோக்கியமான கண்காணிப்பும் பிள்ளைகள் நல்ல விதத்தில் வளர உதவும்..
 
- பிரியசகி &
ஜோசப் ஜெயராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com