Enable Javscript for better performance
இப்படியா பிள்ளையை வளர்க்கிறது? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா?- Dinamani

சுடச்சுட

  

  இப்படியா பிள்ளையை வளர்க்கிறது? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா?

  By பிரியசகி  |   Published on : 01st October 2018 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  download_(15)

   

  வைதேகி தன்  மகன் உமாபதி சிறு குழந்தையாக இருந்தபோது சோறு ஊட்ட தெருவெங்கும்  அவனைத் தூக்கிக் கொண்டு படாதபாடு படுவாள். குழந்தைக்கு வேடிக்கை காட்ட பொம்மைகளை வைத்துக் கொண்டு அவள் கணவன் சுந்தரமும் அவர்கள் பின்னால் திரிவான். சுந்தரத்தின் அப்பா ஒரு நாள்  ‘ஏண்டா சுந்தரம் குழந்தையை நல்லா விளையாட விட்டா தன்னால பசிச்சி சாப்பிடும். கீழயே இறக்கிவிடாம சாப்பிடு சாப்பிடுன்னா அது எப்படி சாப்பிடும். அந்தக் காலத்திலே எங்க வீட்ல பன்னிரண்டு பசங்க, அம்மா தோசை சுட ஆரம்பிச்சா எல்லோரும் தட்டைத் தூக்கிட்டுப் போய் பக்கத்துல உட்கார்ந்துப்போம். ஆளுக்கு ஒரு தோசைன்னு ஒரு ரவுண்டு முடியறதுக்குள்ள பள்ளிக்கூட மணியடிச்சிடும் பசியோட ஸ்கூலுக்கு போவோம். எப்படா மதியம் சாப்பாட்டு மணி அடிக்கும்னு காத்திருந்து வீட்டுக்கு வந்து அம்மா போட்ட சாப்பாட்டை வயிறார சாப்பிடுவோம். எதையும் வீணாக்க மாட்டோம். ஏதாவது ஆசையா சாப்பிடக் கேட்டா அப்பா சம்பள நாள் வரை காத்திருக்கணும்.

  இந்த தீபாவளி விட்டா அடுத்த தீபாவளிக்கு தான் புது டிரஸ் இப்படி எல்லாத்துக்கும் காத்திருந்ததால சாப்பாட்டோட அருமையும், பொருளோடு அருமையும் தெரிஞ்சு வளர்ந்தோம். உன் புள்ளைய இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் தூக்கிக்கிட்டே திரிஞ்சா அது எப்படிடா சாப்பிடும்,  கூடவே சாக்கலேட்டு, பிஸ்கெட்டுன்னு நொறுக்குத் தீனி வேற’, என்றார். ஒரு வினாடியும் யோசிக்காமல் வைதேகி, ‘மாமா அது உங்க காலம். பன்னிரண்டு பேர்ல ஒருத்தரா பொறந்ததால நீங்க எல்லாத்துக்கும் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. நாங்க ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணுன்னு வெச்சிருக்கோம். நீங்க எங்களுக்கு உதவி செய்யலன்னாலும் பரவாயில்ல, இந்த மாதிரி தொணதொணக்காம இருந்தாலே போதும்’, என முகத்திலடித்தாற்போல பதில் சொல்லவும் அதற்குப் பிறகு கிளம்பி தன் இரண்டாவது மகன் வீட்டிற்குப் போனவர் திரும்பி வரவேயில்லை.

  ஒற்றைப் பிள்ளையை கணவனும் மனைவியும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பாதுகாத்தனர். வெளியே போய் விளையாடி கீழே விழுந்து விட்டால் அந்த பிள்ளைகளின் வீட்டிற்குப் போய் சண்டை போட்டு விட்டு இனிமே அந்த கெட்ட பசங்க கூட சேராதே, அம்மா உன் கூட விளையாடுறேன்,’ எனத்  தன் வேலையை விட்டுவிட்டு அவனுடனே இருப்பாள் வைதேகி. சுந்தரம் ஒரு படி மேல போய் மகன் கை வலிக்கிறதென சொல்லி விட்டால் வீட்டுப் பாடங்களைத் தானே எழுதுவான். மகன் காலை படுக்கையிலிருந்து எழ அடம் பிடித்து பள்ளிக்குத்  தாமதமானால் கூட பைக் ரிப்பேராகிடுச்சு என பழியைத் தன் மீது போட்டுக் கொண்டு பள்ளியில் சென்று அவமானப்படுவான். பிள்ளை ஒரு கார் பொம்மை கேட்டால் நிறத்துக்கு ஒன்றாக விதம்விதமாக வாங்கித் தருவான். அடுத்த நாள் ஒன்று கூட உருப்படியாக இல்லாமல் தூக்கி எறிந்து உடைத்திருப்பான் பிள்ளை. மழலை மாறாமல் மகன் தங்களை வாடா , போடி என அழைப்பதையெல்லாம் பெருமையாகக்  கொஞ்சி மகிழ்ந்தவர்கள் , வீட்டிற்கு விருந்தாளிகள்  வரும் போது அவர்களையும் அவன் அப்படியே மரியாதையின்றி பேசுவது கண்டு அவர்கள் முகம் சுழிக்கவே ‘பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுப்பா’ என்றதற்கு ‘அப்படிதான் சொல்லுவேன் போடா’, என்றதும் அவமானமாகிப் போனது.

  இப்படியே வரைமுறையின்றி வளர்ந்த உமாபதியின் முரட்டுத்தனமும், அடம் பிடிக்கும் குணமும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. 5-வது படிக்கும் போதே என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஸ்மார்ட்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் வேண்டுமென கேட்டான். கேட்டது  உடனே கிடைக்கவில்லை என்றால் பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைப்பது, மரியாதையின்றி எதிர்த்துப் பேசுவது என கைமீறிப் போகும் பிள்ளையைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் வாங்கித் தந்தனர். அப்படியே  பத்தாவது முடித்ததும் பைக் கேட்டு அடம் பிடித்தான் என வாங்கித் தந்தனர், அதி வேகத்தில் போய் காலை முறித்துக் கொண்டான். 12-வது முடித்ததும் கார் கேட்டதும் பயந்தனர். நீ எங்களுக்கு  ஒரே பிள்ளை, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா எங்களால தாங்கிக்க முடியாதுப்பா என்று அழுது பார்த்தனர். அதெல்லாம் நான் பத்திரமா ஓட்டுவேன் என சமாதானப்படுத்தினான். ‘காசு இல்லடா , இப்ப தான் வீடு கட்டி கடன்ல இருக்கோம்’ என்றதற்கு, ‘ நான் கேக்குறத வாங்கிக் குடுக்க முடியலைன்னா அப்புறம் எதுக்கு என்ன பெத்தே?’ என தன் கண்ணெதிரே மனைவியை மகன் மரியாதையின்றி பேசுவதைக்  கண்டு ஆத்திரமடைந்த சுந்தரம், ‘என்ன தைரியம் இருந்தா அம்மாவை இப்படி பேசுவே’, என கை ஓங்கினார். ஓங்கிய அப்பாவின் கையை பிடித்து ‘இந்த அடிக்குற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். நான் கேட்ட காரை வாங்கித் தந்தா தான் காலேஜ்க்கு போவேன் என அடம் பிடித்தான். வேறு வழியில்லாமல் வாங்கித் தந்தனர்.

  ஏழு லட்சம் கொடுத்து என்ஜினீயரிங் சீட் வாங்கினால் ஒரு மாதம் போனவன் எனக்கு அந்தக் காலேஜ் பிடிக்கலை எஸ் ஆர் எம் காலேஜ்ல தான் என் ப்ரெண்ட்ஸ் படிக்கிறாங்க அங்க சேருங்க என்றான். மேலும் சில லட்சங்கள் தந்து மகனின் அந்த ஆசையையும் நிறைவேற்றினர். வாரக் கடைசியில் குடித்துவிட்டு வர ஆரம்பித்தவன் பிறந்த நாள் பார்ட்டிக்கு நண்பர்களுடன் ரெசார்ட் போகிறேன்,  ஒரு லட்சம் கொடுங்கள் என்றதும் இனியும் நீ சீரழிய காசு கொடுக்க மாட்டேன் என வைதேகி உறுதியாக இருந்ததைக் கண்டு குடிபோதையில் அவள் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு வீட்டிலிருந்த நகை பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியவனை காவல்துறை கைது செய்தது. இன்று புழல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான். மனைவியை இழந்த சோகத்திலும், ஒரே பிள்ளை என ஈ, எறும்பு அண்டாமல் பாசமாய் வளர்த்த மகன் தாயையே கொல்லுமளவு தறுதலையாய் ஆனதை நினைத்தும் நோயாளியாகி படுக்கையில் விழுந்தார் சுந்தரம்.

  இன்று படித்த இளைஞர்களே ஆடம்பர வாழ்க்கைக்காக பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கணவன் மனைவியைக் கொல்வதையும், மனைவி கணவனைக் கொல்வதையும்,  தன் சுகத்திற்கு இடையூறாக இருப்பதாக எண்ணி  தாயே குழந்தைகளைக் கொல்வதையும் பத்திரிகைகளில் காணும் போது எப்படி இவர்களால் மனிதத்தன்மையே இல்லாமல் இப்படி நடந்து கொள்ள முடிகிறது என விமரிசனம் செய்து விவாதிப்பதோடு நம் வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம். ஆனால் பிறருடைய உயிருக்கும் உணர்வுகளுக்கும் சற்றும் மதிப்பளிக்காத இத்தகைய சுயநலவாதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்க இன்றைய பெற்றோர்களின் குழந்தை  வளர்க்கும் முறையும் ஒரு முக்கியமான காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

  குழந்தைகளின்  உரிமை துஷ்பிரயோகம்  (Children Entitlement Abuse)

  குழந்தைகள் தவறான விதத்தில் நடத்தப்பட்டால் அதை குழந்தைகள் மீதான வன்கொடுமை என்கிறோம். இவ்வன்கொடுமைகள் பாலியல் ரீதியானதாகவோ, உணர்வு ரீதியானதாகவோ அல்லது உடல்ரீதியானதாகவோ இருக்கலாம். ஆனால் குழந்தைகளோ, பெற்றோர்களோ குழந்தைகளுக்குள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது அல்லது பிள்ளைகள் பெற்றோர்களின் நற்குணத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது குழந்தை உரிமை துஷ்பிரயோகம் எனப்படும். இதனால் பிள்ளைகள் மனதளவில் முதிர்ச்சியடையாமல் குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவர்களின் நிலையை அடையாமல் முதிர் குழந்தைகளாகவே நடந்து கொள்கிறார்கள்

  தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையுடன் நடந்து கொள்ளும் சில பிள்ளைகளைப் பார்த்திருப்போம், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் யாவரும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும்,  தான் கேட்பது எதையும் மறுக்கக் கூடாது என இவர்கள் நினைப்பார்கள். அப்படி மறுக்கப்பட்டால் அழுது அடம் பிடிப்பது, பொருட்களைத் தூக்கி எறிவது, கத்துவது, கடிப்பது, அடிப்பது எனப் பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விடுவார்கள்.

  குழந்தைகளின் இத்தகைய நடத்தை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் தன்னைப் பற்றிய அதீதமான சுய மதிப்பீடு கொண்டவர்களாக இக்குழந்தைகள் மாறிவிட பெற்றோர்களே காரணமாகி விடுவர். மிகச் சிறிய பலூனில் மிக அதிகமான காற்று ஊதப்பட்டால் எப்படி பொருத்தமில்லாமல் காட்சியளிப்பதோடு வெடிப்பதற்குத் தயாராக இருக்குமோ அது போன்றே இவர்களது சுயமும் இருக்கும். தான் வேண்டுமென நினைப்பது எதையும் பெற தனக்கு உரிமையுண்டு என்ற மனப்பான்மை உடையவர்கள் இவர்கள். அதைப்  பெற தான் குழந்தையாக இருக்கும் தகுதியே போதுமானது, எவ்விதமான உழைப்பும் அவசியமில்லை,  பிறரை விட தான் எல்லாவிதத்திலும் மேலானவன் / மேலானவள் என்று இவர்கள் கருதுவார்கள். பிறரோடு நட்புடன் இனிமையாக பழகுவது போல் தெரிந்தாலும் தான் நினைத்ததை அடைய எவ்வழியையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். எளிதில் எரிச்சலுற்று பிறர் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது பிறர் மனதை காயப்படுத்துவது, அவமானத்திற்குள்ளாக்குவது, உடைமைகளை சேதப்படுத்துவது, தன் சுயலாபத்திற்காக பிறரைத் தந்திரமாகக் பயன்படுத்திக் கொள்வது என எதையும் செய்வார்கள். நாளடைவில் அன்பு, இரக்கம், மனித நேயம், போன்ற நற்பண்புகளே இவர்களிடம் இல்லாமற் போகலாம்.

  இது தோலின் நிறம், கண்ணின் நிறம், சில பரம்பரை வியாதிகள் போன்று பெற்றோரிடமிருந்து மரபு வழியாக வரும் பிரச்னையல்ல. வரமாகப் பெற்ற ஒற்றைக் குழந்தை என்ற காரணத்தால் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அதீத பாசத்தால் இந்த உலகத்தில் நீதான் எனக்கு முக்கியம், உன் மகிழ்ச்சிக்காக நான் எதையும் செய்வேன் நீ நினைத்ததை அடைவது உன் உரிமை என்ற செய்தியை குழந்தையின் மனதில் தன்னையுமறியாமல் தன் செய்கையால் பதிய வைத்து விடுகின்றனர் பெற்றோர்கள்.

  தான் பட்ட துன்பங்களைத் தன் பிள்ளை அனுபவிக்கக் கூடாது தனக்கு சிறு வயதில் கிடைக்காததெல்லாம் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும், தான் சிறு வயதில் பட்ட அவமானங்கள் எதுவும் தன் பிள்ளைக்கு நேரக் கூடாது, தன் குழந்தை எப்போதும் சந்தோசத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களே, பிறரது துன்பங்களைப் பற்றி கருத்தில் கொள்ளாத தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட சுய ஆராதனை மனோபாவம் (Narcissistic personality) கொண்ட குழந்தைகள் உருவாகக் காரணமாகின்றனர் .

  இக்கட்டுரை பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல; கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து தனிக்குடித்தனங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் வேலைக்குப் போகும் பெற்றோர் படாதபாடு பட்டு பிள்ளைகளை வளர்க்கின்றனர். தனக்கிருக்கும் சொற்ப நேரத்தில் தன் ஒற்றைப் பிள்ளையின் மீது அத்தனை பாசத்தையும் கொட்டிவிட்டது துடிக்கும் இவர்களது அதீத அன்பே  பிள்ளைகளின் வாழ்க்கைக்கு வில்லனாகிப் போகின்றது. எந்தெந்த சமயங்களில் பெற்றோர்கள்  தவறிப் போகிறார்கள் என்பது பற்றியும் பிள்ளைகளை வல்லவர்களாக சமுதாய பொறுப்பு மிக்க நல்லவர்களாக வளர்க்கத் தேவையான சில குறிப்புகளையும் அடுத்த கட்டுரையில் காண்போம்.

  -பிரியசகி

  ஜோசப் ஜெயராஜ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai