சுடச்சுட

  

  வளரும் பருவத்தினருக்கு ரூல்ஸ் மிகவும் தேவை!

  By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 21st September 2018 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  admin-panel-image-16658512-e75d-4463-b273-7152464d54d1-1503057486749

   

  சுதந்திரமாக வளர்க்கிறோம் என்றும், வளரும் பருவத்தினருடன் நண்பர்கள் போல் பழக்கம் என்று சொல்வோர் பலர் உண்டு. அதனால் அவர்களுக்கும் வளரும் பிள்ளைகளான குழந்தைகள் (8 வயது வரையில்), டீன் (9-12 வயதுடையவர்கள்), அடாலெஸன்ட்ஸ் (13 -19 வயதுடையவர்கள்) இடையே உறவு முறையே வேறு லெவலில் என்றும் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.  மிகவும் நல்லது! ஆனால் இதே நபர்கள், மற்றொருபுறம் தாங்கள் சொல்வதைப் பிள்ளைகள் அவ்வளவாகக் கேட்பதில்லை என்றும் சொல்வதுண்டு.

  ஏன் இப்படி நிகழ்கிறது? மிக எளிதான பதில்: ஏனென்றால், விதிகள், கட்டுப்பாடு, ஒழுங்குமுறை என்ற ரூல்ஸ் வளரும் பருவத்தினருக்கு ரூல்ஸ் மிகவும் தேவை! நண்பர்களாக இருப்பதற்குப் பிரதான இடத்தைக் கொடுத்து விடுவதால் ரூல்ஸை அமைத்தாலும் பிள்ளைகள் பராமரிக்கா விட்டாலும் அதைப் போனால் போகட்டும் என்று விட்டு விடுவதினால் நேர்வது இப்படிப்பட்ட விளைவுகள்.

  முதலிலிருந்து, அதாவது குழந்தை பருவத்திலிருந்தே ரூல்ஸை அமைப்பது வளர்ச்சிக்கு முக்கியம். இந்த ரூல்ஸ் என்பதில், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் எல்லாம் அடங்கும். வளரும் டீன், அடாலெஸன்ட்ஸ் என்ற பருவத்தினருக்கும் இது தேவைதான்.

  ரூல்ஸ் படிப்படியாக, அந்தந்த வயதிருக்கு ஏற்றாற் போல் மாற வேண்டும். ரூல்ஸ் அமைக்கும் பொழுது, அதற்கான அடிப்படை காரணங்களை எடுத்துக் கூறுவது அவசியம். என்ன, ஏன் என்று சொல்லித் தருவது பெரியவர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும். ரூல்ஸ் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதை கடைப்பிக்காவிட்டால் நிகழக் கூடிய விளைவுகளையும், குழந்தைகளுக்கும், டீன் பருவத்தினருக்கும், பருவம் அடைவோருக்கும் புகட்டுவது மிக அவசியம். இப்படி முறையாகச் செய்து வருவது நன்மையில் தான் முடியும். இவற்றின் அவசியத்தை இங்கு ஆராய்வோம்.

  கட்டுப்பாடுகள் என்பது சுதந்திரத்தை பறிக்கும் கருவியாக உபயோகித்தால் ரூல்ஸை வெறுப்புடன் பார்க்கத் தோன்றும். ரூல்ஸின் குறிக்கோளே அளவோடு, வயதுக்கேற்ற சுதந்திரங்களையும், பொறுப்புகளையும் கொடுத்து, அந்தச் சுதந்திரங்களை பிள்ளைகள் உபயோகித்துத் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அளிப்பதுதான்.

  உதாரணத்திற்கு, குழந்தை மற்றவரின் விளையாட்டு பொருட்களை கேட்டு வாங்கிக் கொள்ளலாம் (கேட்டு வாங்க வேண்டும் என்ற பழக்கம் ஒரு ரூலாகும்). அதை வைத்து விளையாடலாம் என்பது  குழந்தைக்கு சுதந்திரமாகும். விளையாடிக் கொண்டிருக்கையில் இன்னொரு குழந்தை கேட்டால் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (இது கட்டுப்பாடாகும்).  குழந்தை பகிர்ந்து கொள்வதை விதிமுறையாக்கி அதைப் பின்பற்ற வேண்டும். விளையாட்டுப் பொருளை சேதமில்லாமல் திருப்பித் தர வேண்டும் (இது ஒழுங்குமுறையாகும்). 

  ஏன், எதற்காக என்பதை முதலிருந்து தெளிவாக்க வேண்டும். வளரும் குழுந்தைகளுக்கும், வளரும் பருவத்தினரான டீன், அடாலசென்டுக்கும் வயதிற்கு ஏற்றவாறு தெளிவுபடுத்தி சொல்ல வேண்டும். அவற்றுடன் வழியுரைகளை வகுத்தால் தான் அவர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் தடைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

  அதற்கு மாறாக, ‘நீ இப்போ பெரியவனாக / பெரியவளாக ஆயாச்சு, நீயா செய்’ என்று சொன்னால் அது விவாதத்தில் கொண்டு விட்டுவிடும். ‘சொல்லிண்டே இருக்கேன், செய்வதே இல்லை” அல்லது ‘சரியாக செய்வது இல்லை’ என்பார்கள். வளரும் பருவத்தினரான டீன், அடாலசென்டும் தன் பங்கிற்கு, ‘சரி, சரி..’ என்ற பதிலுடன் தான் செய்வதையே செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு, குறிக்கப்பட்ட விதிமுறைகளைப் பற்றிப் புரியாமல், எப்படிச் செய்வது என்று  தெரியாமல், அதனாலேயே செய்யாமல் விட்டு விடுவதினாலும் இப்படி நேர்வதுண்டு.

  ஏன் இப்படித் தெரியாமல், புரியாமல் இருக்கும் நிலை? குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு எல்லாவற்றையும் பெற்றோர் தான் செய்து கொடுக்க வேண்டும் என்று மிகக் கவனமாக செய்வதுண்டு. பல முறை, குழந்தைகளின் பத்து வயது வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துப் பெற்றோர்களே செய்து தர, அது பழகி விடுகின்றது. பத்து வயது, டீன் பருவத்தில் இருப்பவர்கள். திடீரென அவர்களை செய்யச் சொன்னால் செய்வது தெரியாது, செய்ய மனதும் வராது. ரூல்ஸை நிராகரிப்பார்கள், வாத விவாதங்கள் எழும்.

  அப்படி நேராமல் இருக்க, சிறு வயதிலிருந்தே விதிமுறைகள் அமைத்து, வயதிற்கேற்ப பொறுப்புகளை, வாய்ப்புகளைக் கொடுத்து, அவைகளைப் பராமரிக்கக் கற்றுத் தர வேண்டும்.

  எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாக, முரணற்ற முறையில் பொறுமையாக  பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் வளரும் குழந்தைகளுக்கும், டீன், பருவம் அடைவோருக்கும் விதிமுறைகளை, கடமைகளை தன் பங்குக்கு நன்றாக, உறவுகளை ஒருங்கிணைக்கச் செய்கிறோம் என்ற திருப்தி வளரும். அவர்களை ஊக்குவிக்கும். அத்துடன் தங்களது திறன்களை மேம்படுத்தக் கூடிய வாய்ப்பாக புரிந்து கொண்டதும் தானாகச் செய்ய முன்வருவார்கள்.

  சிறு வயதிலிருந்தே, வளரும் பருவத்தில், யாரெல்லாம் இந்த வயதுடையவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்களோ (அதாவது பெற்றோர், ஆசிரியர், மற்ற பெரியவர்கள்) இது தான் எல்லைகள், வரம்புகள், அவற்றை மீறினால் இதுதான் விளைவுகள் என்றும் கூடவே சேர்த்துத் தெரிவித்தால், பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டது தெரிய வரும். அத்துடன் அவர்கள் தங்களின் எல்லைகளை அறிய, அதற்கு முறையாக நடந்து கொள்ள முயல்வார்கள்.

  வளரும் போதே ஒழுங்கு, கட்டுப்பாடுகளை, தடைகளை எழும் சந்தர்ப்பங்களில் பட்டியிலிட்டாற் போல் தெளிவாக விவரித்தால், அதை அடையாளம் கண்டு பின் தொடங்குவது எளிதாகும். ஒவ்வொரு வாய்ப்பும் கற்றுக் கொள்ளும் கருவியாகும். மற்றொரு பலனையும் அடையச் செய்யும்.  கட்டுப்பாடுகளைப் புரிய, பின்பற்றும் போது  முடிவு எடுக்கும் திறன்களையும், அவற்றை வளர்க்கும் விதங்களைக் கற்றுக் கொள்ளும் வழியாகிவிடும். இதனாலேயே, பிரச்னைகளுக்கு விடை காண்பதும், பயிலுவதும் நேரும். பல வாய்ப்புகளில் பயின்றால் பிசகாமல் செய்ய வரும். ‘பாடப் பாட ராகம்’ என்பார்களே அதே போல், புரிந்து சரி செய்வது வாழ்க்கைப் பாதையின் மிக முக்கியமான அங்கமே!

  போகப் போக முடிவு எடுப்பதில் தேர்ச்சி பெற்று விடுவார்கள். நல்லது-கெட்டதை எதை வைத்து எடை போடுவது, மற்றும் அவற்றினுள் வித்தியாசத்தை அறிய நல்ல வாய்ப்பாக அமையும். செய்து பழகி வந்தால் தான் பிள்ளைகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை மேலும் அறிய நேரும். இவை வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் உதவும்.

  இப்படிச் செய்வதற்காக, வளரும் பருவத்தினருக்கு சுதந்திரமாக முடிவுகளை எடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். மிக அவசியமும். அதே சமயத்தில், அவர்களுக்கு ஆதரிக்க, அரவணைக்கப் பலர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தாலே துணிவுடன் செயல் படுவார்கள். வரம்புகள் அவர்களுக்குப் பாதுகாப்பாகும்.

  மாறாக, வளரும் பருவத்தில், சிறு வயதிலிருந்தே அவர்களுடன் இருக்கும் பெரியவர்களே எல்லாவற்றையும் அவர்களுக்காக, யோசித்துச் செய்து விடுவார்கள். ‘பாவம், குழந்தை என்ன தெரியும்?’ என்றும் ‘செய்வது எங்க, பெற்றோர் கடமை’ எனப் பல பட்டியல் இட்டுச் செய்வார்கள்.

  அதன் விளைவாக, வளர்வோர் உடலுக்கோ மனதுக்கோ எந்த ஒரு வேலை இல்லாமல் மந்தமாக இருப்பார்கள். கேட்டது அப்பொழுதே கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை வளரும், அதே போல் அடம், ஆர்ப்பாட்டம் என்ற குணாதிசயங்களை அவர்கள் குணங்களாக ஆகும். இப்படியா இருக்க விரும்பினோம்?

  பல நிபுணர்களின் கருத்துப் படி, குறிப்பாக அடோலசன்ட் என்ற பருவ காலம் மன அழுத்தமும் புயலும் என்று நிகழ்வதே அவர்களுக்குத் தடைகளை, கட்டுப்பாடுகளை, சொல்லாததால் தான். கட்டுப்பாடுகளை, ஒழுங்குகளை போதுமான அளவிற்கு கற்றுக் கொள்ளாததாலும் அவற்றைச் செயல்படுத்த வாய்ப்புகள் மிகக் குறைந்தோ, அல்லது இல்லாமல் போவதினாலோ உணர்ச்சி மிக்கவர்களாக ஆக நேர்கிறது.

  பருவ வயதினரும், டீன்களும் தங்களின் சமூக வலைகளை விஸ்தரிப்பதில் குறிப்பாக இருப்பார்கள். இப்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முகநூல், ட்விட்டர், என்று பல ரூபங்களில் வாய்ப்புகள் உள்ளன. . இவற்றை மறுத்து, தடுப்பதற்குப் பதிலாக அவற்றைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் செயல்பட வேண்டும்.

  தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அதைச் சாபம் என்றும், தேவையற்றது என்றும் சொல்வதற்கு பதிலாக, அவை தேவை என்பதை ஏற்றுக்கொள்ள நம்மை பக்குவப்படுத்தி கொள்வது நல்லது. குறிப்பாக டீன், அடாலெஸன்ட்ஸ் வீட்டில் உள்ளவர்களை விட தங்கள் நண்பர்கள், வெளி உலகில் பலருடன் பழக விரும்புவார்கள். இது அவர்களின் வளர்ப்பைச் சேர்ந்ததாகும். இதை நிராகரித்து, தடை செய்தால் அவர்களின் பல திறன்களை ஊணப்படுத்தவதாகும்.

  ஒரு விதத்தில் பார்த்தால் வேலை செய்யும் போது இந்தக் குணாதிசயம் மிகத் தேவையானது. எந்த வயதிலும் மற்றவருடனும், மற்றவர்களுடனும் இருப்பதும் நேரிடும். அதனால், இந்தத் திறன்களை நல் வழிகளில் கொண்டு செல்வது முக்கியம். அதற்குப் பதிலாக தடை செய்தால் அதை திருட்டுத் தனமாக செய்யத் தூண்டும். பெரிய சமூக நிலையைக் கூட்டுவதும், வைத்துக் கொள்வதும் ஒரு கலை. அந்தக் கலை வளரப் பல திறன்கள் மேம்படும்.

  படிப்பிலும் மிகக் கவனம் தேவை. அதற்கும் அதிகமான கவனமும், நேரமும் தரப்படுகிறது. அதே போல் இந்த வயதினருக்கு விளையாட்டு, ஆட்டம்-பாட்டம் தேவை தான். இவ்விரண்டுக்கும் சமமாக நேரம் ஒதுக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல், தத்தளித்து விட்டு, சரியாக வழி காட்டுவதற்கு ஒருவர் இல்லை என்றால் அதன் விளைவாகத் தோல்வி ஏற்படும்.

  பயின்று, முடிவு செய்யும்  திறன்களை வளர்த்துக் கொள்ள  பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக முக்கியம். அவர்களின் சுற்றுப் புறங்களில் தான் பத்திரமாக இருக்கிறோம் என உணர்வது மிக முக்கியம். நம்மை ஆதரிக்க இருக்கிறார்கள் என்பது தெம்பை அதிகரிக்கும். தேவைப்படும் போது, வழிமுறைகளை, கோட்பாடுகளை எடுத்துச் சொல்வது குடும்பம், நண்பர்கள், மற்றவர்களின் பொறுப்பாகும்.

  வளரும் பருவத்தில் தாங்கள் பார்க்கும், பழகும் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது நேரும். அதற்காகவே குழந்தைகளுடன், பருவம் அடைவோருடன் இருப்பவர்கள் பொறுப்பாக செயல் பட வேண்டும். பெரியவர்கள் தன் பேச்சில், நடத்தையில் ரூல்ஸ் கைப்பற்றுவது அவசியம். அவர்கள் செய்வதை பல விதங்களில் வளரும் பருவித்தனரும் கற்றுக் கொள்வார்கள்.

  இதனால் அனைவரும் ஏற்கும் விதமாக விதிமுறைகளை விதித்து, ஒவ்வொருவரும் அதைப் பின்பற்ற வேண்டும். சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து எப்போதும் இருக்க வேண்டும்.

  ஒரு வேளை வளரும் குழந்தைகளுக்கோ, பருவம் வருவோருக்கோ எந்த விதமான ஆதரவும் இல்லை என்றால், அவர்கள் சோகமாகவும் கோபமாகவும் வளரக் கூடும். வன்முறை, போதைக்கு அடிமை எனப் பல ரூபங்களை எடுக்கலாம். ஆனால், அவர்கள் மதிக்கும் எவரோ ஒருவர், பெற்றோரோ, ஆசிரியரோ, சமுதாய நலனில் அக்கறை உள்ளவரோ அல்லது ஒரு தலைவரோ, அவர்களுக்குத் தடைகளை விதித்து, அவற்றை எடுத்துச் சொல்லி அவற்றை பின்பற்றிச் செல்லும் பாதை வகுத்தால் போதும், அதை உடனே பின்பற்றுவார்கள்.

  மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

  malathiswami@gmail.com

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai