உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேணி காப்பதற்கான சில வழிகள்

ஓரிடத்தில் நாம் பணிக்கு சேரும்போது பல ஆயிரம் கனவுகளுடன் சேர்கிறோம். நாம் சேர்ந்த பணியிடம்
உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேணி காப்பதற்கான சில வழிகள்

ஓரிடத்தில் நாம் பணிக்கு சேரும்போது பல ஆயிரம் கனவுகளுடன் சேர்கிறோம். நாம் சேர்ந்த பணியிடம், அலுவலகம் நமது இயல்புடன் ஒத்துப்போகும்படி அமைந்து விட்டால் அதைவிட பேரானந்தம், நிம்மதி வேறொன்றுமில்லை. மேலதிகாரிக்கும், நமக்கும் இடையே நல்ல புரிதலும், நல்ல உறவும் ஏற்படுவது பணி வாழ்க்கைக்கு மிக அவசியம்.

மேலதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேணி காப்பதற்கான சில வழிகள்:

நில்

மேலதிகாரி நமக்கு சிறு சிறு பணிகளைச் சொல்லும் போது, மாற்றி மாற்றி வேலைகளைக் கொடுக்கும் போது, நாள்கள் வாரியாக, வாரம் வாரியாக, மாதம் வாரியாக என அறிக்கைகளை கேட்கும் போது, அதுவும் நாம் அவசியமற்றது என்று எண்ணும் ஒன்றை கேட்கும்போது நாம் எரிச்சலடையக் கடாது. அந்த வேலையைத் தவிர்க்கவோ, மறுக்கவோ நினைக்காமல், சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். நம் பணியின் முக்கியத்துவம் என்ன? நமது நிறுவனத்தின் நோக்கம் என்ன? இதனால் நம் நிறுவனம் அடையும் பயன் என்ன? என்பதை யோசித்து அதன் பின்னர் பதிலளிக்க வேண்டும்.

அதேபோன்று, செய்ய வேண்டிய அலுவலகப் பணிகள் குறித்து மேலதிகாரி விவரிக்கும்போது, நமக்கு உடனே புரிந்து விட்டாலும் கூட, இறுதி வரை விவரிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏனெனில் அது நமக்கானது மட்டுமல்ல. நம் சகப் பணியாளர்களுக்கும் என்பதால், ஒருவேளை அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். 

கவனி

மேலதிகாரி பேசுவதையும், அவரது சிந்தனைகள், செயல்கள் அனைத்தையும் நாம் நன்கு கவனிக்க வேண்டும். மேலதிகாரி எண்ணினால் நம்மை மேலேயும் உயர்த்தலாம், கீழேயும் தாழ்த்தலாம். எனவே அவரது எண்ண ஓட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, அவரை விஞ்சி செயல்படாமல் அவர் சொல் கேட்டு, பார்த்து, கவனித்து செயல்பட வேண்டும்.

அவரது அன்றாடப் பணிக்கு தொந்தரவு தரும் வகையில், அடிக்கடி சந்தித்துப் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அவரை சந்தித்து பணிகள் குறித்து விவரிக்க என சரியான நேரம் ஒன்றை ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டுமே சந்திக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அவர் நமக்கு நிறைய கற்றுக் கொடுக்க ஆசைப்படுவார்.

பேசு

மேலதிகாரிக்கு நம்மை விட பன்மடங்கு வேலையிருக்கும். அவரது பணிச்சுமைகளை கருத்தில்கொண்டு, அவருக்குப் பக்கபலமாக நாம் இருப்பதை அவர் உணரும் வகையில் நாம் செயல்பட வேண்டும். வேலையைப் பகிர்ந்தளிக்க உதவ வேண்டும். மேலதிகாரியிடம் உரையாடுவதற்கு பணியிடத்தில் நமக்கு நேரம் கிடைக்காமல் போகலாம். எனினும் நமக்கு தோன்றிய கருத்துகள் நிறுவனத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் பலனனிக்கும் என்றால், அதைத் தயங்காது அவரிடம் தெரியப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த இந்த காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ நாம் அவரைத் தொடர்பு கொள்ளலாம். எனினும், நேருக்கு நேர் சந்தித்து கூற வாய்ப்பு கிடைத்தால் அதை தயங்காது பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் நேருக்கு நேர் பேசும்போது, நமது கருத்தை அவருக்கு சற்று தெளிவாக எடுத்துக் கூற இயலும். இவ்வாறு நாம் பேசுவதால் வேலையில் நமக்குள்ள அக்கறையை அவர் புரிந்து கொண்டு, நம்மை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதற்கும் தயங்க மாட்டார்.

செய்

நம்மில் பலர் பல சமயம் அவர்களுக்கென ஒரு வட்டம் இட்டுக் கொண்டு அதற்குள்ளேயே இயங்குவார்கள். அப்படியில்லாமல், இக்கட்டான சூழ்நிலைகளிலும், நம்மை நம்பி எந்தப் பணியையும் ஒப்படைக்கலாம் என்று நம்பும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். 
நமது தனித்தன்மையை வெளிப்படுத்த கிடைக்கும் சரியான தருணங்களையும், வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்தினால் மேலதிகாரியின் நன்மதிப்பு நம்மைத் தேடி வரும். எனவே, பணியிடத்தில் நில், கவனி, பேசு, செய், வெல். 
- க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com