மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

நாம் எதைச் செய்யப் போகிறோமோ அது வெற்றி பெறுமோ இல்லையோ என்று அஞ்சி நடுங்குவதற்குப் பதிலாக
மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

சென்ற பல வாரங்களாக, நம்முடைய மனப்போக்கு ஏன் மாறாமல் இருக்கலாம் என்றும், அதை மாற்றி அமைப்பதின் லாபத்தையும் செய்முறைகளையும் பார்த்து வந்தோம். மேலும் சில விதங்களை ஆராய்வோம்.

நாம் எதைச் செய்யப் போகிறோமோ அது வெற்றி பெறுமோ இல்லையோ என்று அஞ்சி நடுங்குவதற்குப் பதிலாக, ‘என்ன செய்யப் போகிறேன்’ என்பதை மனதில் வரைபடமாகத் தீட்டிக் கொள்வது உதவும். திட்டம் தீட்டுவது போல, ஒவ்வொரு செய்முறையையும் விலாவரியாக வரிசைப்படுத்தி கொண்டால், செயல் பாட்டையும் அது விலாவரியாக்கிவிடும். ஒவ்வொன்றுக்கும் எவ்வாறு செய்வதென்று முன்னதாகவே யோசனை செய்து தயாரான நிலைக்கு வந்துவிடுவோம்.

கூடவே, ‘இதை எவ்வாறு வித்தியாசமாகச் செய்யலாம்?’ என்றும் யோசிப்பு ஆரம்பமாகும். மனோதைரியத்தைத் தரும் சிந்தனையாகி விடும்.

இவ்வாறு பலமுறை செய்தால், நமக்கே நாம் திரும்பத் திரும்ப செய்யும் தப்புகள் தெரியும். அவற்றைச் சரியாக்கவும் உதவும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக நாம் வளைந்து கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்போம்.

சுய ஆராய்ச்சி

மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம். அதற்கு முதலில் நாம் தன்னைப் பற்றி ஆராய்ந்து கொள்வது தேவையாகும். நமக்கு வந்த வெற்றிகளையும் சரி, பின்தங்குதலையும், குறைகளையும் என்னவென்று, எதனால் வந்ததென்று தனக்குள் விவரித்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் இப்படி ஆராய்வதில் நமக்குத் தன் வலிமைகளும் தென்படும், அதே நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டியவற்றையும் கண்டறிய வாய்ப்பாகும்.

எந்த மாதிரியான சூழ்நிலையில் பின்தங்குதல் ஏற்படுகிறது என்பதைக் கண்டு கொண்டால், அவற்றைச் சுதாரிக்க முயற்சிகள் மேற்கொண்டு, அவற்றை மாற்றி அமைக்க முடியும். இதற்கு, முதலில் மனப்பான்மையை மாற்ற முடியும் என்ற மனப்போக்கை நாம் வைத்திருக்க வேண்டும்.

செய்து என்ன பலன் என்று கேள்வி கேட்டாலோ, இல்லை பயத்தில் செய்ய அஞ்சினாலோ, மனப்போக்கை மாற்றிக் கொள்ளத் தயங்கி அப்படியே விட்டு விடுவோம். அதாவது எவ்வித மாற்றமும் செய்யாமல் இருந்து விடுவோம். இருப்பவைகளைக் காப்பாற்றிக் கொண்டு, முன்னேற்றத்தைக் கைவிட்டு விடுவோம்.

மற்றவர்கள் சொல்லும் கருத்தை, எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம், அதன் விளைவாக என்ன செய்கிறோம்? என்பதைக் கவனித்து, இதற்கான பதில்களை கண்டு கொள்வதும் தெளிவு பிறக்க வாய்ப்பாகிறது. மற்றவர்களின் அபிப்பிராயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் “என்னுடைய கணிப்பு என்ன?' என்று ஆராய்ந்து கொள்வது அவசியமாகும்.

மதிப்பீடு

இது எப்படி என்றால், சிலர் தேர்வு எழுதுவதில் தனக்கு என்ன, எவ்வளவு புரிந்தது என்பதைக் கணக்கிடுவார்கள். வேறு சிலர், தான் எழுதியதை மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். இந்த ஒப்பிடுகையில், தங்களை மிஞ்சி இருக்கிறார்களா என்பதில் கவனம் செலுத்துவார்கள். இதில் போட்டி உணர்வு அதிகமாக இருப்பதால்,மற்றவர்களை மிஞ்சுவதே நம் குறிக்கோளாக இருக்கும். இப்படி இருக்கையில் தன் மனப்பான்மையை எப்பொழுதும் மாற்றாமல் இருப்பவர்களாக இருந்து விடுவார்கள்.

இதற்கு நேர்மாறாக, படித்தது புரிந்ததா என்பதை ஆராய்பவர்களும் உண்டு. அவர்கள் மற்றவர்களுடன் போட்டியோ ஒப்பிடுவதோ செய்யாமல் தனக்கென்று ஒரு குறிக்கோளை வைத்திருப்பார்கள். அதை அடைய முடிந்ததா என்றே கணிப்பார்கள். அடைந்து விட்டால், அடுத்த கட்டத்தை அமைத்துக் கொள்வார்கள்.

இதற்கு தாமாகவே ஊக்குவித்துக் கொள்வார்கள். தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள். இது மட்டுமல்ல, பதட்டமின்றி செயல் படுவதும் ஒரு யுக்தியாகும்- முடிவுகளைப் பற்றியே நினைத்து இருந்தால் பயம், பதட்டம் வரும். இவர்கள் செய்முறையை மிகக் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இதன் மூலமாக தங்களின் மதிப்பீட்டைச் சரி செய்து கொள்வார்கள். அதாவது ஒரு தோல்வி வந்ததால் தன்னை தாழ்த்திக் கொள்ளவோ, உதாசீனப் படுத்திக் கொள்ளவோ மாட்டார்கள். மாறாக அந்த அனுபவம் எதைக் காட்டுகிறது, கற்றுத் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயலுவார்கள். இப்படிச் செய்பவர்களின் மனப்போக்கு போகப் போக மாறி, வளைந்து கொடுத்து, வளர்ச்சி அடைந்து கொண்டே போகும். இதைப் பரந்த மனப்பான்மை என்ற குணாதிசயம் எனச் சொல்லலாம்.

மனப்பான்மையை மாற்றாமல் இருப்பவர்கள் செய்வதின் முடிவைப் பற்றியே கவனமா இருப்பார்கள். அதனால், முடித்துவிடவே எல்லா வற்றையும் செய்வார்கள். சீக்கிரமாக முடித்துவிடுவதில் தான் வெற்றி என்றே எண்ணுவார்கள்.

இவர்களின் மன தைரியம் மிகவும் குறைவாக இருக்கும். இதனாலேயே வரும் சவால்களை தட்டிக் கழித்து கொண்டே இருப்பார்கள். இது, சுயமரியாதையை மேலும் பலவீனப் படுத்தும்.

மற்றவர்கள் என்ன தான் அதிக மதிப்பெண்கள் தந்தாலும், புகழாரங்கள் பெற்றாலும், தன் திறமையில் ஏதோ குறைபாடு இருப்பதை உணருவார்கள். அவர்களின் மைன்ட் வாய்ஸ் ‘நிஜமாகவே எல்லாம் தெரிந்திருந்தால் எதற்காக அஞ்சுகிறோம்?’ என்ற சந்தேகத்தை மனக்கண்ணில் நிறுத்தும்.

ஊக்கமூட்டு 

சரி, நமக்காக மனப்பான்மையை மாற்றி அமைக்க எந்த வழியும் தோன்றவில்லை என்றாலும் ஒன்று செய்யலாம். டெட் டாக் (TED Talk) போன்ற ஊக்கமூட்டும் பேச்சு, புத்தகங்கள், குறும்படம் என்று பல உள்ளன. எது நம்மை ஈர்க்கிறதோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். அதில் சொல்லப்படும் வழிமுறைகள் நமக்குப் பாதை வகித்துக் கொள்ள உபயோகமாகும்.

அதேபோல் சில ஆளுமைகளின் வாழ்க்கை முறை, கொள்கைகள் நம்மைக் கவரும். அவர்களை இன்னும் கூர்ந்து கவனித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஆம், மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாலே வழிகள் கண்களுக்கு தென்படும்.

மெதுவாக மனத்திடத்தை வளர்க்க

பொதுவாக மனப்பான்மையை மாற்ற முடியாது என்பவர்கள் எந்தவித சவால்களையும் சந்திக்க மாட்டார்கள். இப்படி நடுங்கித் தவிர்ப்பதற்குப் பதிலாக என்ன செய்தால் எதிர்கொள்ள முடியும் என்பதைக் கணிப்பது மேல்.

அதற்கு இதுவரை நாம் பயந்து தவிர்த்த ஏதாவது ஒன்றை எடுத்து, ஏன் தவிர்த்தோம் என்பதைப் பார்வையிடலாம். இதைச் செய்ய தைரியம் தேவை.

இப்படிப் பட்ட சவால்களை எதிர்கொள்ள, மனோதிடத்தை வளர்த்துக் கொள்வது மிகத் தேவையானதாகும். முதலில் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் செய்வதை முடிப்போம் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்படி நிர்ணயிக்கும் சுபாவத்திற்கு விடாமுயற்சி பக்க துணை தரும். அதையும் கூட சேர்த்துக் கொண்டு, ஆரம்பித்தால், வெற்றி தான் கிடைக்கும்.

செய்வேன், செய்து முடிக்க முடியும் என்ற எண்ணங்கள் எல்லாம் மனப்பான்மை மாற்றிக் கொள்ள முடியும் என்ற ரகத்தைத் தான் காண்பிக்கிறது. இந்த வழியின் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

நம்முடைய சிந்தனையை நாமே ஆராய்வோம்

மேற்சொன்னதை எளிதில் பழக்கமாக்க உதவுவது நாமே தன் சிந்தனையை ஆராய்ந்து கொள்வது. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பில் இந்த மாதிரி சிறுவயதிலிருந்தே பழகிக் கொள்ளும் குழந்தைகள், பெரியவர்களான பிறகும் எந்த விஷயமானாலும் நன்கு ஆராய்ந்து, யோசித்து முடிவு எடுப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் ‘நான் இப்படித்தான்’ என்ற மனப்பான்மையை மாற்றி அமைக்கத் தடையின்றி செய்து கொண்டார்கள் அத்துடன் மற்றவர்களுக்கு உதவுவது, மாற்றி யோசிக்கும் திறன் நிறையவே இருந்தது.

சரி, நாம் சிறுவயதில் இப்படிப் பழகி கொள்ளவில்லை என்றாலும் இதைச் செய்ய முடியும். நம் மூளையின் சுபாவமே, எதை வேண்டுமானாலும் எந்த வயதிலும் ஆரம்பித்தாலும், அதன்படி அட்ஜஸ்ட் செய்து கொள்வதே. நாம் யோசிப்பது என்னவென்று நாமே ஆராய்ந்தால் தெளிவும் வரும், அதே சமயத்தில் அதில் உள்ள நல்லதையும் கெட்டதையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். இதன் பயன்? நாமே தன்னை சுதாரித்துக் கொள்ள இதை விட வேறு என்ன வேண்டும்?

Summary மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?’ தொடரின் சுருக்கம் 

பல வழிகள்! எதை வெண்டுமானாலும் தேர்வு செய்யலாம்!

Many ways, select any! 

சில வழிகள்! எதைத் தேர்வு செய்ய? 

நம் வாழ்வில் பலவற்றை சந்தித்து இருக்கிறோம். வாழ்வின் சூழல், சந்தர்ப்பங்கள், கலந்துரையாடல், அனுபவங்கள் நம்மை பலவற்றைப் பற்றி சிந்திக்க வைக்க உதவுகிறது. இவற்றை சந்திக்கையில், உணருகையில் நாம் ‘ஆம் இதுவரையில் நினைத்ததை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று அணுகினால் அதை வளையும் மனப்பான்மை உள்ளவர்கள் எனலாம். ஒரே வரியில், பல வழிகள்! எதை வெண்டுமானாலும் தேர்வு செய்யலாம்! அதே சமயம் எக்காரணத்திற்கும் மாறவே மாட்டேன் என்று இருப்பவர்கள் மனப்பான்மை மாற்ற முடியாது என்று இருப்பார்கள். இப்படி இருக்கையில் எவ்விதமான இடையூறுகள் ஏற்படும் என்பதையும் பார்த்தோம்.

சென்ற பல வாரங்களுக்கு நாம் பார்த்து வந்ததைச் சுருக்கமாக ஒரு பார்வையிடலாம். அதிலிருந்து தெளிவாக தெரிந்தது, மனப்போக்கு மாற்றக் கூடியவையே!

தொடரை எவ்விதத்தில் மனப்பான்மை உருவாகிறது என்பதிலிருந்து ஆரம்பித்தோம். மனப்பான்மை என்றால் என்ன? இதை விளக்க: எப்படி நம் அனுபவங்கள், மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளுதல் எல்லாம் நம் மனப்பான்மையை உருவாக்கும் என்பதை முதலில் பார்த்தோம். முக்கியமாக, எப்பொழுதும் மற்றவர்கள் சொல்வதை நிஜம் என்று வைத்துக்கொள்வது ஏன் நல்லது அல்ல என்பதைப் புரிந்து கொண்டோம்.

1. பாகம் 1. முதல் பாகத்தில் மேலும் இதை ஆழமாக ஆராய்ந்தோம். இதன் மையமே எவ்வாறு பல விதத்தில், நாம் அடையாளங்களைப் பெறுவது என்பது. நம் பெயர் போல், வாங்கும் சான்றிதழ்களும், மதிப்பெண்களும், சபாஷும் அடையாளங்களே! இவை மற்றவர்கள் சூட்டுவதாகும். மற்றவர்கள் சூட்டுவதை ஏற்றுக் கொண்டு, அதுதான் தன்னுடைய அடையாளம் என்பவர் தனித்துவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். தம்மைப் பற்றி அறியாமல் இருப்பார்கள்.

2. பாகம் 2. அடுத்ததாக, மற்றவர்களின் அபிப்பிராயத்தை மட்டும் மதிப்போர்கள் தங்கள் கவசங்களைக் காப்பாற்ற முயல்வதை ஆராய்ந்தோம். தங்களுக்கு ஒன்று தெரியவில்லை, புரியவில்லை என்றாலும் அதை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள். சவால்களைச் சந்திக்க மாட்டார்கள். அதாவது, நமக்கு புரியல +தெரியல = (அதனாலேயே) முடியல என்பதில் முடியும். நாளடைவில் எக்காரணத்திற்கும் எந்தச் சவாலையும் எதிர் கொள்ள அஞ்சுவார்கள்.

3. பாகம் 3. பாராட்டுக்கு ஏங்குவது, பாராட்டினால் மட்டும் செயல்படுவார்கள். 'சவாலே தூர நில்! பாராட்டு மட்டுமே, வா வா’ என்றே வாழ்வார்கள்! செயல், சொல் இரண்டிலும் மற்றவர் ஊக்கம் படுத்த, பாராட்டினால் மட்டுமே செயலில் இயங்குவார்கள். எப்போதும் காற்றிருப்பது என்று இருப்பார்கள்.

4. பாகம் 4 விளைவுகள். இப்படிச் செயல் படுவதில் கேள்வி கேட்க அஞ்சி, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளாமல், தன்னம்பிக்கை குறைந்து விடும். உயர்ந்த நிலையில் இருப்போரின் சொல்லை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள், தானாக இயங்க மாட்டார்கள்.

5. பாகம் 5. மனப்போக்கு: மாற்றக் கூடியவை! அகண்ட பார்வை உள்ளவர்கள்,மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்கள். கற்றுக்கொள்ள எப்போதும் தயார், முயற்சியில் முழுக்க மூழ்கி, அதில் ஆனந்தம் பெறுபவர்கள்.

6. பாகம் 6 அகண்ட பார்வை உள்ளவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரங்கள் பற்றி விலாவரியாக பேசினோம். தெளிவு, எப்பொழும் தன் தகுதியை நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பது, இதுவே இவர்களின் வழிமுறை.

7. பாகம் 7, அந்த வெற்றியின் சிகரங்களை அடைய உதவும் பலவற்றை ஆராய்ந்தோம்! தன் மைன்ட் வாய்ஸ் கேள்விகளை எழுப்ப விடுவது, தோல்வியின் காரணிகள் ஆராய்வது எல்லாம் உதவும்.

8. பாகம் 8,இங்குப் படிக்கும், ‘நம்முடைய சிந்தனையை நாமே ஆராய்வோம்!’

நேரம் வந்துவிட்டது, நாம் தேர்வு செய்வதற்கு :

முடியுமா/முடியாது கடிவாளம் + என்றும் பலவீனம் காட்டாத கவசம் + வெட்கம் +அச்சமுடனா?

தடைகளுடன் ஊர் போய்ச் சேர்வது கேள்விக்குறியே!

இல்லை

புரிந்து கொண்டு + தெரிந்து + செய்யலாம் என்றா?

நம் அடையாளங்களை அமைக்கவும், உருவாக்கவும், வகுக்கவும், நமக்குப் பங்குண்டு.

செயல்படலாமா? / செயல்பட வேண்டியது தான்! 

மனப்பான்மை தொடர் முற்றும்

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@ gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com