Enable Javscript for better performance
உங்கள் புதுவருட சபதம் நிறைவேறியதா? இல்லையெனில் இது உங்களுக்கு உதவலாம்!- Dinamani

சுடச்சுட

  

  உங்கள் புதுவருட சபதம் நிறைவேறியதா? இல்லையெனில் இது உங்களுக்கு உதவலாம்!

  Published on : 18th January 2019 01:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2019

  ஒரு விதையை மண்ணில் விதைத்து விட்டு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இல்லாமல் விட்டுவிட்டால் செடியாக அது எப்படி வளர முடியாதோ அப்படித்தானே நம் உடலும் மனமும், அதற்கு தேவையானதை கொடுத்தால்தானே ஆரோக்கியமானதாக இருக்கும் ?

  'புது வருடம் என்றாலே நாம் சில உறுதிமொழிகளை எடுப்போம். அதில் மிக முக்கியமானது ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தாவது, உடல் எடையைக் குறைப்போம் என்பதுதான். உங்களது எண்ணம் நியாயமானதுதான். ஆனால் உங்களால் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய முடிகிறதா? தினமும் மேற்கொள்ளக் கூடிய 20 நிமிட உடற்பயிற்சியும், 2 நிமிட தியானமும் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித் தரும். புத்தாண்டில் உடற்பயிற்சி மட்டுமின்றி வேறு சில உறுதிமொழிகளை எடுப்பதும் பிறகு அதை கடைப்பிடிக்காமல் பாதியில் விட்டுவிடுவதும் வாடிக்கையான ஒன்று. ஆனால் மனதில் உறுதி இருந்தால் உங்களால் நிச்சயமாக உங்கள் இலக்கை அடைய முடியும். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி உங்களுடைய உறுதிமொழியைக் கடைப்பிடிக்க "ஸ்மார்ட்' முறையைப் பின்பற்றுங்கள்' என்கிறார் மனநல நிபுணர் வந்தனா. 

  குறிப்பான திட்டமிடுதல்: இந்த இலக்கை உறுதியாக என்னால் கடைப்பிடிக்க முடியுமா? உதாரணத்திற்கு 'நான் தீவிரமாக உடற்பயிற்சி செய்யப் போகிறேன்' என்று சொல்வதற்கு பதிலாக 'வாரத்தில் மூன்று நாள் வாக்கிங் போவேன்... அல்லது தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வேன்' என்று குறிப்பாகத் திட்டமிடுவதன் மூலம் நாம் கவனமாக நமது இலக்கை அடைய முடியும். 

  அளவைக் குறிப்பிடுங்கள்: 'இந்த வருடம் நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்' என்று உறுதிமொழி எடுப்பதை விட, தேவையான செலவுகள் மற்றும் தேவையற்ற செலவுகள் என்று பட்டியல் போட்டு 'தேவையற்ற செலவுகளைச் செய்ய மாட்டேன்' என்று உறுதிமொழி எடுங்கள்.

  யதார்த்தமான இலக்கு: உங்கள் இலக்கை அடையக் கூடிய தூரத்தில் வைத்தால்தான் அதை சுலபமாக சென்றடைய முடியும். தூரமான இலக்கை அடைய முடியாமல் தோற்று விட்டோமே என்று கவலைப்படாமல் இருக்க, எளிதாக அடையக் கூடிய இலக்கை நிர்ணயம் செய்யுங்கள். வாக்கிங் சென்று வந்தால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். எனினும், அதற்காக உடனே மலைகளின் மேல் ஏறி டிரெக்கிங் செய்ய இயலாது. அதற்கென்று பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகுதான் உங்களால் அந்த இலக்கை அடைய முடியும். கொஞ்சம், கொஞ்சமாக, நிதானமாக உங்கள் உறுதிமொழியைக் கைவசப்படுத்தலாம்.

  உங்களுக்கும் மற்றவர்களைப் போலவே ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே உள்ளது. சந்தர்ப்பம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து திட்டமிடுதல் அவசியம். நீங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலான வேலை பார்க்கிறீர்கள் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் உங்களின் உறுதிமொழி அமைய வேண்டும். உறுதிமொழி எடுக்கப் போகிறீர்கள் என்றால் உங்களின் நேரம், பணம் - இப்படி யதார்த்தமான விஷயங்களை முன்னிறுத்தி இலக்கைத் தீர்மானியுங்கள். 

  கால நேர அளவு: திட்டமிட்டபடி இலக்கை அடைய  குறித்த நேரத்தை நிர்ணயிப்பது  மிகவும் அவசியம். ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடையைக் குறைத்துக் காட்டுவேன் என்று உறுதியாக திட்டமிடும்போது, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் கடுமையாக கடைப்பிடித்து ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை குறைவதற்கான இலக்கை அடைய முடியும். 

  எண்ணங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்: ஒரு விதையை மண்ணில் விதைத்து விட்டு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இல்லாமல் விட்டுவிட்டால் செடியாக அது எப்படி வளர முடியாதோ அப்படித்தானே நம் உடலும் மனமும்! அதற்குத் தேவையானதைக் கொடுத்தால்தானே ஆரோக்கியமானதாக இருக்கும்? சில சுய முன்னேற்ற உறுதிமொழி கொண்ட வாசகங்களை வண்ண வண்ண ஸ்டிக்கர் தாள்களில் எழுதி (வீட்டில் அடிக்கடி  பார்க்கும் இடங்களில்) ஒட்டி விடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை அவற்றை மாற்றிக் கூட ஒட்டலாம். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நீங்களும் மனதுக்குள் சொல்லி நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள்.

  வாஷிங்டன் சுந்தர்: இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் 19 வயது நம்பிக்கை நாயகன். கடந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 17 வயதிலேயே பல்வேறு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் தமிழக அரசால் கைவிடப்பட்டு, அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது. 

  சுந்தரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள்: 'இன்னும் ஐந்து வருடங்களில் நான் எப்படி இருப்பேன் என்று அச்சமாக இருந்தது. ஆனால் என் பயத்தை எதிர்மறையான சூழ்நிலையாக மாற்ற சபதம் எடுத்தேன். நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன். தினமும் 6 அல்லது 7 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வேன். பிறகு தமிழ்நாடு அரசால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம் கிடைத்தது. 

  மார்ச் 2018-இல் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுடன் மோதும்  தொடரில் இடம்பெற்று, அந்தத் தொடரின் பந்துவீச்சில் சிறந்த வீரருக்கான பட்டம் பெற்றேன். நான் தற்போது இங்கே இருக்க விரும்புகிறேன். ஆனால், ஒவ்வொரு நாளும் நான் என்னை இன்னும் சிறந்தவனாக மெருகேற்றுவதற்கு முயற்சிப்பேன். ஏனெனில் அது ஒன்று மட்டும்தான் என் கட்டுப்பாட்டில் உள்ளது' என்றார் சுந்தர். அவரைப் போன்று ஊக்கமளிக்கும் நபர்களைப் பார்க்கும்போது எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு உற்சாக டானிக்காக இருக்கும். உங்கள் எண்ணங்களை அடிக்கடி புதிப்பித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு நொடியும் புதிய தொடக்கமே...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai