Enable Javscript for better performance
பெற்றோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல்- Dinamani

சுடச்சுட

  

  பெற்றோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல்

  By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 02nd March 2019 01:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parents

   

  எப்போதாவது பெற்றோர்களும் சற்றுத் தாங்கள் செய்வதைக் குறித்துக் கொஞ்சம் ஆராய்ந்தால் தாங்கள் கையாளும் விதங்களை மேலும் மேம்படுத்த உதவும். இவ்வாறு செய்வதால், எதை எல்லாம்  செய்கிறோமோ அவற்றைப் பெற்றோர் மேலும் நன்றாகச்  செய்ய உதவும். விளைவு? பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பல மடங்கு உபயோகமாகும். இவை, என்ன, ஏது, எப்படி என்பதை இங்கே சற்று ஆராயலாம்.

  உருமாறும் செய்முறை

  கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்; எப்பொழுதும் பெற்றோரின் சிந்தனை, ‘குழந்தையை எவ்வாறு முன்னேறச் செய்ய? எந்தத் திறனை மேம்படுத்த’? என்றெல்லாம் இருக்கும். யாவருக்கும் தன் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்பதே குறிக்கோள். இப்படி நினைப்பது மிக நன்றே!

  இந்த பாதையிலிருந்து ஒரு இழை மாற்றி யோசித்தால், இப்படிச் சிந்தனை எழும், ‘பெற்றோரான நான், எப்படி, எந்த வகையில் மேலும் என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும்?’ என்ற யோசனையிலிருந்து ஆரம்பிக்கலாம். அத்துடன், ‘பெற்றோரான நான், மேலும் நேர்மறையான தாய் தந்தையாக இருக்க வேறு என்ன மேற்கொள்ள வேண்டும்?’ என்றதையும் சிந்திப்பது தேவையாகும்.

  முதல் கேள்வியை, ‘நான் நல்ல பெற்றோராக இருக்க எதைச்  செய்ய வேண்டும்?’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். வரும் பதில்(கள்) என்னவாக இருக்கக் கூடும்? இவை, பல வண்ணங்களில் இருக்க வாய்ப்புண்டு. வரக் கூடிய சில பதில்களை ஆராய்வோம்:

  ‘நான் என் நண்பர்களுடன் போகக் கேட்டேன். நீங்களும், அம்மாவும் அனுப்பவில்லை. நீங்கள் இருவரும் என்னுடன் ஒரு  நிமிடம்கூட  இல்லை’

  ‘எப்பொழுதும் நீங்கள் பயணித்துக்  கொண்டே இருக்கிறீர்கள், உங்களுடன் நேரம் போதவேயில்லை’

  திரும்ப அதையே கேட்கிறீர்கள். அப்படி என்றால் நான் என்னுடைய நண்பர்கள் பற்றிச்  சொன்னதை நீங்கள் கேட்டது போல் எனக்குத் தெரியலை.’

  ‘பெரும்பாலும் தொலைபேசியில் பேசிக் கொண்டோ, டீவி பார்த்துக் கொண்டோ இருக்கீங்க’

  ‘எனக்கு மிக வருத்தமாக இருப்பது, நீங்கள் இருவருமே ஃபோன், கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது. அதை விட்டா, ந்யூஸ், ஸ்போர்ட்ஸ் பார்ப்பது. என்னுடன் அந்த அளவிற்கு நேரம் கழிப்பதில்லை’

  இப்படி எல்லாம் நேராமல் இருக்க, பெற்றோர் வேறு விதமாகச் செயல்பட வேண்டும். அதாவது

  பெற்றோரின் மைண்ட் வாய்ஸ் இப்படி எல்லாம் இருக்க வேண்டும்: ‘உஷ் உஷ், பசங்க தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கார்கள். முழுசா கேட்டுக் கொள்கிறேன்’

  ‘என் வேலையில் பயணிப்பது அவசியம். அதைத்  தவிர்க்க முடியாது. மாறாக இனிமேல் நான் குடும்பத்தினருடனும், ஒவ்வொரு நபரிடமும், நேரத்தை ஒதுக்கப்  போகிறேன்’

  ‘எவ்வளவு மணி நேரம் என்பதோடு அவர்களுடன் இருக்கும் போது எவ்வளவு அதில் மூழ்கி இருக்கேன் என்பதே எங்கள் உறவை இன்னும் நெருக்கமாக்கும்’

  ‘வீட்டிற்கு வந்ததும், முதல் ஓர் இரண்டு மணி நேரம் குடும்ப நபர்களுக்காகவே. அவர்களுடன், பேசவோ, அவர்கள் செய்வதில் கை கொடுப்பதற்கோ’

   ‘குடும்பத்தினருடன் தினமும் ஏதோ சேர்ந்து செய்வதென்று’

  பெற்றோர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் பிள்ளைகளின் மிக முக்கிய பங்கு உண்டு. பிள்ளைகளுக்கும், குறிப்பாக வளர்ந்து வருகிற பருவத்தில், மிகத் தேவையானவர்கள் பெற்றோர். குழந்தைகளும் சரி, விடலைப்  பருவத்திலும் பெற்றோரின் செயல்பாட்டு என்ன, எப்படி என்பதிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்வது மிக அதிகம்.

  அதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் என்பது தெரிந்ததுதான். பெற்றோர் ஒன்றை வழிமுறையாகச்  செய்து வந்தால் அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் குழந்தைகள், விடலை பருவத்தினரும் தாங்களும் அதே போன்ற சிந்தனை, செயல்பாடுகளைக் கடைப் பிடிப்பார்கள். அதனால் தான் பெற்றோர்கள் தாங்கள் செய்வதை அவ்வப்பொழுது நின்று ஆராய்ந்து கொள்வது அவசியம். தேவை என்றால் எதைச் சுதாரிக்க வேண்டுமோ அவற்றைச் சரி செய்து கொண்டால், நன்மையே!

  பெற்றோர் இப்படிச் செய்தால், உடனே குழந்தைகளும் சரி, விடலை பருவத்தினரும் சரி, 'ஓ! இப்படி ஒப்புக்கொண்டு, மாற்றி அமைத்துக் கொள்ளலாம், கொள்ள முடியும்” என்பதையும்  கற்றுக் கொள்வார்கள். அது மட்டும் அல்ல, பெற்றோர் இப்படிச் செய்வதைப் பார்த்து அவர்கள் மீது மேலும் மரியாதை கூடும்.

  தாய் தந்தையர் தன்னை மாற்றி அமைப்பதைப் பார்த்து அந்த தைரியத்தைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாகும். நம்மைப் போல் நம் பெற்றோரும் தடுமாறுவது உண்டு. இந்த நிலையில் அப்படியே இல்லாமல் தன்னை மாற்றி அமைத்து மாற்றுப் பாதையைக் காண்பிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டு, தங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ள முயல்வார்கள். மேலும், இது ஊக்க வைத்து, பிள்ளைகள் வந்து கேட்கலாம், ‘நாங்கள், எங்கள் சார்பிலிருந்து இன்னும் செய்ய வேண்டியவை என்னென்ன?’ என்று.

  பெற்றோர் தங்கள் சார்பிற்கு  ‘நீ பேசாதது எனக்குத் தனிமையில் இருப்பது போல் தோன்றி விடுகிறது’, ‘நீ அழைப்பாய் என்று காத்துக் கொண்டு இருந்தேன்’, ‘உன்னுடன் போலாம் என இருந்தேன்’ என விடலைப் பருவத்தினரிடம் உணர்ந்ததை வெளிப்படையாகப் பகிர்வது முக்கியம்.

  பெற்றோர் தாங்கள் செய்வதிலிருந்து மூன்றே நிமிடத்தை ஒதுக்கி வைக்கலாம். ஒரு வேளை வெளியூரிலிருந்தால், அந்த நேரத்தில் தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், ஈமெயில் எழுதலாம். உள்ளூரில் இருப்பவர்கள் அதே மூன்று நிமிடங்களில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக்  கணக்கிட்டு செயல் படலாம்.

  இதன் கூடவே, சேர்ந்து இருக்க அன்றாட ஒரு பதினைந்து நிமிடம் ஒதுக்கி வைப்பதைப் பழகிக் கொள்ளலாம். அந்த நேரத்தில்,குடும்பத்தினருடன் வாக்கிங் போவதோ, தோட்ட வேலை செய்வதோ, ஏதோ ஒரு விளையாட்டு விளையாடுவதோ, ஜஸ்ட் பேசுவதோ, ஒன்றைச் செய்வது என்று வைத்துக் கொள்ளலாம்.

  3+15 நிமிடங்களினால் பெற்றோர் எதை இழந்தார்கள்? என்னதை அடைந்தார்கள்?

  அடைவது, குடும்பத்தினரிடம்  அக்கறை, இருக்கும் பாசத்தைக் காட்ட முடிகிறது. அவர்கள் மேல் கருணை காட்ட வாய்ப்பாகிறது, அவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே ஆசை, அன்பு, பாசம், நேசம் மேலும் கெட்டியாகிறது. இதைத்தான் யாவரும் விரும்புவதும்.

  அரவணைப்பில் உறவுகள் மலரும், மேம்படும். அதை அடைய சில நாழிகையை அதற்கென்று ஒதுக்கி வைக்க வேண்டும். வீட்டின் பெரியவர்கள் செய்யச்  செய்ய, மற்றவர்களும் அதைச் செய்வார்கள். இதைத் தாராளமாகப் பின்பற்றுவதே ஒற்றுமையை வளர்க்கும்.

  சொல்-செயல் ஒருங்கிணைப்புகள்

  அவர்களுக்கு முன்-உதாரணமாகப் பெற்றோர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலில் இருக்க வேண்டும். சொல், செயல் இரண்டும் ஒத்துப்போக வேண்டும்.

  அதற்கு மாறாக, வீட்டில் இருந்து கொண்டே பிள்ளைகள் முன்னே 'நான் வீட்டில் இல்லை' எனச் சொல்லுவது தங்களின் சொல்லிலும் செயலிலும் வேறுபாட்டைக் காட்டுகிறது. அத்துடன் பிள்ளைகள் பொய் சொல்லிச் சமாளிக்க முடியும் எனத் தவறான முறையை கண்முன்னால் பார்த்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகிறது. பெற்றோர் இப்படிக் கையாளுவதனால் அவர்கள் மேல் இருக்கும் மரியாதை குறையவும் செய்யும். எடுத்துக்காட்டாக இல்லாமல் போவார்கள்.

  சொல்லே செயல், செயலே சொல் என்று இருந்தால் இப்படித்தான் செயல் பட வேண்டும் என்ற நம்பிக்கை வளர வளர பிள்ளைகளும் இதை பின்பற்றுவார்கள். நாளடைவில் அதுவே பழக்கமாகி விடும்.

  அப்படி ஆகி விட்டால், 'நீ இப்படி இரு', 'இதைச் செய்' என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு நம் செயல்-சொல் ஒத்துப் போவதிலிருந்து நன்றாகக் கற்றுக்கொள்வார்கள். திரும்பத் திரும்பப் பிள்ளைகளைச் சரி செய்து கொண்டு இருப்பது வழக்கமாக வேண்டாம். பிள்ளைகளைத் திருத்துவது பெற்றோரின் கடமை. அதைச் சொல்லால் மட்டும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதை பல்வேறு விதமாகச் செய்ய முடியும்.

  உதாரணத்திற்கு, பிள்ளைகள் 'நன்றி' சொல்லப் பழக வேண்டும், மற்றவருக்கு உதவ வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. இதையே  எப்படி செயல் படுத்துவதென்று எடுத்துக் கொள்வோம். பெற்றோராகியவர்கள் தன் தினசரி வாழ்வில் நன்றி என்று எந்த அளவிற்கு, எவ்வாறு தெரிவிக்கின்றனர்? எவ்வளவு முறை மற்றவர்கள் செய்ததைப் பாராட்டி அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம்? அவர்களின் பாராட்டக் கூடிய செயலைப் பற்றி எந்த அளவிற்கு வீட்டில் பகிர்ந்து கொள்கிறோம்? ஒரு அணு பொறாமை இன்றி அதைப் பலரிடம் பெருமையாகப் பேசுகிறோம்? நம் பாராட்டை வெளிப்படையாகக் காட்டுகிறோம்? இவை ஒவ்வொன்றிலும் தான் ஒளிந்திருக்கிறது சொல்-செயல் ஒருங்கிணைப்புகள்.

  பெற்றோர் இந்த நன்றி சொல்வதை, நன்றி மறக்காமல் இருப்பதையெல்லாம் செய்பவராகத் தன்னை மேலும் மேம்படுத்தலாம். இதை இவ்வாறு செயல் படுத்த முடியும்:

  • மற்றவர்களிடம் அவர்கள் கருத்தைக் கேட்டவுடன் “நன்றி” சொல்வது
  • பகிர்ந்து கொண்டவரின் கருத்தை ஒரு “பரிசாகக்” கருதுவது.
  • சொல்வதை, முழு கவனத்துடன் கேட்பது அவசியமாகும், அதுவே நாகரிகத்தைக் காட்டும். நமக்காக அவர்கள் சிந்தித்து, நேரம் ஒதுக்கி பகிர்வதிற்கு நாம் காட்டும் மரியாதை.
  • அவர்கள், இந்த நிமிடத்தை முக்கியமாக்கியது அதாவது நமக்குத் தெளிவு பெறத் தங்கள் நேரத்தை கொடுத்ததற்கு “நன்றி” செலுத்த வேண்டும்.
  • நன்றியை முழு மனதுடன் தெரிவிப்பது மிக முக்கிய அங்கமாகும்.

  இந்த விதத்தில் அணுகுவதில் நாம் உறவுக்கு முக்கியத்துவம் தருவதைக் காட்டும். மற்றவர்களை மதிப்பதைக் காட்டும். மற்றவர்களின் சொல்லிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தெளிவு, தைரியம் வரக்கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறோம்.

  இந்த தருணத்தில், ஒன்றைக் கேட்கிறோம் - அதற்கு ஒரு தகவல் தரப்படுகிறது - சொல்வதை, முறையாகக் கேட்டுக் கொள்வதே அவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை - நன்றி சொல்வது நாம் கேட்டுக் கொண்டதின் பிரதிபலிப்பாகும். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள, அதை நடைமுறையில் செய்ய ஏற்றுக்கொண்டதை காட்டுகிறோம்.

  ஒரு வேளை அவர்கள் சொல்வதில் உடன்பாடு இல்லை என்றால், கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுவதும் ஒரு முறையாகும். ‘உடன்பாடில்லை’ தெரிவிப்பதில் மரியாதை காத்தால் மேற்கூறிய நன்றியுடன் மரியாதை தென்படும். இது மிக அவசியம்.

  மேலும் பிரச்னைகளைக் கையாளும் விதத்தைப் பிள்ளைகளும் பார்த்துக் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்று இருந்தாலே கவனமாகச் செயல் படுவோம். அதாவது, இதில் பொய்மை இருக்காது ஆனால் நல் உள்ளங்களைக் காயப்படுத்திப் பேசாமல் இருப்போம்.

  இன்னொரு விதத்தில் பார்த்தால், இவையெல்லாம் பிள்ளைகளை உட்பட யாவரும் செய்யலாம்.

  மனநலம், கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்  / malathiswami@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai