Enable Javscript for better performance
இதை செய்யத் தவறியதால்தான் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்!- Dinamani

சுடச்சுட

  

  இதை செய்யத் தவறியதால்தான் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்!

  By பிரியசகி / ஜோசப் ஜெயராஜ்   |   Published on : 25th March 2019 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pollachi sex assault case

   

  பொள்ளாச்சி தந்த பாடம்

  கல்லூரி முடித்து சற்றுத் தாமதமாக வந்த உமா முகம் சோர்ந்து வித்தியாசமாக இருப்பதைக் கண்ட பார்வதி ' என்னம்மா என்னாச்சு ? ஏன் டல்லா இருக்க?' என்றாள்.

  'ஒன்னுமில்லம்மா தலைவலிக்குது ,கொஞ்ச நேரம் படுக்குறேன்  என்னை எழுப்பாதீங்க', என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள் உமா. அலுவலகத்திலிருந்து வந்த சாரதி சோபாவில் அமர்ந்தபடி  பார்வதி காபி குடும்மா ஒரே தலைவலி' என்றதும், என்ன அப்பாவுக்கும் பொண்ணுக்கும் சொல்லி வச்சாப்ல தலைவலி ? என்றாள்.

  ' ஏன் உமாவுக்கு என்ன' ?

  'என்னவோ தெரியலை, வரும் போதே தலைவலின்னு வந்தா, கதவை சாத்திட்டு படுத்துட்டா. இருங்க ரெண்டு பேருக்கும் காபி  எடுத்துட்டு வரேன்'.

  கணவனின் கையில் காபியைக் கொடுத்து விட்டு மகளின் அறைக்கு சென்று கதவைத் தள்ளியவள் தாழிடப்பட்டுருந்ததைக் கண்டு வியந்தாள்.

  'எப்பவும் கதவைத் தாள் போட மாட்டாளே' என்றவாறு கதவைத் தட்டினாள்.

  'உமா கதவைத் தொற, காபியக் குடிச்சா தலைவலி சரியாகிடும் வா'.  என பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னலை உள்ளே தள்ளினாள் .

  கட்டிலின் மீது நாற்காலியைப் போட்டு அதன் மேல் நின்றபடி மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட முயற்சித்துக் கொண்டிருக்கும் மகளைக் கண்டு பதறினாள்.

  'ஐயையோ! உமா என்னடி பண்றே, ஏங்க இங்க ஓடியாங்க' என்றதும் கையிலிருக்கும் காபி டம்ளரைக் கீழே போட்டுவிட்டு ஓடிவந்த சாரதி ஜன்னல் வழி உள்ளே,  நாற்காலியைத் தள்ளி விட்டு, அந்தரத்தில் கால்கள் உதறிக் கொண்டிருக்கும் மகளைக் கண்டதும் ஒரு வினாடி அதிர்ச்சியில் உறைந்து பின் சுதாரித்துக் கொண்டு கதவை மோதி உடைத்துக் கொண்டு  உள்ளே ஓடி உமாவின் கால்களைத் தாங்கிபிடிக்க பார்வதி  கத்தரிக்கோலால் புடவையைத் துண்டித்து உமாவை கட்டில் மீது படுக்க  வைத்து ஆசுவசப்படுத்தினர்.

  ‘பாவி!  ஏண்டி  இப்டி  பண்ண?  என்ன  குறை வைச்சேன்  உனக்கு? இப்படி எங்க தலைல இடியப் போடப் பாத்தியே’ என புலம்பிக் கொண்டிருந்தவளை அதட்டிய சாரதி; வாய மூடுறீயா, அவளைக் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடு. நீ போ நான் பாத்துக்குறேன்', என்றார்.

  ‘என்னத்துக்கு இவ இப்படி பண்ணுனானு கேக்காம என்ன எதுக்கு திட்டுறீங்க? எப்பவும் பொண்ணை தைரியமா வளக்குறேன்;  ஐஏஎஸ்  படிக்க வைக்க போறேன்னு சொல்லுவீங்க; இவ இப்புடி பண்ணிட்டாளே', என்று புடவைத் தலைப்பால் கண்களை துடைத்தபடி வெளியே பூஜையறைக்குள் சென்றாள்.

  அம்மா வெளியே போகும்வரை கண்மூடி படுத்திருந்த உமா சில நிமிடம் கழித்து கண்ணைத் திறந்தாள்.

  கண்ணோரம் நீர் கசிய தன்னையே பார்த்தபடி அமர்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்தும் உடைந்து போனவள் அவர் மடியில் முகம் புதைத்துக் கொண்டு அப்பா என்ன மன்னிச்சிடுங்கப்பா. உங்களையும் அம்மாவையும் பத்தி யோசிக்காம  உணர்ச்சிவசப்பட்டு  முட்டாள்தனமான முடிவெடுத்துட்டேன் சாரிப்பா',என்று அழுதாள்.

  'என்ன பிரச்சனையாயிருந்தாலும் என்கிட்ட சொல்லுடா, நான் இருக்கேன் உனக்கு', என்று அப்பா தலையைக் கோதி விட்டதும் தைரியம் வந்து எழுந்து உட்காந்தாள் உமா.

  பன்னிரெண்டாவது படிக்கும் போது எனக்கு கணக்கு டியூஷன் எடுத்தாரே கணேஷ் மாஸ்டர் அவருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு பேஸ் புக்குலப் பாத்துட்டு விஷ் பண்ணுனேம்ப்பா. தேங்க்ஸ் சொன்னவர், கொஞ்சம் புக்ஸ் எடுத்து வச்சிருக்கேன்; உனக்கு ஐஏஎஸ் எக்ஸாமுக்கு படிக்க உதவும், சாயங்காலம் வந்து வங்கிக்கோன்னார். எப்பவுமே அவர் என்னை என்கரேஜ் பண்ணுவார். நல்லா படிக்குற நீ ரொம்ப திறமைசாலி; காலேஜ் முடிச்சிட்டு ஒரு வருஷம் சின்சியரா படிச்சா உன்னால ஐஏஎஸ் பாஸ் பண்ணிட முடியும்னு எப்பவும் சொல்லுவார். சரி நேர்ல போய் விஷ் பண்ணிட்டு புக்ஸையும் வாங்கிட்டு வந்துடலாம்னு காலேஜ் முடிச்சிட்டு அவர் வீட்டுக்கு போனேன். வீட்ல அவர் மனைவி,  பசங்க யாருமே இல்ல. ஒரு கூல்ட்ரிங்க்ஸ்  தம்ளரைக் கொடுத்துட்டு, 'இதைக் குடி  நான் போய் புக்ஸ் எடுத்துட்டு வரேன்னு உள்ளே போனார்.

  அதைக் குடிச்ச சில நிமிஷத்துல எனக்கு மயக்கம் வந்துடுச்சு. கண் முழிச்சப்போ என் ட்ரெஸ்ஸெல்லாம் கலைஞ்சு போயிருந்தது. என்னோட  அவன் நெருக்கமா இருந்த மாதிரி போட்டோவெல்லாம் செல்போன்ல எடுத்து வச்சு, நான் கூப்பிடும் போதேல்லாம் இங்க வரலைனா இன்டர்நெட்ல இந்த போட்டோவை போட்டு உன் மானத்தை வாங்கிடுவேன்னு மிரட்டினான். நான் ரொம்ப நல்லவர்னு நினைச்சிட்டு இருந்த ஒருத்தர் இப்படி கீழ்த்தரமா ஏமாத்தினதை என்னால ஜீரணிக்கவே முடியல. அதுக்கும் மேல அவன் அந்த போட்டாவை இன்டர்நெட்ல போட்டாலோ,  நான் கற்பிழந்த விஷயம் வெளியே தெரிஞ்சாலோ நம்ம குடும்ப மானம் என்னாகும்றதை என்னால நெனச்சுக் கூட பார்க்க முடியல. இப்படி ஈஸியா ஏமாந்துட்டோமேன்ற அவமானம் எல்லாம் ஒண்ணா சேர்ந்துடவே யோசிக்காம உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்துட்டேம்ப்பா  என்று கதறி அழும்  மகளை இதமாக அணைத்துக்கொண்டார் சாரதி.

  'அம்மாடி இத ஒரு விபத்தா நினைச்சுக்கோ. இதுல உன் தப்பு எதுவுமே இல்லையேம்மா; கற்பு என்ன பென்சில்ல போட்ட கோடா அழிக்கிறதுக்கு? சொல்லிக் குடுத்த மாஸ்டர் இப்படி ஒரு அயோக்கியத்தனம்  பண்ணா நீ என்ன பண்ணுவ? சாக வேண்டியது நீ இல்லம்மா, அந்த பொறுக்கி ராஸ்கல் தான். அவன நான் பாத்துக்குறேன்; நீ இதை கெட்ட கனவா நினைச்சு மறந்துடு', என்று அவளை ஆறுதல் சொல்லி தூங்க வைத்து விட்டு, தன் உயிர் நண்பரும் காவல் துறை ஆணையருமான கார்த்திகேயனுக்கு போன் செய்து விவரத்தைக் கூறினார்.

  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதில் உமாவைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாமல், வேறு எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாழாகாதபடி அந்த அயோக்கியன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.

  பிள்ளை வளர்ப்பு :

  மேற்கூறிய நிகழ்விலிருந்தும், சமீபத்தில் அனைவரையும் கதிகலங்கச் செய்த பொள்ளாச்சி சம்பவத்திலிருந்தும்  முக்கியமான சில பாடங்களை யாவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் எப்படி இருக்க வேண்டும்; எதை செய்ய வேண்டும்; எதை செய்யக் கூடாது என்பதைப் பற்றி பாடம் நடத்துவதற்கு முன் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் என்பவள் ஆணின் காமப்பசிக்கான இரை அல்ல. உயிரும், உணர்வும் உள்ள சக ஜீவன். அவர்களை மதிக்க வேண்டும்; பெண்களைத் தன் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காமல் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் கருத்தில் கொண்டு  உண்மையான அன்பு, அக்கறையுடன் பழகுவதே நல்ல ஆரோக்கியமான உறவுக்கு வழி வகுக்கும்   என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

  வகுப்பறையில் இதை பாடமாக சொல்லிக் கொடுப்பதை விட வீட்டில் அப்பா அம்மாவை எப்படி நடத்துகிறார்; தன்னையும் தன் சகோதரியையும் எப்படி சமமாக நடத்துகிறார்கள்  என்பதைப் பார்த்தே பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். பாலினச் சமத்துவம் என்பது வீட்டில் இருந்தால்தான் சமுதாயத்திற்கும் வரும். தன் மகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தம் மகனால் எந்த பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு மகனை வளர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும். 

  பிள்ளைகளுக்கு சுதந்திரம் தர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது பாதுகாப்பான சுதந்திரமாக இருக்க வேண்டும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் அவசியம். பிள்ளைகளின் நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள் என்பதெல்லாம் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். செல்போனைப் பயன் படுத்துவதில் பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வீட்டில் எல்லோரும் இருக்கும் போது கணவனுக்கு பிற பெண்களிடமிருந்தோ அல்லது மனைவிக்கு பிற ஆண்களிடமிருந்தோ அழைப்பு வந்தால் உடனே தனியான இடத்திற்கு எழுந்து சென்றுதான் பேச வேண்டும் என்பதில்லாமல் எல்லோருக்கும் முன்பாகவே பேசக் கூடிய ஒளிவு மறைவற்ற நட்பு ரீதியிலான உறவும், உரையாடலும் குடும்பத்தில் இருக்க வேண்டியது அவசியம்.  என் முகநூல் பயன்பாட்டை என் கணவரோ, மனைவியோ, என் பிள்ளையோ பார்ப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை எனும்படி  நாகரீகமாக இருந்தால் பிள்ளைகளும் அப்படியே இருப்பார்கள். அதே சமயம் ஒவ்வொருவருக்கும் யாருமே நுழைய முடியாத அந்தரங்க வட்டம் என்பது உண்டு என்பதையும்  புரிந்து கொண்டு மதிப்பளித்து நடந்து கொள்வது நல்லது.

  பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் அவர்களுடன் நேரம் செலவிடத் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டிலோ பிற செயல்பாடுகளிலோ ஈடுபட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

  பெண்களுக்கான எச்சரிக்கை:

  ஒரு ஆண் தனக்கு நன்கு அறிந்தவராக இருந்தாலும், அவர் எந்த வயதினராக இருந்தாலும்  தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சில மனிதருக்குள் இருக்கும் மிருகம் இது போன்ற தனிமையான சந்தர்ப்பங்களில் வெளிப்படும் வாய்ப்புகள் அதிகம். இது எல்லா ஆண்கள் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடலாம் என்றாலும்  பொள்ளாச்சி சம்பவத்தில் இளம் பெண்களை காதல், நட்பு என்ற பெயரால் நம்ப வைத்து திட்டமிட்டு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; தன் உள்ளுணர்வு கூறுவதை உதாசீனப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தவே இவ்வாறு சொல்கிறோம்.  

  நன்கு அறிந்தவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றால்  முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் முன்பின் அறியாதவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எந்த காரணத்திற்காகவும் தன் சுய விவரங்களை அதுபோன்ற நபர்களிடம் வெளிப்படுத்துவது ஆபத்தாக முடிவதை பல சமயங்களில் பத்திரிக்கைகள் வாயிலாக அறிகின்றோம்.

  முன்பு காலத்தில் அடிமைப் பெண்கள் மேலாடை அணிய உரிமை இல்லாதபோது அதை எதிர்த்து போராடியவர் தந்தை பெரியார். என் உடல் எனது சுயமரியாதைக்கு உரியது; அதைப் பிறருக்கு காட்ட மாட்டேன் என்பதுதான் உண்மையான சுதந்திரமெனில் அரைகுறை ஆடை அணிவதோ, பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமென்பதற்காகவோ ஆடை அணிவதோ அடிமைத்தனமான புத்தி என்பதையும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

  'பெண்ணே நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்லும் உரிமையை யாருக்கும் கொடுத்து விடாதே; அது உன் சுய மரியாதைக்கான விஷயம்'. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

  முகநூலின் உள்பெட்டியில் ஒரு நபர் வந்து 'நீ ரொம்ப அழகா இருக்கே' என்று, உடலழகு குறித்து வர்ணிப்பது, செல்லப் பெயர் வைத்து அழைப்பது என அத்து மீறினால் பெண்களின் மனதிற்குள்ளே அலாரம் அடிக்க வேண்டும். இத்தகைய நபர்களுக்கு பதிலளிக்காமல் அலட்சியம் செய்தாலே போதும். தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்களை ப்ளாக் செய்துவிடலாம்.

  பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண்களும் இத்தகைய பிரச்னைகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நன்மை தீமை இரண்டும் நிறைந்த சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாள்வது குறித்தும், உணர்வுகளைக் கையாள்வது குறித்தும் சிறுவயது முதலே பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அளிப்பதும், விவாதங்களை நடத்துவதும்  அவசியமானது. நம் செயலுக்கான விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் அடிக்கடி நினைவூட்ட வேண்டும்.

  தப்பித்தவறி ஏதேனும் தவறுகள் நேர்ந்து விட்டாலும் பிள்ளையை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தாமல் அதிலிருந்து மீண்டு வெளிவரத் தேவையான மனநல உதவிகளைத் தருவதே பொறுப்புள்ள பெற்றோருக்கான கடமை. இதை செய்யத் தவறியதால்தான் கடந்த சில ஆண்டுகளாக பல இளம் பெண்கள் பொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதையும்  அனைவரும் உணர வேண்டும்.

  இதன் தொடர்ச்சியை அடுத்த கட்டுரையில் காண்போம்.

  - பிரியசகி 

  - ஜோசப் ஜெயராஜ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai