பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆசிரியர் கைது! மகளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த பெற்றோர்!

12-ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
child
child


12-ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அந்தச் சிறுமியின் பெற்றோர் இரண்டு வயது குழந்தையாக அவளைத் தத்தெடுத்திருந்தார்கள். இந்தச் சம்பவம் தங்களுக்கு அவமானத்தை வரவழைத்துவிட்டது என்று சிறுமியை வீட்டிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளனர்.

17 வயதான அச்சிறுமியை வளர்ப்பு பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, காவல்துறை அதிகாரிகளிடம் இனி நாங்கள் இவளை பராமரிக்க முடியாது என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள், அச்சிறுமி உடல் நலமில்லாமல் இருந்ததால் வளர்ப்பு பெற்றோரை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் கேட்க மறுத்த காரணத்தால், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

போலீஸ் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியது, 'சிறுமி குடும்பத்திற்கு 'அவமதிப்பை' ஏற்படுத்திவிட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் அச்சிறுமிக்கு பாலியல் விஷயங்களில் அதிக ஆர்வம் இருந்ததாகவும், அது தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வாமையாக உள்ளது என்றும் கூறினர். 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ​​ஒரு ஆசிரியர் அச்சிறுமியை முத்தமிடுவதைக் கண்டதாகவும், பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். சிறுமியில் இத்தகைய செயல்களுக்கு தாங்கள் வெட்கப்படுவதாகவும், இதற்குமேல் குடும்பத்தில் அவளை வைத்திருக்க விரும்பவில்லை என்றும் மனக்கசப்புடன் பெற்றோர்கள் தெரிவித்தனர். 

சிறுமி படிக்கும் தனியார் பள்ளியில் உடல் கல்வி கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்த 26 வயது இளைஞரை ஞாயிற்றுக்கிழமை பெற்றோர்களும், அவர்களின் அண்டை வீட்டினரும் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களது வீட்டின் முதல் மாடியில் உள்ள கழிப்பறையில் அரை நிர்வாணமாக அவர் காணப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டார். வீட்டின் முதல் மாடிப் பகுதியிலும் சிறுமியும் இருந்தாராம். அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரின் குற்றச்சாட்டின் பேரில் போலீசார் அவர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (17 நவம்பர்) வழக்கு பதிவு செய்தனர், அதன்பின் அந்த பி.டி.டீச்சர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள், அதாவது திங்களன்று பெற்றோர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, தங்களது மகள் தத்தெடுக்கப்பட்டவர் என்றும், இனி அவளை வீட்டில் பராமரிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்கள். தங்கள் மகள் அந்த ஆசிரியருடன் தகாத உறவைக் கொண்டிருந்ததாக நம்புவதாகவும், அவள்தான் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததாகவும் கூறினார். பெற்றோர் பிடிவாதமாக அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று சொல்லிவிட்டதால், குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியை குழந்தைகள் நல பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே தங்க வைத்தனர்.

தத்தெடுக்கப்பட்ட குழந்தையைக் கைவிடுவது என்பது சட்டவிரோதச் செயல், இப்படி பாதியில் மறுக்க முடியாது என்று அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகு, அரைமனதுடன் செவ்வாய்க்கிழமை மாலை பெற்றோர்கள் அச்சிறுமியை திரும்ப அழைத்துச் செல்லத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அப்போது அந்த இளம் பெண் வளர்ப்புப் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தற்போதைக்கு நாங்கள் அவளை பாதுகாப்பாக ஒரு வீட்டில் வைத்திருக்கிறோம். எங்கள் முதல் பொறுப்பு, அவரது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுதான்’ என்று குழந்தைகள் நல அதிகாரி கூறினார். பொதுத் தேர்வுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸிடம் பேசிய பிரபல மனநல மருத்துவர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறுகையில், 'தத்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் வழக்கமான கேள்வி
என்னவென்றால், அவர்களின் சொந்த பெற்றோர் அவர்களை ஏன் விட்டுவிட்டார்கள்? என்பதுதான். நிராகரிப்பின் உணர்வு அவர்களின் ஆழ்மனதில் நீண்ட காலம் தேங்கி அவர்களை கசப்பான மனநிலைக்கு தள்ளிவிடும். மேலும் தத்தெடுக்கப்பட்ட பெற்றோர்கள் திட்டும்போதும் அல்லது கண்டிக்கும்போதும், எங்க ரத்தமாக இருந்தால் இப்படி செய்திருப்பாயா, என்னதான் இருந்தாலும் நீ தத்தெடுத்த பிள்ளைதானே’ போன்ற வார்த்தைகளை கோபத்திலோ அல்லது வேண்டுமென்றே கூறுகையில் அது அக்குழந்தையை காயப்படுத்தும். இதனால் அக்குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். சொந்த வீட்டிலேயே அந்நியமாகிவிடுகிறார்கள். மேலும் தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை. இது அவர்களுக்குள் தனிமையை உருவாக்குகிறது, இத்தகைய காரணங்களால் அவர்கள் வீட்டிற்கு வெளியே அன்பைத் தேடத் தொடங்குகிறார்கள்’

குடும்பம் ஒடுக்குமுறை செய்தால் மட்டுமே அக்குழந்தைகள் அதற்கான எதிர்வினை செய்திருக்க முடியும் என்றும், எந்தவொரு முடிவுகளுக்கும் செல்வதற்கு முன்பு பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் தரப்பட வேண்டும் அவர் கூறினார். ஆசிரியர் அல்லது உறவினர் போன்ற நெருங்கிய நபர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் குழந்தையைப் பயன்படுத்திக் கொள்ளும்போது, ​​இக்குழந்தைகளுக்கு அனைவரின் மீதும் நம்பிக்கை சிதறிப் போகிறது. இந்த சிறுமி வேறு பல உறவுகளில் இருந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். ​அந்த அளவுக்கு அவள் போகவிட்ட ​பெற்றோர் அடிப்படையில் அவளுக்கு என்ன பிரச்னை என்று அன்புடன் பேசி, அதனை சீர் செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்கள் அந்தப் பெண்ணிடம் இரக்கம் காட்டவில்லையா என்று கேள்வி எழுப்பவும் ஒரு இடம் உள்ளது’என்றார் டாக்டர் லட்சுமி விஜயகுமார். சிறுமியை வசதியான விடுதிக்கு அனுமதித்து, அவளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது ஒரு தீர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இது சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்களைப் பற்றி பேசுகையில், சென்னையின் குழந்தைகள் நலக் குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் பி மனோரமா கூறுகையில், தத்தெடுக்கப்பட்ட பெற்றோர்கள் குழந்தையுடன் முரண்பட்டுவிட்டாலும் சரி, அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் இருந்துவிட்டாலும் சரி, தத்தெடுத்த பிள்ளைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு. ஒருபோதும் அதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. இது போன்ற வழக்குகளை probationary officer விசாரிக்க வேண்டும். அக்கம்பக்கத்தினர், வகுப்பு தோழர்கள், ஆசிரியர்கள், பெற்றோரின் நண்பர்கள் மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்த இந்த அதிகாரிக்கு உரிமை உண்டு. விசாரணையின் பின்னர், பெற்றோருடன் தங்கியிருக்கும் குழந்தையின் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும், அப்போதுதான் குழந்தை தத்தெடுக்கப்பட்ட பெற்றோருடன் தங்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஒரு முடிவை எடுக்க முடியும் ’என்று அவர் கூறினார்.

இதே போன்ற ஒரு வழக்கை முன்பு சந்தித்திருந்த மனோரமா கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்பு, 9-ஆம் வகுப்பு சிறுமி ஒருத்தி தனது வளர்ப்பு பெற்றோருடன் வாழ விரும்பவில்லை என்று கூறினார். வீட்டினரால் அச்சிறுமி சித்திரவதை செய்யப்பட்டார், காரணம் அவள் தங்களுடைய உறவினர்களின் பிள்ளைகளைப் போல நன்றாகப் படிக்கவில்லை என்று பெற்றோர்கள் அவளை படாத பாடு படுத்தியிருந்தனர். சில வாரங்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் அச்சிறுமி தங்க வைக்கப்பட்டாள். பின்னர் ஒருவழியாக பெற்றோரும் சிறுமியும் சமாதானம் அடைந்தனர். அவள் மீண்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் வாழத் தொடங்கினாள். இந்த வழக்கைப் பொருத்தவரையில், சிறுமியின் 12-ஆம் வகுப்பு தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அதற்கேற்ப விசாரணைகள் தொடர வேண்டும், அவள் 18 வயதை அடைந்தவுடன் தத்தெடுத்த பெற்றோருடன் வாழ்வது குறித்து சுய முடிவை அவள் எடுக்கலாம்’ என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com