Enable Javscript for better performance
உங்கள் டீன் ஏஜ் மகன் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டானா? இதோ ஒரு ஆய்வு- Dinamani

சுடச்சுட

  

  உங்கள் டீன் ஏஜ் மகன் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டானா? இதோ ஒரு ஆய்வு

  By Uma Shakthi  |   Published on : 24th October 2019 12:10 PM  |   அ+அ அ-   |    |  

  hateful FB post

  social network

   

  தொழில்நுட்பத்தால் நன்மையும் உள்ளது, அதே சமயம் தீமையும் உண்டு. சமூக ஊடகங்களால் கெடுதல் மட்டுமே ஏற்படுகிறது என்று நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம். சமூக ஊடகங்களில் செலவிடும் நேரம் நேரடியாக இளைஞர்களிடையே கவலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தாது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

  சமூக வலைப்பின்னல் தளங்களில் இளைஞர்கள் செலவிடும் நேரம் 2012 முதல் 62.5 சதவிகிதம் உயர்ந்து, தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டுதான், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் செலவழித்த சராசரி நேரம் ஒரு நாளைக்கு 2.6 மணி நேரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகமான ஸ்க்ரீன் டைம் பதின் வயதினரின் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை அதிகரிப்பதாக விமரிசகர்கள் கூறி வந்தனர்.

  இருப்பினும், ப்ரிகாம் யங் பல்கலைக்கழகத்தின் (Brigham Young University) குடும்ப வாழ்க்கை பேராசிரியரான (professor of family life) சாரா கோய்ன் (Sarah Coyne) தலைமையிலான புதிய ஆராய்ச்சி, சமூக ஊடகங்களில் செலவிடும் நேரமானது இளைஞர்களின் கவலை அல்லது மனச்சோர்வை நேரடியாக அதிகரிக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

  'சமூக ஊடகங்களில் செலவழித்த நேரம் மற்றும் வளர்ந்து வரும் பதின் வயதினரின் மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடையிலான உறவை உண்மையில் புரிந்து கொள்ள நாங்கள் எட்டு ஆண்டுகள் செலவிட்டோம்’ என்று கோய்ன் தனது ஆய்வு முடிவுகளை கம்ப்யூட்டர்ஸ் இன் ஹ்யூமன் பிஹேவியர் எனும் பத்திரிகையில் வெளியிட்டார்.

  'அவர்கள் சமூக ஊடகத்தில் செலவழிக்கும் நேரத்தை அதிகரித்தால், மேலும் மனச்சோர்வடைவார்களா? மேலும், அவர்கள் சமூக ஊடக நேரத்தைக் குறைத்தால், அவர்களின் மனச்சோர்வு குறைந்துவிடுமா? இதற்கான பதில் 'இல்லை’ என்பதுதான். சமூக ஊடகங்களில் செலவழித்த நேரம் பதற்றம் அல்லது மனச்சோர்வை உருவாக்கவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்’ என்றார் கோய்ன்

  மன ஆரோக்கியம் என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது, மன அழுத்தம் அல்லது பதற்றதிற்கு ஒரு விஷயம் மட்டுமே காரணமாக இருக்காது. சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழித்ததினால்தான் இளம் பருவத்தினரிடையே மனச்சோர்வு அதிகரிக்கக்கிறது என்ற முடிவுக்கு வருவது சரியல்ல என்பதைக் விளக்குகிறது இந்த ஆய்வு.

  'இளைஞர்கள் பயன்படுத்திய கால அளவு மட்டும் அவர்களுக்கு முக்கியம் இல்லை. உதாரணமாக, இரண்டு இளைஞர்கள் சமூக ஊடகங்களை ஒரே நேரத்திற்கு பயன்படுத்தலாம், ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தும் முறையின் விளைவாக வேறுபட்ட விளைவுகளைக் கொண்டிருக்கலாம்,’ என்று கோய்ன் கூறினார்.

  இந்த ஆய்வின் நோக்கம், இத்தகைய விவாதத்திற்கு அப்பால் சமூகத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்த உதவுவதுடன், சமூக ஊடகப் பயன்பாட்டை ஆராய்வதற்கும் ஆகும். சமூக ஊடகங்களை ஆரோக்கியமான வழிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கிறது.

  சமூக வலைத்தளங்களில் செயலற்ற பயனருக்குப் பதிலாக செயல் ஆற்றும் பயனராக இருங்கள் என்று கோய்ன் கூறுகிறார். அதாவது இணையத்தில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்காமல், ஸ்க்ரோலிங் மட்டும் செய்வதற்கு பதிலாக, தீவிரமாக இயங்க வேண்டும். கருத்து தெரிவிக்கவும், இடுகையிடவும் மற்றும் பதிவுகளை எழுதுவதும் என ஏதாவது ஒன்றில் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும்.

  தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள். போதுமான தூக்கம் பெறுவது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை பிடிவாதமாக செயல்படுத்துங்கள். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் சமூக ஊடகங்களுடன் ஈடுபடுவதற்கான உங்கள் உந்துதல்களை முதலில் கவனித்துப் பாருங்கள்.

  நீங்கள் குறிப்பாக ஏதேனும் தகவல்களைத் தேடுவதற்கோ அல்லது மற்றவர்களுடன் இணைவதற்கோ சமூக வலைத்தளங்களுக்குச் சென்றால் பரவாயில்லை, அது நேர்மறையான விளைவை ஏற்படுத்தும், ஆனால் வெட்டியாகவோ உங்களுக்கு சலிப்பாக இருப்பதாலோ இணையத்தில் உலா வருவது நல்லதல்ல என்று கோய்ன் கூறினார்.

  பதின்வயதினரின் மன ஆரோக்கியம் மற்றும் அவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் 13 முதல் 20 வயதுக்குட்பட்ட 500 இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். எட்டு வருட காலகட்டத்தில், ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித் தாள்களை நிறைவு செய்தனர்.

  பொதுவாக ஒரு நாளில் சமூக வலைதளங்களில் பங்கேற்பாளர்கள் எவ்வளவு நேரம் செலவிட்டார்கள் என்று கேட்டு சமூக ஊடக பயன்பாடு அளவிடப்பட்டது. மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை அளவிட, பங்கேற்பாளர்கள் மனச்சோர்வு அறிகுறிகள் மற்றும் பதற்ற நிலைகளைக் குறிக்க வெவ்வேறு அளவுகோல்களுடனான கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

  இந்த முடிவுகள் முதலில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அளவில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இரண்டு பகுப்புகளிடையே ஒரு வலுவான தொடர்பு இருக்கிறதா என்று பின்னர் கணிக்கப்பட்டது.

  13 வயதில், இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு சராசரியாக 31-60 நிமிடங்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இருந்தனர். இந்த சராசரி அளவுகள் படிப்படியாக அதிகரித்து, இளம் வயதினர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களில் செலவு செய்கிறார்கள் என்று தெரிந்தது.

  மிக அதிகமாக சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தில் பயன்படுத்துவதுதால் எதிர்காலத்தில் அவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியையும் கணிக்கப்படவில்லை. அதாவது, இளம் பருவத்தினர் சமூக வலைத்தளங்களில் வழக்கமான கால அளவைத் தாண்டி பயன்படுத்தினாலும் ஒரு வருடம் கழித்தும் கூட அவர்களது கவலை அல்லது மனச்சோர்வில் மாற்றங்கள் இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai