ஃபேஸ்புக்வாசிகளே உஷார்!

பாதிக்கப்பட்டவர்கள் முகத்தை மறைத்துக் கொண்டிருக்க, குற்றவாளிகள் சந்தோஷமாக வலம் வரும் மெய்நிகர் உலகு இது.
ஃபேஸ்புக்வாசிகளே உஷார்!

பாதிக்கப்பட்டவர்கள் முகத்தை மறைத்துக் கொண்டிருக்க, குற்றவாளிகள் சந்தோஷமாக வலம் வரும் மெய்நிகர் உலகு இது. ஃபேஸ்புக் பயனாளிகள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் :

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயங்கும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எத்தனையோ விழிப்புணர்வுத் தகவல்களை ஊடகங்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் அவ்வப்போது தந்தாலும், சிலர் அதை தொடர்ந்து அலட்சியம் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

சிலர் 18 மணி நேரத்துக்கு மேலாக அந்த மெய் நிகர் உலகில் உலவி வருகிறார்கள். நேரில் பரிச்சயம் இல்லாத ஒரு அந்நியரை முகநூலில் நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவரது சுயவிவரத்தை ஆழமாக பகுப்பாய்வு செய்யுங்கள். அவர்கள் அளித்திருக்கும் புகைப்படம் மற்றும் சுயவிபரம் உண்மை என்று உடனடியாக நம்ப வேண்டாம். பொய்யான தகவல்கள், புகைப்படங்களைப் பதிவேற்றும் வல்லூறுக் கூட்டம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். 

எனவே துல்லியமாக ஆய்வு செய்யுங்கள், நிஜ வாழ்க்கையில் உள்ள நட்புக்களை மட்டும் சமூக வலைத்தளங்களிலும் ஏற்றுக் கொள்ளுங்கள். தெரிந்த நபர்களாக இருந்தாலும் கூட, ஒரு முறை தொலைபேசியில் அவர்களை அழைத்து அதை அனுப்பியவர்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் வரும் சஜஷன்கள் (suggestions) எல்லாம் தானியங்கி முறையில் உங்கள் பக்கத்தில் வந்து சேரும். உடனே எந்த நட்புக் கோரிக்கையையும் ஏற்க வேண்டாம்.

சிலர் வீட்டு விஷயங்கள், சொந்தப் பிரச்னைகள், க்ளாமர் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்கும் இடமாக சமூக வலைத்தளங்களை மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சங்கடத்தை ஏறிபடுத்துகிறார்கள். இந்தப் பழக்கம் சில ஆபத்துக்களையும் வரவழைத்துத் தந்துவிடும் என்பதை இவர்கள் அறிவதில்லை. 

யாரிடமும் இன்பாக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தேவையின்றி உரையாட வேண்டாம். முக்கியமான படங்களை பதிவேற்ற வேண்டாம்.

டைம்லைனில் க்ரூப் புகைப்படங்களை நீங்கள் பகிரும்போது கவனமாக இருப்பது அல்லது. காரணம் நண்பர்களை டேக் செய்யும்போது, அது உங்களுக்கு மட்டுமில்லாமல் டேக் செய்யப்பட்ட அனைவருக்கும் ஏதாவது பிரச்னைகளை உருவாக்கிவிடலாம்.  ப்ரைவஸி செட்டிங்கில் தேவையான மாற்றங்கள் செய்த பின் அந்த புகைபப்டங்களை பதிவிடுவது நலம்.

வைரஸ் அல்லது ஸ்பேமை பரப்புவதற்கும், சட்டவிரோத செயல்களைச் செய்வதற்கும், தீய நோக்கத்துடனும் சிலர் ஃபேஸ்புக் அக்கெளண்ட் வைத்துள்ளனர்.  அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

நீங்கள் fb-லிருந்து சம்பாதிக்க விரும்பினால், வணிக விஷயங்களுக்கு தனி முகநூல் பக்கத்தை தொடங்குங்கள், உங்கள் பர்சனல் அக்கெளண்டை எப்போதும் தனியாகவே வைத்திருங்கள். உங்கள் சுய விவரங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

முகநூலில் தரவுகளைத் திருடுவது என்பது அடிக்கடி நடக்கும் குற்றச் செயல். எனவே ஃபோன் நம்பர், வங்கிப் பெயர் உள்ளிட்ட எந்த விபரத்தையும் உங்கள் சமூக கணக்குகளில் பதிவேற்ற வேண்டாம்

முகநூலில் ஏமாற்றப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். நீங்க அழகா இருக்கீங்க, இந்த ட்ரெஸ் உங்களுக்கு சூப்பர் என்று ஆரம்பிக்கும் உரையாடல் ஒருகட்டத்தில் உங்களை பொறியில் சிக்க வைத்துவிடும், இவை தந்திரமான வார்த்தை பிரயோகங்கள் என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அழகை மற்றவர்கள், அதிலும் குறிப்பாக அந்நியர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். 

ஆண்கள் மட்டுமல்ல பெண்களைக் கூட நம்பவேண்டாம் என்றுதான் நிரூபித்து வருகிறது இன்றைய காலகட்டம். தெரியாத பெண்களிடம் உங்கள் வீட்டுப் பிரச்னையை முக நூலில் நட்பு என்ற பெயரில் சொல்ல வேண்டாம். உங்களிடம் நல்லதனமாக பழகிவிட்டு சிக்கலில் மாட்டி விடுபவர்கள் இங்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

செல்பிக்கள் உள்ளிட்ட உங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவேற்ற வேண்டாம். இது கண்ணுக்குத் தெரியாத அரக்கர்களுக்கு ஊக்கமளிக்கிறது. நடிகைகள் தொழில்முறைக்காக தங்கள் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களை நகல் எடுத்து களமிறங்கி லைக்குகளுக்கு ஆசைப்பட்டால்,  உங்கள் புகைப்படம் எங்கெல்லாமோ பயணித்து மார்பிங் செய்யப்பட்டு உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அபாயம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

இதையெல்லாம் மீறி ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் உடனே பயந்து சாகாதீர்கள். ஏதோ பெரும் குற்றம் செய்துவிட்டதைப்போல ஒடுங்கிப் போக வேண்டாம். குற்றம் செய்தவர், உங்களை நட்பின் பெயரில் ஏமாற்றியவர் சந்தோஷமாக இருக்க நீங்கள் ஏன் வெந்து சாக வேண்டும். நீங்கள் முதலில் தனியாக இல்லை உங்களுக்கு உதவ சைபர் க்ரைம் பிரிவு உள்ளது என தைரியமாக இருங்கள். சமூக ஊடகங்கள் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை முதலில் வீட்டில் தெரிவித்துவிடுங்கள்.

பெரியதோ சிறியதோ, அது எத்தகைய பிரச்னை என்றாலும் முதலில் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர்கள் திட்டினாலும் சரி அடித்தாலும் சரி தவறு செய்துவிட்டதை ஒப்புக் கொண்டு அவர்களிடம் சரணாகதி அடைந்துவிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு  நல்ல தீர்வை அவர்களால் மட்டுமே பெற்றுத் தர முடியும். உங்கள் பெற்றோர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக பிரச்னையை கேட்க முடியவில்லை எனில், கவலை வேண்டாம், மிக நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்ன நடந்தாலும் சரி இனி நான் சரியாக இருப்பேன் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நமக்காக விதிகளை அமைத்து வலுவாக வாழலாம் என்பதை உறுதியாக நம்புங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com