என்றும் வசீகர இளமை! நடிகர் மோகன்லால் ஜிம் பயிற்சி!

மொழிகளைக் கடந்து தன்னுடைய திறமையால் திரை ரசிகர்களின் மனத்தை வென்றவர் லாலேட்டன்
என்றும் வசீகர இளமை! நடிகர் மோகன்லால் ஜிம் பயிற்சி!

மொழிகளைக் கடந்து தன்னுடைய திறமையால் திரை ரசிகர்களின் மனத்தை வென்றவர் லாலேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் விஸ்வனாதன் நாயர். இவர் மே 21, 1960-ல் கேரளாவின் பத்தனம்தித்தா மாவட்டத்தின் எலந்தூர் எனும் கிராமத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வளர்ந்தவர். மலையாளத்தில் இதுவரை 320 படங்களில் நடித்துள்ள மோகன்லால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 56 வயதான இந்த இளைஞர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், நாடக நடிகர் எனும் பன்முகத் திறமை கொண்டவர். 

1978-ஆம் வருடம் தன்னுடைய 18 வயதில் 'திறநோட்டம்' என்னும் படத்தில் நகைச்சுவைக் காட்சியொன்றில் நடித்து திரைத்துறைக்குள் நுழைந்தார் மோகன்லால். ஆனால் அந்தப் படம் சென்சார் பிரச்னைகளில் சிக்கி வெளிவரவில்லை. அதன்பின் 1980-ல் வெளிவந்த மஞ்சில் விரிஞ்ச பூக்கள் உள்ளிட்ட 25 படங்களில் வில்லனாக நடித்தார். 1983-வெளியான படயோட்டம் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தும் அக்காலகட்டத்தில் அவரை வில்லனாகவே மலையாளத் திரையுலகம் ஏற்றுக் கொண்டது.

1984-ல் இயக்குனர் சசிகுமாரின் இவிடே துடங்குன்னு படத்துக்குப் பின்னர்தான் ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் அவரது வளர்ச்சி நாடறிந்தது. பாலிவுட் திரைப்படங்களான கம்பெனி, ராம் கோபால் வர்மாவின் கி ஆக் மற்றும் டெஸ் திரைப்படங்களில் நடித்தார். 1985-ல் ஒண்ணாம் குன்னில் ஓரடி குன்னில் எனும் திரைப்படத்தில் சிந்தூர மேகம் எனும் பாடலையும் பாடியுள்ள பெருமை லாலுக்கு உண்டு. ராஜாவின்டே மகன் திரைப்படம் எனும் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனும் பெருமையைப் பெற்றார் லால்.

மனைவி சுசித்ராவுடன் மோகன்லால்
மனைவி சுசித்ராவுடன் மோகன்லால்

1986-ல் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. திரைப்படத்திற்காக மோகன்லாலுக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இந்திய அரசின் உயரிய விருதான பத்ஸ்ரீ விருதினை 2001 ஆம் வருடம் பெற்றார் மோகன்லால். இது தவிர ஐந்து முறை கேரள அரசு விருது, எட்டு ஃபிலிம் ஃபேர் விருதுகள் ஆகியவற்றை தனது சிறந்த நடிப்பாற்றலுக்குப் பெற்றுள்ளார். 2009-ல் மோகன்லால் கெளரவ லெப்டினென்ட் கர்னல் ஆக நியமிக்கப்பட்டார். ராணுவத்தின் கிளை என வர்ணிக்கப்படும் டெரிட்டோரியல் ஆர்மியிலும் மோகன்லால் தனது பங்களிப்பை வழங்கினார். கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவுக்கு கிடைத்த இந்தக் கெளரவம் நடிகர் மோகன்லாலுக்குக் கிடைத்தது பெருமை. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே நடிகர் அவர் என்பதும் கூடுதல் சிறப்பு. ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காராரனான மோகன்லால் நடித்து வெளிவந்த குரு எனும் திரைப்படம் 1997-ல்  சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவருடைய பரதம் திரைப்படத்துக்காக இந்திய சினிமாவின் 25 சினிமா ஆளுமைகளில் ஒருவராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால்.

மோகன்லாலுக்கு விளையாட்டுகளிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் ஆர்வம் அதிகம். 1978-ல் குஸ்தி வீரராக வீரகேரள ஜிம்கானாவில் பரிசு பெற்றவர் அவர். 2013-ம் வருடம் கொரியாவை சேர்ந்த டேக்வாண்டோ அமைப்பு மலையாள நடிகர் மோகன்லாலை கவுரவிக்கும் வகையில் பிளாக் பெல்ட் வழங்கியது. மார்ஷியல் ஆர்ட்ஸில் மோகன்லாலை பெரிதும் ஈர்த்தவர்கள் புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சான். டேக்வாண்டோ ஃபிட்னெஸ் விஷயங்களில் அதிகம் உதவுவதில்லை ஆனால் மனத்தை உறுதியாக்க அது உதவும் என்றார் லால்.

மோகன்லாலுக்கு கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் பிடித்தமான விளையாட்டுக்கள். ஜிம் சென்று பயிற்சி செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர். புஷ் அப்ஸ் மற்றும் பிற பயிற்சிகளை விடாப்பிடியாக செய்து வருபவர். அவருடைய பயிற்சியாளருடன் சமூக வலைத்தளங்களில் சில சமயம் புகைப்படங்களை வெளியிட்டு தன் ஜிம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் லால். அவர் உணவு விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர் என்றாலும், ஃபிட்னெஸ் விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். பங்களூருவில் 'தி ஹார்பர் மார்கெட்' எனும் ஸீ ஃபுட் ரெஸ்டாரண்ட் ஒன்று மோகன்லாலுக்கு உண்டு. இதன் கிளை துபாயில் உள்ளது. இந்தக் கடையை தில்லி, ஹைதராபாத், மும்பய் மற்றும் கொச்சியிலும் துவங்க வேண்டும் என்று லாலுக்கு விருப்பம். காரணம் உணவின் மீதானே பிரியம்தான். அது சமைப்பது, சாப்பிடுவது அல்லது பரிமாறுவது என எதுவாக இருந்தாலும் சரி, லாலேட்டனுக்கு அது மனத்துக்கு நெருக்கமான விஷயம். மொத்தத்தில் தான் ஒரு உணவுப் பிரியர் என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கு பெருமையே.

த்ருஷ்யம் திரைப்படத்துக்காக 2014-ம் வருடம் ஆயுர்வேத சிகிச்சை ஒன்றினை மோகன்லால் மேற்கொண்டார். 'லோஹம்' திரைப்படத்துக்காக கடினமாக ஜிம் பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். எந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதற்கேற்றபடி தன்னை முற்றிலும் உருமாற்றிக் கொள்ளும் ஒரு அற்புதக் கலைஞன் மோகன்லால். 

விருதுகளும் அங்கீகாரங்களும் உண்மையான கலைஞர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்துவிடாது. அவர்களது உண்மையான விருது என்பது தொடர்ந்து தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருப்பதுதான். அவ்வகையில் இன்றைய இளம் கதாநாயர்கள் பலருடன் ஆரோக்கியமாகப் போட்டி போட்டுக் கொண்டே மோகன்லாலின் திரைப்பயணம் 37 வருட வெற்றிப் பயணமாக தொடர்கிறது. இந்தியாவின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக எப்போதும் திரையுலகில் நிலைத்திருப்பார் இந்த மலையாள சூப்பர் ஸ்டார் என்பதுதான் அவருக்கு பெருமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com