ரமணர் சொன்ன இரண்டு 'ம்'கள் !
By சுந்தர்ஜி பிரகாஷ் | Published On : 16th January 2017 03:00 PM | Last Updated : 16th January 2017 03:00 PM | அ+அ அ- |

ரிஷிகேஷ் வசிஷ்ட குகையின் ஸ்வாமி சாந்தானந்த பூரியின் "Stories for Meditation" ல் அபூர்வமான பல கதைகளைப் படிக்க வாய்த்தது. அதிலிருந்து இரு கதைகள்.
முதலில் ரமணர் சொன்ன கதை.
ரமண மகரிஷியின் அனுபூதியைப் பேச இந்த ஒரு கதை மட்டுமே போதும் என்று படித்த பின் தோன்றியது. கதை இதுதான்.
***
தியானம் என்றால் என்ன?அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை.
ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.
சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.
சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.
மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்.
அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.
புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.
எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.
‘இரண்டு 'ம்'களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?’ என்றார் மகர்ஷி புன்னகைத்தபடி.
கதை முடிந்தது.
ரமணர் சொன்ன இரண்டு 'ம்'கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது எனவும் எனக்குப் புரிந்தது.
ஆழமாகவும், எளிமையாகவும் செல்லும் தியானத்தின் பரிமாணங்களை சிவ சம்ஹிதையில் "திரிபுரா ரகஸ்யத்தில்" படிக்க முடிந்தது. அது வேறொரு சமயத்தில்.
**
இரண்டாவது.
ஒரு மன்னனின் அரசவையில் விசித்ரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
புகார் அளித்தது ஒரு நாய்.
‘இன்றைக்குப் பக்கத்துத் தெருவில் நான் படுத்திருக்கும் போது, என்னை ஒரு பெருங் கல்லால் ஒரு துறவி அடித்து துன்புறுத்தினார். ரத்தம் எப்படிப் பெருகி ஒடுகிறது பாருங்கள் மன்னா? அவரைத் தண்டித்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும். என்னைத் தாக்கிய துறவி இன்னும் அங்கேதான் இருக்கிறார்’ என்று கண்ணீர் வடித்தது.
மன்னன் உட்பட எல்லோர் மனதையும் அந்த நாயின் கண்ணீர் தொட்டது.
மன்னனின் உத்தரவின் பேரில் துறவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப் பட்டார்.
தனக்குப் போதிய இடமின்றி அந்த நாயே முழு இடத்தையும் ஆக்ரமித்துக் கொண்டதால் சினமுற்று கல்லால் தாக்கியதைத் துறவி ஒப்புக் கொள்ள, ஒரு துறவிக்கு இத்தனை சினம் ஆகாது என்று நினைத்த மன்னன், தன் மந்திரிகளிடம் அவருக்குத் தகுந்த தண்டனை அளிக்க உத்தரவிட்டான்.
மந்திரிகளோ அந்த நாய் விரும்பும் தண்டனையை அந்தத் துறவிக்கு அளிக்கலாம் என்று ஒரே குரலில் சொல்ல நாயின் வசம் வழக்கு திரும்பியது.
‘இங்கிருந்து நூறு மைல் தொலைவில் ஓர் மடாலயம் இருக்கிறது. நிரப்பப்படாதிருக்கிற அதன் தலைமைத் துறவியின் இடத்துக்கு இந்தத் துறவியை நியமியுங்கள்’ என்றது நாய் தன் தீர்ப்பில்.
எல்லோர் முகத்திலும் - எல்லாக் கதைகளிலும் இம்மாதிரியான தருணங்களில் வருவது போலக் - குழப்பம்.
‘அந்தத் தலைமைத் துறவி இறந்து போய் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் அந்த இடம் நிரப்பப்படவில்லை.’
அதற்கும், தண்டனைக்கும் என்ன பொருத்தம் என்ற புதிர் இன்னும் நீடித்தது.
நாய் தொடர்ந்தது.
‘இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, அந்த மடாலயத்தின் தலைமைத் துறவி நான்தான். அதன் தலைமைத் துறவியாய் இருந்து மண், பொன், பெண் என்னும் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்காத ஒருவன் தேடினாலும் கிடைக்க மாட்டான். செய்த பாவங்களுக்கு இப்போது நாயாய்ப் பிறந்து அனுபவிக்கிறேன்’.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...