சர்வதேச யோகா தினம் ஏன் முக்கியம்? 

யோகாவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வு தற்போது மக்களிடையே
சர்வதேச யோகா தினம் ஏன் முக்கியம்? 

யோகாவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அமைதியாய் பரவி வர, அதற்கேற்றார்போல் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச யோகா தினமும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த தினத்தில் ஈஷாவின் பங்களிப்பு எப்படி இருக்கும்…? 

ஆன்மீக செயல்முறையை, உலகிற்கு, குறிப்பாக உலகில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ள மனிதர்களுக்கு அளிப்பதற்கான முயற்சி பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. 8000 ஆண்டுகளுக்கு முன்பே, மன்னர் ஜனகர், அஷ்டவக்ரர் உதவியால் ஞானோதயம் அடைந்தார். கிருஷ்ணரின் வாழ்க்கை நோக்கமே ஆன்மீக செயல்முறைக்கும், அரசியல் செயல்முறைக்கும் இடையே ஒரு பந்தம் ஏற்படுத்துவதாக இருந்தது. மன்னர்களோடு செயல்பட்டது மட்டுமல்லாமல் கிருஷ்ணா வட இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 ஆசிரமங்களையும் நிறுவினார்.
 
யோகா என்பது, உங்கள் நல வாழ்வுக்காக நீங்கள் மேலே பார்ப்பது இல்லை. ஏனென்றால் மேலே பார்க்க ஆரம்பித்தால் உங்கள் அனுபவத்தில் இல்லாத விஷயங்களை கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அனைத்துக்கும் மேலாக, எது மேலே, எது கீழே என்பதே உங்களுக்கு தெரியாது. கடந்த 150 வருடங்களில், மனிதர்களில் பெரும்பாலானோர், மேலே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெளியே பார்த்து செல்வம் சேர்ப்பது, அரண்மனைகள் கட்டுவது என்று இருந்தார்கள். ஆனால் இன்றோ பெரும்பான்மை மனித இனம் மேலே பார்ப்பதற்கு பதில் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறது. மனித நலனுக்காக வெளியே பார்க்க ஆரம்பித்தால் நம் இருப்பின் அடிப்படையை நாம் அழித்து விடுவோம். அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு பல பெயர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் – சுற்றுசூழல் பிரச்சனை, புவி வெப்பமயமாதல், தட்பவெட்ப நிலை மாறுதல் என்று… ஆனால் இவையெல்லாம், மனிதர்கள், நலமான வாழ்வுக்காக வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே குறிப்பிடுகிறது. இதற்கு இறுதியான ஒரே தீர்வு, மனித இனம் உண்மையான நல வாழ்வு அறிய ஒரே வழி, உள்நோக்கித் திரும்புவதுதான். யோகா என்றால் இதுதான். மேலே அல்ல, வெளியே அல்ல, உள்ளே. ஒரே வழி, உள்ளேதான் இருக்கிறது.

பிறர் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய அரசியல், பொருளாதார, கல்வித்துறை தலைவர்களுடன் நாம் சில காலமாக செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். 11 வருடங்களுக்கு முன் ஒரு ஹோல்னெஸ் வகுப்பில் ஒருவர் எழுந்து, “சத்குரு, இதெல்லாம் வெகு சிறப்பாகத்தான் இருக்கிறது, ஆனால் தேசத்துக்கு என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். நான் அதற்கு, “நம்மிடம் 2000 நபர்கள் உள்ள ஒரு பட்டியல் இருக்கிறது. இவர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் போதும், பிறகு அற்புதமான பல விஷயங்கள் நடைபெறுவதைப் பார்ப்பீர்கள்” என்றேன். கடந்த சில வருடங்களில், அந்த 2000 இல் 40 சதவிகிதம் நபர்களைத் தொட்டு விட்டோம் என்று நினைக்கிறேன். குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர்கள் அமைதியாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது தேசங்களின் தலைவர்கள் யோகா பற்றி பேசும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகின் உயர்ந்த அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையிலும் யோகா பற்றி பேசப்படுகிறது. அங்கே நமது பிரதமரின் 2 நிமிட உரை யோகா பற்றியே இருந்தது. அமெரிக்க அதிபருடன் அவருடைய உரையாடலில் 7 நிமிடங்கள் யோகா இடம் பிடித்தது. முன் எப்போதும் இது நடந்ததில்லை. ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை 175 நாடுகள் ஆதரித்தன.

உலகில் தாக்கம் ஏற்படுத்தும் ஒன்றை சர்வதேச யோகா தினத்தில் செய்ய நிச்சயமாக நாம் விரும்புகிறோம். அனைத்து தரப்பு மனிதர்களும் செய்யக்கூடிய எளிமையான யோகா ஒன்றை உலகிற்கு அளிக்க விருப்பம் கொண்டுள்ளோம். மனிதர்களின் உள்ளே ஒரு ஒத்திசைவை, இணக்கத்தை உடனே ஏற்படுத்தும் ஒன்றாக இது இருக்கும். அதில் இருந்து விரிவான யோக பயிற்சிகளை அளிக்கலாம். காலையில் இருந்து மாலை வரை நடைபெறும் பெரிய அளவிலான யோகா வகுப்புகளை நடத்த 100 இடங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இதில் தன்னார்வத் தொண்டு செய்யலாம். அல்லது வேறு இடத்தில் நீங்களே யோகா வகுப்பு நடத்தலாம். நீங்களே செய்து கொள்வதாக இருந்தால் எளிமையான ஒரு வீடியோ கொடுப்போம். அன்றைய தினத்தில் 10 பேருக்கு நீங்கள் எளிமையான யோகாவை அறிமுகப்படுத்தலாம் – ஒன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நிமிட யோகப் பயிற்சிகள் ஒரு நுட்பமான மாற்றத்தை நிகழ்த்தும்.

சர்வதேச யோகா தினம் என்றால் உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு யோகா செய்ய வேண்டும். நாம் இதை நிகழச் செய்வோம்!

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com