சுடச்சுட

  
  o-KID-FEVER-facebook

  மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

  சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளி ஊராட்சி அம்மாசியூரில் உள்ள பள்ளி மாணவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் பரவி உள்ளது. இதில் 5 மாணவர்கள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதனிடையே, இருப்பாளியூர் ஊராட்சி அம்மாசியூரில் நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருடன் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக ஆட்சியர் வா.சம்பத் கூறியது:

  பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சேலம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
   நோய்களை வரும்முன் காப்பதே சிறந்தது என்பதால் மாவட்டம் முழுவதும், 60 நடமாடும் மருத்துவக் குழுக்கள் பணிபுரிந்து வருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு கசாயம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 
   மாநகராட்சியில்...: குறிப்பாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு என சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 150 பணியாளர்களும், நகராட்சிப் பகுதிகளில் 200 பணியாளர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 660 பணியாளர்களும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 310 பணியாளர்களும் என மொத்தம் 1320 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை மேற்பார்வை செய்ய 200 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

  காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று தேவையான முழு பரிசோதனையும் செய்து கொள்ளும் வகையில் பரிசோதனை கருவிகள் மற்றும் போதிய அளவில் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. 

  இதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்துக் கடைகளில், மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதோ, காய்ச்சல் கண்டவுடன் ஊசி போட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். 

  பொதுமக்கள் தங்களை சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பின்புறம் நீர்தேங்காததை உறுதி செய்தும், சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்வதுடன், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து போதிய ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai