சுடச்சுட

  
  smoking_kills_4_by_wilhelmine

  புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் வயது வித்தியாசம் கிடையாது. சிகரெட், பான்பராக், ஹான்ஸ், பொடி, புகையிலையை நேரடியாகப் போடுவது என இந்தக் கொடிய விஷத்தை தினமும் பயன்படுத்துபவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. விளம்பரங்களில் பார்த்தும், அக்கம் பக்கத்தில் புகையிலைப் பழக்கத்தால் புற்றுநோய் வந்தவர்களின் நிலையைப் பார்த்தும் தனக்கு எதுவும் நடக்காது என நம்புவர்கள் ஏராளம். சிறுகச் சிறுகக் கொல்லும் இந்த புகை அரக்கனை எப்படி புத்தியிலிருந்து விலக்குவது? ஹோமியோபதி சிகிச்சை முறையில் இதற்கொரு தீர்வு உள்ளது என்று நம்பிக்கை அளிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ஏ கே.குப்தா.

  'புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் குணப்படுத்த ஹோமியோபதியில் ஒரு நல்ல வழிமுறை இருக்கிறது. ஹோமியோபதி மருந்துகள் மற்றும் கவுன்சிலிங் இரண்டையும் இணைத்து புகைப் பழக்கத்திலிருந்து ஒருவரை மீட்கலாம். திடீரென்று புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் ஏற்படும் பதற்றம், நரம்புத் தளர்ச்சி, சோர்வு, எரிச்சல், வயிற்றுப் பிரச்னைகள், நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் யாவற்றுக்கும் ஹோமியோபதி சிகிச்சையில் தீர்வு கிடைக்கும்.  இதில் சில அறிகுறிகள் அல்லது மொத்த அறிகுறிகள் இருந்தாலும் தொடர் சிகிச்சை மூலம் புகையிலை பழக்கத்திலிருந்து முற்றிலும் குணப்படுத்திவிட முடியும்.' என்றார் டாக்டர் குப்தா.

  'நோயாளியின் முழுமையான ஒத்துழைப்பு இல்லையெனில் எத்தகைய நவீன சிகிச்சையிலும் முறையும் பலன் அளிக்காது. ஹோமியோபதியில் சில மருந்துகள் மூலம் புகையிலையை அறவே வெறுக்க வைக்க முடியும். எளிமையாகப் பின்பற்றக் கூடிய செயல்முறைகள் மூலம் இதை சாத்தியப்படுத்தமுடியும்.  பழக்கத்திலிருந்து மீள நினைக்கும் நபர்கள் பதற்றம் அடைவார்கள், ஒரே ஒரு இழுப்பு இழுக்க வேண்டும் என்று நிகோடினுக்கு அடிமையானவர்கள் துடிப்பார்கள். உடனடியாக எந்த ஒரு பழக்கத்திலிருந்தும் வெளிவந்துவிட முடியாது. இக்கொடிய பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று முடிவு செய்தபின், நிறைய சிகரெட் பாக்கெட்டுக்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சிகரெட்டையும் முடித்துவிட்டு மீதித்துண்டை தூர எறியாமல் ஒரு கண்ணாடி ஜாடியில் சேகரித்து வைக்கவும். வார முடிவில் அல்லது மாத முடிவில் நீங்கள் புகைத்த சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.இத்தனை சிகரெட்டா ஊதித் தள்ளியுள்ளோம் என்று உள்ளூர அச்சப்படுவீர்கள். அதன் பின் சிகரெட் பழக்கத்தை விட்டுவிட முடிவு செய்பவர்களுக்கு இலவச ஆலோசனை முகாம் நடத்துகிறோம். உறுதியான மனத்துடன் அதில் கலந்துகொண்டு எந்தவிதமான புகையிலைப் பழக்கம் அதாவது சிகரெட், பொடி, புகையிலையை நேரடியாக உட்கொள்வது போன்ற பழக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். நோயாளிகளை அன்புடன் கவனிப்பதுடன் இப்பழக்கத்திலிருந்து விடுபட அவர்களை உற்சாகப்படுத்துவதும் மிகவும் அவசியம். வெறும் மாத்திரை மருந்துகள் மட்டும் பயன் தராது, சிகிச்சையுடன் தகுந்த ஆலோசனைகள் அவர்களுக்குத் தேவை’ என்றார் நேரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை சேர்ந்த டாக்டர் மோஹித் மாதூர். 

  சிகிச்சை வந்துள்ள நபர் முதன்முதலில் எப்படிப் புகையிலைப் பழக்கத்தை ஆரம்பித்தார் என்பதில் தொடங்கி எப்படி அதற்கு அடிமையானார் என்றவரையில் அவரின் தற்போதைய நிலை வரை அலசி ஆராயப்படும். அவரவர் உடல் நலத்திற்கேற்ற வகையிலும், பழக்கத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மாறுபட்ட சிகிச்சை முறைகள் வேறுபடும், விழிப்புணர்வு ஏற்படுத்த வரைபடங்கள், காட்சிப்படங்கள் மூலம் அபாயங்களை அறிவுறுத்தி யோசிக்க வைக்கவும் இச்சிகிச்சை முறை பயனளிக்கிறது. புகையிலைப் பழக்கத்தினால் இளைஞர்களுக்கு ஏற்படும் ஆண்மைக்குறைவு, இளம் வயதிலேயே வயோதிகத் தன்மை போன்ற பிரச்னைகளை எடுத்துக் கூறி புகைப்பதன் பின்விளைவுகள் பற்றி அச்சுறுத்துவதன் மூலமும் நோயாளிகள் தெளிவு பெறுகிறார்கள். இந்திய மருத்துவக் குழு (IMA) புகைப் பழக்கத்திற்கு எதிராகச் சமீபத்தில் காட்சி ஊடகங்களில் சில எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai