சுடச்சுட

  

  ஆணுறை தெரியும், பெண்ணுறை அறிவீர்களா?

  By மாலதி சந்திரசேகரன்  |   Published on : 13th June 2018 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  couple_2


  ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், திருமணம் என்கிற பந்தம் முடிந்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் அடுத்த நல்ல சமாச்சாரத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில், இளவட்டங்கள், பெரும்பாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடத்தான் விரும்புகிறார்கள். இன்னும் சில வருடங்கள் ஜாலியாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. 

  பிள்ளைப் பேற்றினைத் தள்ளிப் போட புதுமணத் தம்பதியினர் பல கருத்தடை முறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதில் ஒரு வகை கர்ப்பத்தடை மாத்திரைகள். சில பெண்கள்,  மருத்துவரின் அறிவுரையோடு மாத்திரையை விழுங்குகிறார்கள். ஆனால், பிள்ளை  பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, இத்தனை நாட்கள் சாப்பிட்ட மாத்திரைகள் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுமோ? அதனால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்குமோ? என்கிற பயம் தொற்றிக் கொண்டு விடுகிறது. அப்போது மருத்துவர் எவ்வளவு தேற்றினாலும் அத்தம்பதியினர் திருப்தி அடைவது இல்லை.

  அதனால் கர்ப்பத்தைத் தள்ளிப் போட  ஆரோக்கியத்தைக் கெடுக்காத வண்ணம் ஆண்கள், உடலுறவின் போது, ஆணுறையை அணிந்து கொள்கிறார்கள். இதன் மூலம், முழு அளவு திருப்தி உண்டாவதில்லை என்று பல ஆண்கள்  கூறி வந்தாலும், பெண், கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படுகிறது. அதிலும் சில சமயங்களில், கவனக் குறைவால், எதிர்பார்க்கும் பலன் அதாவது கர்ப்பத்தடை சரியாக அமைவதில்லை என்கிற குறைபாடும் உண்டாகிறது. அதனால், ஆண்கள் ஆணுறையைத் தவிர்க்க எண்ணம் கொள்கிறார்கள்.

  ஆண்களின் இந்தப் பிரச்னையை போக்க, பெண்ணுறைகள் சந்தைக்கு வந்து விட்டன. அதாவது, ஆணுக்குப்  பதில் பெண்ணானவள் தன்னுடைய உறுப்பில் உறையைப் பயன்படுத்துவதுதான். மருத்துவக் கண்ணோட்டத்தில், ஆணுறையை விட பெண்ணுறை கூடுதல் பலனை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தடைச் சாதனம், பால்வினை நோய்கள்  பரவாமல் பாதுகாப்பதுடன், விந்தணுக்கள், கருமுட்டையை அடைந்து கருவுறாமல் காக்கிறது.

  பாலியூரத்தீன் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக்கால் பெண்ணுறைகள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றை பேக்கிங்கிலிருந்து வெளியே எடுக்கும் போது கூரான பொருட்களைக் கொண்டு வெளியே எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், பெண்ணுறை சேதம் அடைந்துவிடும். பின்பு எதிர்பார்க்கும் பலனைத் தராது. பொறுமையைக் கையாள வேண்டும்.

  கடையிலிருந்து வாங்கும் போது, பொருள் காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்க வேண்டும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் பொழுது, 95% பலன் தருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்தக் கருத்தடை சாதனத்தினை மருத்துவரின் ஆலோசனை அல்லது பரிந்துரை பெறாமலே பயன் படுத்தலாம் என்பதுதான் ப்ளஸ் பாயிண்ட். மேலும் தேவையான சமயத்தில் மட்டும் உபயோகப் படுத்தினால் போதும். ஆணுறை போல் ஆரம்ப நிலையிலிருந்தே உபயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.

  இதை சரியான முறையில் எப்படி  பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம். இந்த சாதனம் ஒரு சிறிய குழல் போன்ற பை போன்று  தோற்றம் அளிக்கும். இரு முனைகளிலும், நெகிழ்தலான வளையங்கள் காணப்படும். மூடிய முனையை உடல் உறுப்புக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். திறந்த முனை உறுப்பின் வெளி பாகத்தை முழுவதுமாக கவர் செய்து விடும். ஆண்  பெண்ணின் தேவை பூர்த்தி ஆனவுடன், வெளிப்புறம் இருக்கும் வளையத்தை சிறிது முறுக்கினாற்போல் வெளியே எடுக்க வேண்டும்.

  அழகைப் பராமரிக்கவோ அல்லது கர்ப்பத்தைத் தள்ளிப் போடவோ தெரியாது. அனேக புதுமணத் தம்பதிகள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் எதனாலோ புரியவில்லை. அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் போது அந்த சௌபாக்கியம் பலருக்கு அமைவதில்லை. பிறகு ஜோசியரைப் பார்ப்பதும் கோயில் கோயிலாக வேண்டுதலைச் செலுத்தியும் வருகிறார்கள். மனச் சுமை, பண விரயம், நேர விரயம் என பலதும் உண்டாகிறது. 

  உடலில் உண்டான சில குறைபாடுகளால் கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகலாம். ஆனால் வலிய நாமே வம்பினை விலைக்கு வாங்குவானேன்? எது எது காலா காலத்தில் நடக்க வேண்டுமோ அதை இயற்கையின் வழியிலேயே விட்டுவிடுவதுதான் நல்லது. பெண்ணுறையைப் பற்றி கூறிவிட்டு கூடவே உபதேசமா? என்று எண்ண வேண்டாம். பக்க விளைவுகள் இல்லாமல் பெண்கள் பாதுகாப்பான முறைகளை மேற்கொள்ளவே இந்தக் கட்டுரை. ஆரோக்கியம் பேணுங்கள். ஆனந்த  வாழ்வினை அனுபவியுங்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai