சுடச்சுட

  

  மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது ராணுவ தளவாட ஒப்பந்தம் கையெழுத்து?

  By kirthika  |   Published on : 26th May 2016 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இருநாடுகளிடையே ராணுவ தளவாட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
   பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
   முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஆஷ்டன் காட்டர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
   இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் நெருங்கிய ராணுவக் கூட்டாளியாக இந்தியா மாறும். இருநாடுகளும் பரஸ்பரம் மற்றவரது ராணுவ நிலைகளையும், தளவாடங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
   ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்தால் இந்தியா அமெரிக்க ராணுவத்தின் ஒருபகுதியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்தியாவின் சுயாட்சி அதிகாரம் பாதிக்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டை மோசமான பாதையில் அழைத்துச் செல்கிறது என்று அந்த இரு கட்சிகளும் குற்றம்சாட்டியிருந்தன.
   இந்நிலையில், வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற அமெரிக்க செனட் அவையின் ராணுவ பிரிவுக் கூட்டத்தில் பேசிய தெற்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய் கூறியதாவது:
   ராணுவ தளவாட ஒப்பந்தம் முதல் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை இந்தியாவுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையின்போது ராணுவ தளவாட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா-ஈரான் உறவை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.
   இருநாள் பயணமாக ஜூன் 7-ஆம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai