ஆறுமுகனேரி,டிச.4: கர்நாடக அரசியலில் எந்த குழப்பமும் இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக அரசியலில் எந்த குழப்பமும் இல்லை. மக்கள் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக தலைவர்கள் என் மீது முழு நம்பிக்கை வைத்து, ஆசியும் வழங்கி உள்ளனர்.
அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியே எந்த பிரச்னையும் இன்றி தொடரும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்.
கர்நாடக அரசு சார்பில் திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ரூ. 1.25 கோடி செலவில் விருந்தினர் இல்லம் கட்ட 10 நாள்களில் நிதி வழங்கப்படும்.
கர்நாடகத்தில் பாக்கியலட்சுமி திட்டத்தினால் 11.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 18 வயது வரை கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது.
இரண்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் ஒன்றரை கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் பற்றி பரிசீலிக்கப்படும்.
கர்நாடகம், தமிழகத்தில் நல்ல மழை பெய்து பயிர் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கவும் கர்நாடக, தமிழ்நாட்டு மக்களுக்கு உழைப்பதற்கு சக்தி பெறுவதற்கும் சுவாமி தரிசனம் செய்ய வந்தேன் என்றார் அவர்.