திருவனந்தபுரம், டிச. 4: கேரளத்துக்கு பாமாயில் இறக்குமதி செய்ததில் மாநில அரசின் உத்தரவை மட்டுமே பின்பற்றியதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் கூறியிருந்தார். ஆனால், பாமாயில் இறக்குமதி செய்ய அதிக முனைப்பு காட்டியதும், இறக்குமதிக்கு முதலில் பரிந்துரைத்ததும் தாமஸ் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
÷1991-ம் ஆண்டு கேரள மாநில உணவு, சிவில் சப்ளை துறை செயலராக தாமஸ் பணியில் இருந்தார். அப்போது சிங்கப்பூர் நிறுவனத்தில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கேரள அமைச்சரவை நவம்பர் 27-ம் தேதி அனுமதி அளித்துள்ளது.
÷ஆனால் அதற்கு முன்னதாக 1991 நவம்பர் 18-ம் தேதியே சிங்கப்பூர் நிறுவனம் இறக்குமதி தொடர்பான விவரம் அடங்கிய ஆவணத்தை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த நிறுவனத்திடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய தாமஸ் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் தாமஸின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
÷முன்னதாக, 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நடந்ததாகக் கருதப்படும் ஊழல் பற்றி விசாரிக்கும்போது தலைமை (ஊழல் தடுப்பு) கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் இருப்பது சரிதானா என்று மத்திய அரசிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ÷ஏனெனில் 2 ஜி அலைக்கற்றை விற்பனை முடிவின்போதும் மத்திய அரசில் அந்தத் துறையில் செயலராக இருந்தவரே பி.ஜே. தாமஸ்தான்.
÷கேரள மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்டவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் அவர் பதவியேற்றபோதே எதிர்ப்புத் தெரிவித்தன.
÷ஆனால் இந்த பாமாயில் ஊழல் வழக்கு குறித்து தெரிந்துதான் மத்திய அரசு என்னை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது, எனவே நான் பதவி விலகத் தேவையில்லை என்று தாமஸ் கூறியிருந்தார். மேலும் கேரளத்தில் பாமாயில் இறக்குமதியில் நடைபெற்ற ஊழலில் தனக்கு தொடர்பு இல்லை என்று சில ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.