புது தில்லி, டிச.11: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கரை சோதனையிட்டதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து மத்திய அரசு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதர துணைத் தூதர் டோனால்டு லுவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சனிக்கிழமை அழைத்து அமெரிக்க அதிகாரிகளின் செயலுக்காக கண்டனம் தெரிவித்தது.
அப்போது "ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் வெளிநாட்டுத் தூதர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு இதுபோன்ற சோதனைகளில் இருந்து கண்டிப்பாக விலக்கு அளித்திருக்க வேண்டும். இந்தியாவில் வெளிநாட்டு தூதர்கள் இதுபோன்று நடத்தப்படுவதில்லை' என்று இந்திய அதிகாரிகள், அமெரிக்க துணைத் தூதரிடம் தெரிவித்தனர்.
"வெளிநாட்டு தூதர்கள் விஷயத்தில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது' என்று துணைத் தூதர் இதற்கு பதில் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 4-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்துக்கு மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார்.
அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகாரிகள், கைகளால் தடவி சோதனையிட்டனர். இதன் பின்னரே அவரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது. மீரா குமார் சேலை அணிந்து சென்றதால் அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர் என்று முதலில் விளக்கம் தரப்பட்டது.
இதுபோன்ற சோதனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கண்டித்தார்.
பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் இந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.